ரஜினியின் உடல்நிலை குறித்த வதந்திக்கு, அவரின் குடும்பத்தினர் விளக்கம்

ரஜினியின் உடல்நிலை குறித்து பலவதந்திகள் இணையத்தில் இன்று காலை முதல் பரவி வருகின்றன. இதுகுறித்து ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்திற்கான வேலைகள் முடிந்ததும், அமெரிக்காவிற்கு ஓய்விற்காக சென்றார் ரஜினி. இதனால் கபாலி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ளமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓய்விற்காக செல்லவில்லை, உடல்நிலை சரியில்லாமல் தான் சென்றிருக்கிறார் என்று பல செய்திகள் பரவ ஆரம்பித்தன. 2.0 படத்தின் மேக் அப் ஒன்றிற்காக டெஸ்ட் எடுப்பதற்காக மருத்துவமனை சென்றதாகவும் செய்தி வந்தது.

தவிர, அமெரிக்காவில் தந்தையுடன் சுற்றி வருகிறேன் என்று ஜூன் 10ம் தேதி ட்விட்டரில் புகைப்படத்துடன் கூடிய ட்விட் ஒன்றை  தட்டினார் ஐஸ்வர்யா தனுஷ். ஆனால் அந்தப் புகைப்படத்தில் இருப்பது ரஜினி இல்லையென்றும் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இன்று காலையிலிருந்தே (ஜூன் 16) பல வதந்திகள் ரஜினியின் உடல்நிலை குறித்து சுற்றிவருகின்றன.

இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர் கூறும்போது, “ அவர் நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்பவேண்டாம். இந்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவார்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.  மேலும் “உண்மையிலேயே அமெரிக்காவில் ரஜினி, கபாலி படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறார்” என்றும் கூறினர்.

மேலும் ரஜினியின் ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர், “தலைவர் ரஜினி சார் மிகவும் நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்பவேண்டாம்” என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தவிர, ரஜினியின் செய்தித்தொடர்பாளர் தன்னுடைய ட்விட்டரில், “ ரஜினியின் ட்விட்டரை பின் தொடருங்கள், இதுகுறித்த விளக்கத்தை அவரே அளிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நடுவே, ரஜினி ரசிகர்கள் தவறான செய்தியை வெளியிட்ட இணையதளத்திற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!