'பெண்களின் கஷ்டம் இப்போது புரிகிறது' - ரெமோ விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

 

 

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடிக்கும் ரெமோ படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ ரிலீஸ் விழா மற்றும் 24AM Studio தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவும் இணைந்து பிரம்மாண்டமாக நடந்தது. தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ அறிமுக விழா என்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை எனலாம். தேர்ந்த நடனக் கலைஞர்கள் நடனத்திற்கு இடையில் கண்களைக் கவரும் LED திரைகளில் ஒளி அமைப்புகளும் இணைந்து என வித்யாசமாகவே நடந்தது. 

விழாவில் இயக்குநர் ஷங்கர் மோஷன் போஸ்டரை வெளியிட்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மோகன் ராஜா, பொன்ராம், ரவிகுமார், விக்னேஷ் சிவன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பிசிஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை சன் டிவி விஜே அஞ்சனா தொகுத்து வழங்கினார். 

எங்கள் வீட்டில் எப்போதும் போட்டிதான்

மோகன் ராஜா பேசுகையில் எங்கள் வீட்டில் எப்போதும் ஒரு போட்டி இருக்கும், ஒரே வீட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இருப்போம். ஒருவருக்குள் ஒருவர் மறைமுக போட்டி இருந்துகொண்டே இருக்கும். இயக்குநரைப் பாராட்டி தயாரிப்பாளரை விட்டால் அப்பா கோபப்படுவார். இயக்குநரை கேப்டன் ஆஃப் தி ஷிப் என ஒரு நிகழ்ச்சியில் மேடையில் அழைத்தனர். தயாரிப்பாளைரை “ஓனர் ஆஃப் தி ஷிப்” எனக் கூறுமாறு சொல்வார் அப்பா.  அப்படி தான் நான் 24AM Studio தயாரிப்பாளர் ராஜாவை நான் பார்க்கிறேன். தயாரிப்பாளர் என்றால் அவ்வளவு முக்கியம் ஒரு படத்துக்கு.  தயாரிப்பாளர் மேலிருந்த அக்கறை எங்கள் வீட்டிலேயே இருப்பதால் எனக்கும் அந்தப் பொறுப்பு தெரியும்.

நான் ஷங்கர் சாருக்கு உதவியாளராக விரும்பினேன் 

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேசும்போது, நான் ஷங்கர் சார் கிட்ட வேலை செய்யணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் அவரோட அசிஸ்டெண்ட் அட்லி சார் கிட்ட வேலை செய்தேன். அந்த அளவுக்கு நான் அவருக்கு ரசிகன். உண்மையச் சொன்னால் முதல் படமே இப்படி இவ்வளவு பெரிய மேடையில் நிற்பேன் என எதிர்பார்க்கவில்லை என்றவர் என் கால்கள் நடுங்கின்றன என நெகிழ்ந்து, படத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்தும் தயாரிப்பாளர் ராஜா குறித்தும் புகழ்ந்தார். 

பாண்டே பேசுகையில், அரசியல் வாதிகளை மட்டுமே பார்த்துப்பழகிய எங்களுக்கு சினிமா கொஞ்சம் புதிது   என அவர் பாணியிலே பேசியவர் படத்தின் பிரம்மாண்ட டெக்னீஷியன்கள் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி என அனைவருக்கும் வாழ்த்துகளையும் கூறியவர். சிவகார்த்திகேயன் என்னுடனே நண்பனாக ஒரே துறையில் இருந்து ,இப்போது நம்ப முடியாத வளர்ச்சியை தொட்டிருக்கிறார். இதை எனது வெற்றியாகப் பார்க்கிறேன் எனக் கூறி அமர்ந்தார். 

 2.ஓ பட விழாவுக்கு ஐடியா கிடைத்திருக்கிறது, 

அடுத்து பேசிய ஷங்கர், ‘சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகிறேன். மேலும் படத்தையும் பார்த்தேன். உண்மையில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவா. இந்தப் படத்துக்கு இன்னொரு ஸ்பெஷல் கீர்த்தி சுரேஷ். இயல்பான நடிகை’ என பாராட்டியவர் விழாவின் பிரம்மாண்ட அமைப்புக் குறித்து சிலாகித்தார். “ எனது 2.ஓ படத்தின் விழாவை எப்படிச் செய்ய வேண்டும் என எனக்கு ஐடியா கிடைத்துள்ளது” எனவும் கூறினார். தொடர்ந்து மோஷன் போஸ்டரை வெளியிட்டார். 

 பெண்கள் உண்மையில் பாவம்!

 அடுத்து பேசினார் சிவகார்த்திகேயன்; ‘நான் இந்தக் கதையை ஒரு நான்கு முறையேனும் கேட்டிருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு சந்தேகம். நமக்கு பெண் வேடம் சரியாக இருக்குமா, இல்லை வேண்டாமா என பல கேள்விகள். கடைசியில் ஒருமனதாக சரி என்றேன். ஆனால் 10 கிலோ வரை உடலை இறக்கி, பின்னர் புருவங்களை திருத்தி, உடலில் வேக்ஸிங் என உண்மையில் பெண்களின் கஷ்டத்தை அப்போதுதான் உணர்ந்தேன். எப்போதும் பெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பேன். இப்போது  அவர்களின் கஷ்டமும் புரிகிறது. ஆனால் எனக்கு மேக்கப் வேலைகள் தான் மிகவும் கடினமாக இருந்தது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பில் அமர வேண்டும், அடுத்து ஆறு மணிக்கு ஷூட், பின்னர் மீண்டும் ஒன்றரை மணிநேரம் மேக்கப்பை கலைக்க மட்டும் ஆகும், என் மனைவிக்கு உண்மையில் நான் நன்றி சொல்லக் கடமை பட்டிருக்கிறேன். இந்த பட ஷூட்டின் நடைபெற்றபோது என்னால் அவரைப் பார்க்கக் கூட முடியாத நிலை. புருவம் ட்ரிம் செய்து, வேக்சிங் செய்து என என்னை எனக்கே கொஞ்சம் பிடிக்காத நிலை. அப்படியெல்லாம் கஷ்டப்பட்ட படம். கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும். இது ஒரு க்யூட்டான படம். அவ்வளவு தான் இப்போதைக்கு சொல்ல முடியும், என்னையெல்லாம் பி.சி.ஸ்ரீராம் ஒரு புகைப்படம் எடுத்தாலே பெரிய விஷயம். அவர் என்னை வைத்து படமே எடுப்பதையெல்லாம் நினைத்தால்...  உண்மையில் வார்த்தைகளே இல்லை சொல்வதற்கு. கீர்த்தி சுரேஷுக்கு நன்றி. நல்ல நடிகை’ என்றவர்  தயாரிப்பு நிறுவனம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘24AM Studio எனது தயாரிப்பு நிறுவனம் என பலரும் செய்திகள் வெளியிடுள்ளனர். கண்டிப்பாக அது எனது தயாரிப்பு நிறுவனம் இல்லை. என் நண்பர் தான்’ என்றார்.  விழாவில் பங்கேற்ற அனைவருக்கும்  நன்றி கூறி விடை பெற்றார்.

24AM Studio தயாரிப்பான அடுத்த படம் சிவகார்த்தியேகன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில் ஆகியோர்  நடிப்பில் உருவாகி வருவதை விழாவில் பகிர்ந்து கொண்டார்கள். அதிலும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கலாம்!

 

ரெமோ - Motion Poster

-ஷாலினி நியூட்டன்-

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!