குமுதவல்லி, கலாபி, 2,800 இருக்கைகள்! - கபாலியின் 16 அப்டேட்ஸ் #Kabali | 16 Interesting latest updates about Superstar Rajinikanth's Kabali !

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (04/07/2016)

கடைசி தொடர்பு:15:20 (04/07/2016)

குமுதவல்லி, கலாபி, 2,800 இருக்கைகள்! - கபாலியின் 16 அப்டேட்ஸ் #Kabali

பாலி பற்றி எந்த செய்தியானாலும், இன்றைய தேதிக்கு ‘அது எனக்குத் தெரியுமே’ என்று சொல்லும் நிலைதான். அத்தனை தகவல்கள் எல்லார் மொபைலிலும் வந்து விழுகின்றன.

இங்கே சில விஷயங்களின் தொகுப்பு...

தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமல்லாது மலாய், தாய், மாண்டரின் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது கபாலி. இதில் மலாய்க்கு சிறப்பு அந்தஸ்து உண்டு. காரணம், மலாயில் மொழிமாற்றம் செய்யப்படும் முதல் இந்தியப்படம் இது.

படப்பெயர் ‘கபாலி’ என்று அறிவிக்கப்பட்டபோது, ‘வாவ்.. ரஞ்சித்துடா’ என்று கொண்டாடினார்கள் நெட்டிசன்ஸ். வழக்கமாய் அடியாள், வில்லன் சாய்ஸ் பெயராய் இருக்கிற 'கபாலி'தான் ரஜினி பெயர் என்றதும், அந்தப் பெயர் இந்திய அளவில் டிரெண்டடித்தது. Kabali ட்ரெண்டடித்ததெல்லாம் மேட்டரில்லை. யாரோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக, Kalabi  (கலாபி) என்றடித்ததும்கூட ட்ரெண்ட் ஆனதும் ரஜினி மேஜிக்!

டீசர் வெளியானதும் இரண்டு வார்த்தைகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. ‘மகிழ்ச்சி’. தமிழர்களுக்கெல்லாம் அறிந்த, தெரிந்த இந்த வார்த்தை ரஞ்சித்தின் டிரேட் மார்க் வார்த்தை. ட்விட்டரில் எப்போதும் மகிழ்ச்சி என்பதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார். மே 1ல் டீசரில் ரஜினி இந்த வார்த்தையைச் சொன்னதும் அதன் லெவல் எகிறியது. அடுத்தது ‘நெருப்புடா!’. ‘Pls handle the project Carefully. The client is a #neruppuda type' என்று ஐடி இளைஞன் காட்டிய டீம் லீடரின் வாட்ஸ் அப் மெசேஜ் முதல்  ‘அன்னைக்கு சிகரெட்டை அணைக்காம கீழ போட்டுட்டேன். பக்கத்துல நிக்கற ஆள் ‘நெருப்புடா’ங்கறான், டீசர்ல் வந்த டோன்ல. ‘டா’ங்கறானேன்னு கோவம் வரல. சிரிச்சுட்டே அணைச்சுட்டேன்’ என்று டீக்கடையில் யாரோ பேசிக் கொள்வது வரை இந்த வார்த்தையின் டெம்போ எகிறிக்கொண்டே இருக்கிறது.

ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே அந்தப் படத்தின் வசனங்கள், வார்த்தைகள் காப்பியடிக்கப்பட்டது கபாலிக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் ’நான் - கடவுள்’ ராஜேந்திரனின் பெரும்பாலான வசனங்கள் கபாலியை இமிடேட் செய்தது. கபாலி டீசருக்குப் பின் வந்த சில படங்களின் டீசர்களிலும் ‘மகிழ்ச்சி’அதே ஸ்டைலில் சொல்லப்பட்டது.

பெங்களூரிலிருந்து சென்னை வந்து கபாலி முதல் நாள் முதல் ஷோ பார்க்க,  ஏர் ஏசியா, பெங்களூரிலிருந்து தனி விமான சேவை ஏற்பாடு செய்திருக்கிறது. போக, வர சினிமா டிக்கெட் என்று பலதும் அடக்கம் அதில். ‘அதான் பெங்களூர்லயே ரிலீஸ் ஆகுதேய்யா.. இதெல்லாம் ஓவரு’ என்றால், ‘சென்னை ரசிர்கர்கள்கூட பார்க்கணும்’ என்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் அங்கயும் இருக்காங்களே சாமி?

பல மாதங்களுக்கு முன்னரே 'கபாலி' பட ஷூட்டில் இருந்து, பாடலின் சில நொடிகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு லீக் ஆனது.  இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன், அடிப்படையில் தேர்ந்த சவுண்ட் எஞ்சினியர் என்பதால் லீக் ஆன ட்ராக்கைக் கேட்டு அதன் பாஸ், ட்ரபுள், பீட் எல்லாவற்றையும் கணக்கிட்டு, மொபைலில் ரெகார்ட் செய்த ஆசாமி, எந்தப் பக்கத்து ஸ்பீக்கரில், தோராயமாக எத்தனை அடிகள் தூரத்தில் இதை ரெக்கார்ட் செய்திருக்கிறார் என்பதைக் கணக்கிட்டுச் சொல்ல, கண்டுபிடித்து ‘ஆர்வக்கோளாறைக்  குறை சாமி’ என்பதோடு விட்டுவிட்டார்கள். ஆனால் ஆடியோ ரிலீஸ் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பு மீண்டும் சில நொடிகள் லீக் ஆகிவிட, ‘போதுமடா சாமி’ என்று அடுத்தநாளே ஆடியோ ரிலீஸ் செய்துவிட்டார்கள்.

‘லீக் ஆனதால அவசர அவசரமா சௌந்தர்யா ரஜினிகாந்தை வைத்து ஆடியோ ரிலீஸ் செஞ்சுட்டாங்க’ என்பதற்கு ரஜினி தரப்பில் மறுப்பு சொல்லப்படுகிறது. ‘ஏற்கனவே ரொம்ப ஹைப். இதுல ஆடியோ ஃபங்ஷன்லாம் வெச்சா இன்னும் ஜாஸ்தியாகும்.. அடக்கி வாசிப்போமே..’ என்று ரஜினியும் ரஞ்சித்தும் கூடிப்பேசித்தான் இந்த முடிவெடுத்தார்களாம்.

1995 ல் பாட்ஷா படத்தின்போது ஆட்டோவில் விளம்பரம். 2007ல் சிவாஜி படத்தின்போது டபுள் டக்கர் பஸ்ஸில் விளம்பரம் என்று இருந்த ரஜினி மேனியா ஜெட் வேகமெடுத்து, 2016ல் கபாலிக்கு விமானத்திலேயே விளம்பரம் என்பதில் குஷிக்குத்தாட்டத்தில் இருக்கிறார்கள் ரஜினி ஃபேன்ஸ்.

கபாலியில் தாதா ரஜினி கெத்து காட்ட, அதற்குத்தான் லைக்ஸ் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஓரிரு நொடிகள் வரும் ரெட்ரோ ரஜினி அதை லெஃப்டில் ஓவர்டேக் செய்தார்.

’ரஜினிக்காக எந்த காம்ப்ரமைஸும் கிடையாது’ என்ற ரஞ்சித்தின் நிலைப்பாடு ரஜினி, தாணு உட்பட பலரும் ரசித்த அம்சம்.

சந்தோஷ் நாராயணன் ரஜினி ஸ்டைலில் நெருப்புடா என்று பாடல் அமைத்தாலும், அவர் ஸ்டைலையும் விட்டுக் கொடுக்காமல் பாடல்களில் அசத்தினார். மலேஷியன் ராப் ஸ்டார் ரோஷன் ஜாம்ராக்கை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தினார் சந்தோஷ்.

ரஜினிக்கு 159வது படம். 100 நாட்களுக்கு மேல் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 75 நாட்கள் தன் ஒரிஜினல் வெள்ளை தாடியுடன் நடித்தார் ரஜினி. முதன்முறையாக, தன் ரியல் தாடியுடன் ரஜினி இத்தனை நாட்கள் நடித்திருக்கிறார்.

ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தே என்பதும், கொஞ்சம் நகைப்புக்கு உள்ளானது நெட்டிசன்ஸ் மத்தியில். ‘பேத்தி மாதிரி இருக்குமே’ என்ற கேலிக்கு டீசர் விடை கொடுத்திருக்கிறது. ரஜினியை கொஞ்சம் இளமையாகவும், ராதிகா ஆப்தேவை கொஞ்சம் வயசான கோலத்திலும் காட்டி பேலன்ஸ் செய்திருக்கிறார்கள். கபாலி ரஜினியின் ஜோடியான ராதிகா ஆப்தேவின் திரைப்பெயர் - குமுதவல்லி!

‘நானொன்றும் கமர்ஷியலாக ஹிட்டடிக்கிற வகையில்லை. ரஜினிக்கு கதை பிடித்ததால்தான் நடிக்கிறார்’ என்கிற ரஞ்சித், ‘பெர்சனலாக எனக்கு ‘முள்ளும் மலரும்’ காளியை ரொம்பப் பிடிக்கும். அந்த ஃபீலை கபாலி தருவான்’ என்கிறார்!

‘கலகம் செய்து ஆண்டைகளின் கதை முடிப்பான் கபாலிதான்’ என்கிற பாடல் வரிகளும் சலசலக்கப்பட்டது. அதுபற்றி ரஞ்சித்திடமே கேட்க, ‘தப்பா பேசறாங்களா..? அப்படிப் பேசறவங்க அவ்வளவுதான்னு விட்டுடணும்’ என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

பாரிஸில் உள்ள ‘ரெக்ஸ் சினிமா’ திரையரங்கில் கபாலி வெளியாவது மற்றுமொரு மைல்கல். டிஸ்னி படங்களும், ஹாலிவுட் படங்களும் மட்டுமே வெளியிடப்படும் அந்தத் திரையில் வெளியிடப்படும் முதல் இந்தியப்படம் இது. திரையின் அளவு;  252 மீட்டர் ஸ்கொயர். இருக்கைகள்; 2800.

-சத்ரியன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்