வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (18/07/2016)

கடைசி தொடர்பு:15:48 (18/07/2016)

சிம்புவுக்கு எப்போது 'டும் டும் டும்'... பதில் அளித்தார் டி.ஆர்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று (ஞாயிறு) திருச்சி சென்றிருந்த லட்சிய தி.மு.க. கட்சி தலைவரும், நடிகரும், இயக்குநருமான  டி. ராஜேந்தர், சிம்பு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றியும் அவரின் திருமணம் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

“எனது மகன் நடிகர் சிம்புவை, ஒருபோதும்  அரசியலில் ஈடுபடும் படி நான் வலியுறுத்த மாட்டேன். அவர் தனக்கென தனி கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார்.  சமீபகாலமாக அவர் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. காரணம் அவர் தரமான படங்களை மட்டும்தான் தேர்வு செய்கிறார்.   நானும் உடம்பெல்லாம் குறைத்துவிட்டேன். இப்போது மீண்டும் திரையில் வலம்வர தொடங்கியுள்ளேன்,  ஏற்கெனவே இளைஞர்களுக்குப் பிடித்தவகையில் இசை, பாடல் என  அடுத்த ரவுண்ட் வலம்வர ஆரம்பித்துள்ளேன். இப்போது  கே.வி. ஆனந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மீண்டும்  திரைப்படங்களில்  நடித்து வருகிறேன். இசை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளேன்.

தமிழகத்தில், திரையரங்குகளில் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்களைச்  சேர்ந்த மக்கள் தியேட்டருக்கு போய்ப்  படம் பார்க்க முடியவில்லை. சிறிய பட்ஜெட்டில் தயாராகி வெளிவரும் படங்களுக்கான கட்டணத்தையாவது குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போல் தமிழகத்தில் அதிகரித்து விட்ட கொலை, கொள்ளை சம்பவங்களைக்  கட்டுப்படுத்தவும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிம்புவுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ஆர், சிம்புவுக்கு பெண் பார்த்து வருகிறோம். அவரைத் திருமணம் செய்து கொள்ள பல பெண்கள், குறிப்பாக பல கோடீஸ்வர பெண்கள் போட்டி போடுகிறார்கள். ஆனால் அவன் தனக்கு கோடிகள் தேவை இல்லை என்று கூறிவிட்டு அவனுக்கு பிடித்த நல்ல பெண்ணை தேடி வருகிறான். காதல் திருமணமாக இருக்குமா என்றும் பலர் கேட்கிறார்கள்.   கடவுள் அருளால் நல்ல பெண் கிடைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் ” என்று கூறினார் டி.ராஜேந்தர்.  


சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்