Published:Updated:

'தளபதியும் நாயகனும் சேர்ந்ததுதான் கபாலி!' - ரஜினியின் வார்த்தைக்கு நெகிழ்ந்த தாணு!

Vikatan
'தளபதியும் நாயகனும் சேர்ந்ததுதான் கபாலி!' - ரஜினியின் வார்த்தைக்கு நெகிழ்ந்த தாணு!
'தளபதியும் நாயகனும் சேர்ந்ததுதான் கபாலி!' - ரஜினியின் வார்த்தைக்கு நெகிழ்ந்த தாணு!

கபாலி படத்தின் முதல் ஆறு நாள் வசூல் மட்டும் 321 கோடிரூபாய் என்ற அறிவிப்போடு தொடங்குகிறது கபாலி படத்திற்கான வெற்றிவிழா நிகழ்ச்சி. தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி மற்றும் அவர்களது குழுவினர்கள் அனைவருமே அரங்கத்தினுள் நிறைந்திருந்தனர். 

ரஜினியைத் தவிர, படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஜான்விஜய், கலையரசன், மைம்கோபி, ரித்விகா, டைகர் ஹரி, தினேஷ் என்று ஒட்டுமொத்த பட்டாளமும் வந்திருந்தது. கேக் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர் குழுவினர். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால், படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுமே மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அனைவருமே தங்களது தொழில்நுட்ப துறை சார்ந்தும், அவர்களது உதவியாளர்கள் பற்றியும் குறிப்பிட்டு நன்றி கூறினர். 

குறிப்பாக, படத்தின் கலை இயக்குநர் ராமலிங்கம் பேசியது அரங்கை அதிரடித்தது. “ஒரு படத்திற்கு கலை இயக்கம் ரொம்ப முக்கியம், ஆனா யாருமே கலை இயக்கம் பற்றி பத்திரிகையிலோ, இணையத்திலோ பேசவில்லை, படத்திற்காக தாய்லாந்த் தெருவையே செட் அமைத்திருக்கிறேன்” என்று ஆதங்கத்தைக் கூறிச்சென்றார்

மற்றுமொரு ஹைலைட், மாயநதி பாடகி ஸ்வேதா மோகனை பேச அழைக்கும் போது, மாயநதி பாடலை அரங்கில் பாடி அனைவரையும் உருகவைக்க, பின் தொடர்ந்து பேசவந்த அனைத்து பாடகர்களுமே பாடியதும் குறிப்பிடத்தக்கது.

ரஞ்சித் பேசும்போது, ‘படத்தின் ஒவ்வொரு காட்சியையுமே முழுமையா ரஜினி சாருக்கு சொன்ன பிறகு தான் படமாக்கினோம். நாங்களே சில காட்சிகள் வேண்டாம் என்று சொல்லும் போது கூட, அவர் இருக்கட்டும், இத அப்படியே பண்ணாதான் சரியாஇருக்கும் என்று சொன்னார். முக்கியமா, படத்தோட க்ளைமேக்ஸ் காட்சியில் டைகர், ரஜினியை சுடுறது மாதிரி சீன் வைக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம், ஆனா ரஜினி சார், அமெரிக்காவிலிருந்து போன் பண்ணி, அந்த க்ளைமேக்ஸ் காட்சியே இருக்கட்டும் என்று உத்தரவே போட்டார், அதன்பிறகு எங்க குழுவிற்கு முழு சுதந்திரத்துடன் வேலை செய்ய வைத்தவர் தாணு சார் தான்” என்று கூறினார் ரஞ்சித்.

தயாரிப்பாளர் தாணு பேசும்போது, “எனக்கும், ரஜினி சாருக்கும் கபாலி படத்திற்கான கதையை ரஞ்சித் சொல்லிமுடிக்கும்போது, எழுந்து நின்று கைதட்டினேன், ரஜினி இந்தக் கதையை அப்படியே படமாக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்தார். அதன் பிறகு நான் தயாரிப்பு சார்ந்து எதிலும் தலையிடவில்லை. அவர்களுக்கான சுதந்திரமே எங்களுக்கான வெற்றியாக அமைந்தது. முக்கியமாக டீசரில் ஹிட்டடித்த, தலையைக் கோதியபடி நடக்கும் காட்சியின்போது ரஜினிக்கு கொதிக்கும் ஃபீவர். ஆனால் அந்த  நிலையிலும் சில காட்சிகள் நடித்தார். அந்த காட்சிகள் தான் இன்று பெரிய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது.

ரஜினி என்னிடம் பேசும்போது, “உனக்கும் எனக்கு உள்ள நட்பிற்கு கபாலி ஒரு கிரீடம், இந்தப் படத்த பாட்ஷானு எல்லோரும் சொல்லுறாங்க, ஆனா இந்தப் படம் தளபதியும், நாயகனும் சேர்ந்த ஒரு படம். ரஞ்சித் கிரேட்” என்று சொன்னது அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது.

எந்திரன், சிவாஜி படங்களை பார்க்க அழைக்கும்போது நேரமில்லை என்று கூறிய சோ, இப்போது அவரே அழைத்து கபாலி பார்க்கவேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கென தனி காட்சியே திரையிட்டோம். படம் பார்த்தப்பிறகு இரவு முழுவதும் ரஜினியை  அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறார்.

எஸ்.பி. முத்துராமன் சாருக்குப்பிறகு அதிகமாக ரஞ்சித்தை தான் மதிக்கிறேன். அதனால் தான் எனக்கு இன்னொரு படம் பண்ணிக்கொடு என்று கூறியிருக்கிறேன். சென்னையில் ஆறு நாளில் ஆறு கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதுவரையில்லாத அளவிற்கு படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது. 

இன்று மலாய் மொழியில் கபாலி வெளியாகிறது. அடுத்த மாதம் சீன மொழியிலும், ஜப்பான் மொழியிலும், தாய்லாந்து மொழியிலும் ரிலீஸாகபோகிறது என்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார் தயாரிப்பாளர் தாணு.

கபாலி சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் தாணு சிறப்பு வீடியோ!

Vikatan