வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (03/08/2016)

கடைசி தொடர்பு:13:17 (08/08/2016)

ரஜினியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்... என்ன நடந்தது?

தன்னுடைய ட்விட்டர் கணக்கை, கடந்த 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார் ரஜினிகாந்த். சேர்ந்த ஒரே நாளில் 10 லட்சம் பேர்  பின்தொடர்ந்து, ட்விட்டரையே மிரளவைத்தனர். இதுவரை ட்விட்டரில் 30 லட்சம் பேர்  பேர் ரஜினியை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ரஜினிகாந்தின் ட்விட்டர் கணக்கை மர்மநபர்கள் திடீரென முடக்கினர். இதனால் அவரை பின் தொடரும் ரசிகர்களிடையே பரபரப்பு நிலவியது. ரஜினியின் மகள் செளந்தர்யா இதுசார்பாக  நடவடிக்கை மேற்கொண்டு, மர்மநபர்கள் பிடியிலிருந்து ரஜினியின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுத்தார்.

யார் அந்த 'அந்நியர்கள்' என்று விசாரணை நடந்துவருகிறது. கபாலி ரிலீஸ் நேரத்தில் இணையத்தில் படம் வெளியாவதைத் தடுக்ககோரி, தயாரிப்பாளர் தாணு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, அனுமதியின்றி இயங்கும் 225 இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ, தங்களுடைய இணையதளம் முடங்கியதற்கு பதிலாக ரஜினியின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ததாக சொல்லப்படுகிறது. இவர்களே அமெரிக்காவில் திரையிடப்பட்ட கபாலி படத்தின் முதல் நாள் காட்சியிலிருந்து, ரஜினியின் அறிமுக காட்சியை வாட்ஸ் அப்களில் பரவவிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, “ அப்பாவின் ட்விட்டர் கணக்கை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துவிட்டனர். தற்பொழுது கணக்கை மீட்டுவிட்டோம். ஆல் இஸ் வெல்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்படுவதில்லை. இந்த மூன்று வருடங்களில் மொத்தம் 29 ட்விட்டுகளை மட்டுமே பதிந்திருக்கிறார். தவிர,  ஏ.ஆர்.ரஹ்மான், மோடி, அமிதாப், செளந்தர்யா, தனுஷ் என்று 23 நபர்களை மட்டுமே இவர் பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்