Published:Updated:

திதி.. ஹரிவு.. புதுவரவுகளால் புத்துயிர் பெறுகிறது கன்னட சினிமா!

Vikatan
திதி.. ஹரிவு.. புதுவரவுகளால் புத்துயிர் பெறுகிறது கன்னட சினிமா!
திதி.. ஹரிவு.. புதுவரவுகளால் புத்துயிர் பெறுகிறது கன்னட சினிமா!

மாரிகொண்டவரு, ரங்கி தாரங்கா, கர்வா,  ஃபர்ஸ்ட் ரேங்க் ராஜு, திதி என வரிசையாக கன்னடப்படங்கள் நல்ல கதையம்சத்துடன் வெளிவர,கன்னடத் திரையுலகம் இப்போது காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டுள்ளது. கொட்டிக் கிடக்கும் திறமையை விளம்பரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் மையத்தில் கன்னடத்திரைப்பட விழா கடந்த ஜுலை 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்தது. 'கன்னடத்துப் பைங்கிளி ' சரோஜோதேவி விழாவைத் தொடங்கி வைத்தார். நடிகை சுகாசினி உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர். திரைப்பட விழா நடந்த நான்கு நாட்களும் கூட்டம் அலைமோதியது. தமிழ்மக்கள் கூட குடும்பத்துடன் விழாவுக்கு வந்திருந்தனர்.

டிராபிக் ரூல்சை மீறுவதால் ஒரு குடும்பம் அழிந்து போவதை கருவாக வைத்து, திகில் கலந்து அத்தனை இயல்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் 'யூ- டர்ன் ' கன்னடப்படம்.  லூசியாவில் கவனம் ஈர்த்த பவன் குமார்தான் இந்தப் படத்தின் இயக்குநர். சென்னையில் நடந்த கன்னடத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். ரசிகர்களின் வேண்டுகோளையடுத்து, அடுத்த ஷோவும் 'யூ-டர்ன்' திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் பவன்குமாரும் வந்திருந்தார். அவரிடம் பேசினோம்.

''லூசியா எனது முதல் கன்னடப்படம். முதல் படமே மிகப் பெரிய சக்சஸ். முதல் படம் பெரிய ஹிட் ஆகும் போது, அடுத்த படத்தையும் ஹிட் கொடுக்க வேண்டுமென்ற அழுத்தம் எல்லாம் எனக்கு இல்லை. இயல்பாகவே 'யூ-டர்ன்' எடுத்தேன். நல்ல கதைக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருந்தது. டிராபிக் ரூல்ஸ் மீறப்படுவதால், நாட்டில் எத்தனை உயிர்பலி. கணவரை, மனைவியை, குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் படும் வேதனையை உணர்த்தவே இந்தப் படம். அதுவும் பெங்களூருவில் சொல்லவே வேண்டாம். அத்தனை டிராபிக் ஜாம். மக்கள் படும் அவஸ்தையை சகிக்க முடியாது'' என சமூக அக்கறையுடன் பேசுகிறார் இந்த இன்ஜீனியரிங் பட்டதாரி.

'' லூசியாவுக்கு பிறகு கன்னடத் திரையுலகில் ஒரு மறுமலர்ச்சி என்றே சொல்லலாம். புதுப்புது இயக்குநர்கள் வருகின்றனர். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தருகின்றனர். தேசிய விருதுகள் சர்வசாதாரணமாக கன்னடப்படங்களுக்கு கிடைக்கின்றன. 'யூ-டர்ன்' படத்தை தமிழில் எடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கன்னடத்தை பொறுத்த வரை, இளம் இயக்குநர்களை நம்பி முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் முன்வர மாட்டார்கள். இது மிகப் பெரிய பிரச்னை. நான் ஒரு உத்தியை கையாண்டேன். எனது படத்தில் யார் எல்லாம் முதலீடு செய்கிறார்களோ, அவர்களுக்கு, அவர்கள் இருக்கும் பகுதியின் விநியோக உரிமையை வழங்க முடிவு செய்தேன். ஒவ்வொருவரும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என முதலீடு செய்ய, கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அதான் டைட்டில் கார்டில் கூட 100க்கும் மேற்பட்ட புரொடியூசர்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்'' என சிரிக்கிறார்.

கன்னட சினிமாவை ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் என கோலோச்சிய நடிகர்கள் இருந்தார்கள். சிறிய அளவிலான மார்க்கெட்டைக் கொண்ட, கன்னட சினிமாவுக்கு பெங்களூருவிலேயே பலத்த போட்டி. ஐந்து மொழிப்படங்களுடன் கன்னடப்படங்கள் போட்டியிட்டாக வேண்டிய சூழ்நிலை. ஒரு பக்கம் தமிழ் சினிமா டெக்னிக்கல் அம்சத்துடன் களத்தில் இருக்கும். மலையாளப் படங்கள், கதையம்சத்துடன் கன்னட மக்களைக் கட்டிப்போடும். இது தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய பிரமாண்டங்களுடனும் கன்னடப்படங்கள் போட்டி போட வேண்டும். கன்னட மக்களேகூட, கன்னடப் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழிப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். கன்னட சூப்பர்ஸ்டார்களுக்கு கூட கர்நாடகத்தை தாண்டி மற்ற மாநிலங்களில் பெரிய வரவேற்பு இருக்காது. இப்போது கன்னட சினிமாவின் ஹீரோவே கதைகள்தான். வித்தியாசமான கதையம்சத்துடன் இளைஞர்கள் களத்தில் குதித்திருப்பதால் கன்னடத் திரையுலகின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருக்கிறது. மொழி தெரியாதவர்களையும் கன்னட சினிமாவை பார்க்க வைக்க முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

ஹரிவு என்று ஒரு படம். 2014ம் ஆண்டு வெளியான இந்த படம் சிறந்த கன்னடப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. நகர மக்கள் எளிமையான கிராமத்து மக்களுக்கு செய்யும் துரோகத்தை தோள் உரித்துக் காட்டுகிறது இந்த படம். தெற்கு கர்நாடகா பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயியாக வருகிறார் சன்சாரி விஜய். அவருக்கு ஒரே மகன். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. மகனுக்கு இதயநோய் இருப்பது தெரிய வந்ததும். துடிதுடித்துப் போகின்றனர் பெற்றோர். அப்பாவியான சன்சாரி விஜய், மகனை கூட்டிக் கொண்டு சிசிச்சைக்காக பெங்களூரு செல்கிறார். மருத்துவமனையில் அவர் சந்திக்கும் அவலத்தை ஹரிவு பேசுகிறது. மகனும் இறந்து போக, அவனது உடலை சொந்த ஊருக்கு எப்படி கொண்டு செல்கிறார் என்பதே கதை. ஹனுமந்தப்பா என்ற விவசாயிக்கு நடந்த அனுபவத்தை,  மருத்துவரும் எழுத்தாளருமான ஆஷா பெங்கப்பா, பிரஜவானி கன்னடப்பத்திரிகையில் எழுதியிருந்தார். அந்த உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்தே ஹரிவு அத்தனை உருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டம் கண்களில் நீரை வரவழைத்து விடும். இந்த படத்தை மன்ஜுநாதா சோமகேசவ ரெட்டி எனற புதுமுக இயக்குநர்தான் இயக்கி உள்ளார்.

திதி. ராம் ரெட்டியின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம். கிராமத்தில் வசிக்கும் 101 வயது பெரியவர் செஞ்சூரி தாத்தா இறந்து போகிறார். மூன்று தலைமுறை கொண்ட அவரது குடும்பத்தில் 10வது நாள் காரியத்தின் போது நடக்கும் பிரச்னைகளை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். மகனாக வரும் கட்டப்பா, பேரன் தமான்னா, கொள்ளுப் பேரன் அபி ஆகியோர் செய்யும் அலம்பல்களே கதை. சொத்துக்களை கைப்பற்ற நடக்கும் போட்டியை காமெடி கலந்து அசத்தியிருக்கிறார்கள். மாண்ட்டியா மாவட்டத்தில் உள்ள நோடேகொப்பளு என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை சிரிக்க வைக்கிறது. மாண்டியா பகுதி மக்களின் வாழ்க்கையை படம் பிரதிபலிக்கிறது. படத்தில் நடித்த பலரும் அதே கிராமத்தை சேர்ந்த மக்கள்தான். தேர்ந்த நடிகர்கள் போல அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். பிளான் செய்து எந்த ஸ்கிரிப்ட்டும் எழுதப்படவில்லை. காமெடி காட்சிகளும் கூட கதைக்காக சேர்க்கப்படவில்லை. ஸ்விட்சர்லாந்தில் லொக்கார்னோ திரைப்பட விழாவில், இந்த படம் 'கோல்டன் லெப்பர்ட் ' விருதை வென்றது. கடந்த ஆண்டு சிறந்த கன்னடப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டது.

கன்னடசினிமாவில் அமிதாப் போல கேரக்டரை தேடி பிடித்து நடிகராக மாறி விட்டார் ஆனந்த் நாக். ’கோதி பன்னா சாதாரண மாய்க்கட்டு’ என்ற படம் ஆனந்த் நாக்கிற்கு நல்ல தீனியாக அமைந்தது. கதையின்படி, ஆனந்த் நாக்கின் மகனாக வரும் ரக்ஷித் செட்டி மும்பையில் சாஃப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். 'அல்சைமர்' என்ற மறதி நோயால் அவதிப்படும் ஆனந்த் நாக்கை, பெங்களூருவில் உள்ள முதியோர் இல்லத்தில் ரக்ஷித் சேர்த்து விடுகிறார்.  பெரும்பாலான சாஃப்ட்வேர் என்ஜீனியர்களைப் போலவே, ரக்ஷித்துக்கும் அமெரிக்க கனவு இருக்கிறது. அமெரிக்காவில் வேலையும் கிடைக்கிறது. பெங்களூருவுக்கு வரும் ரக்ஷித், தந்தையை ஷாப்பிங் கூட்டிப் போகிறார். அந்த சமயத்தில் ஆனந்த்நாக் காணாமல் போய் விடுகிறார். தந்தை மீது ரக்ஷித்துக்கு கோபம் கோபமாய் வருகிறது. இவரால்தானே நமக்கு இவ்வளவு தொல்லை என அலுத்துக் கொள்கிறார். தாய் இல்லாத சூழலில் தந்தை தன்னை கஷ்டப்பட்டு வளர்த்தது நினைவுக்கு வர, எப்பேர்பட்ட சுயநலவாதியாக இருந்து விட்டோம் என அழும் ரக்ஷித் திருந்துகிறார். தந்தையை தனது டாக்டர் தோழியுடன் சேர்ந்து தேடி ஊர் ஊராக அலைகிறார். புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டுகிறார். இதற்கிடையே காணாமல் போன, ஆனந்த் நாக், கொலைகாரக் கும்பல் ஒன்றிடம் மாட்டிக் கொள்கிறார். தந்தையும் மகனும் மீண்டும் சேர்ந்தார்களா என்பதை அழகியலோடு, உணர்ச்சிபூர்வமாகவும் காட்டியிருக்கிறது  ’கோதி பன்னா சாதாரண மாய்க்கட்டு. புதுமுக இயக்குனராக ஹேமந்த் ராவின் படம் இது. ‘கோதிபன்னா..’ வை தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜ் எடுக்கிறார்.

‘கன்னடச்சலசித்ர அகாடமி’யின் ஆலோசகர்களில் ஒருவரான கங்காதரிடம் கன்னடத் திரைப்பட விழா குறித்து கேட்டோம்,'' கன்னட சினிமாவை கன்னடர்களே பார்க்காத காலம் ஒன்று இருந்தது. அந்தளவுக்கு கர்நாடகாவில் பிற மொழிப்படங்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. பிரம்மாண்டத்திலும் டெக்னிக்கல் விஷயங்களுடனும் பிற மொழிப் படங்களுடன் கன்னடப்படங்கள் போட்டியிட முடியாத நிலை இப்போது மாறியிருக்கிறது. கன்னடத்திலும் நல்ல தரமான படங்கள் வெளிவருகின்றன. எங்கள் தயாரிப்புகளை பிற மாநில மக்களுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். அதற்கு சென்னைதான் முதலில் எங்களுக்கு ஏற்ற நகரமாக இருந்தது. நடிகை சுகாசினியிடம் ஆலோசனை கேட்டோம். அவர்தான் இந்த ஐடியா கொடுத்தார். பரீட்சார்த்த முறையில்தான் இங்கு நான்கு நாட்கள் நடத்தினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு. 'திதி' படத்தைக் காண அவ்வளவு கூட்டம் வந்தது. பல படங்களுக்கு ‘ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்’ என்ற அடிப்படையில் சீட் ஒதுக்க வேண்டிய நிலை. சீட் இல்லையென்றாலும் பலர் நின்று கொண்டே பார்த்தார்கள். அடுத்த முறை பெரிய திரையரங்கங்களில் இந்த விழாவை நடத்த முடிவெடுத்துள்ளோம். சென்னையில் கிடைத்த வெற்றி, பிற மெட்ரோ நகரங்களிலும் கன்னடத் திரைப்பட விழாவை நடத்தும் உற்சாகத்தை அளித்துள்ளது '' என்கிறார்.

நம்ம ஊரு டைரக்டர் வாசு இயக்கிய சிவலிங்காவும் விழாவில் திரையிடப்பட்டது. ஆப்தமித்ராவுக்கு பிறகு வாசுவின் இயக்கத்தில் வந்துள்ள திகில் கலந்த படம். ராஜ்குமாரின் மகன் ஷிவ் ராஜ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். சந்திரமுகி டைப் கதைதான். வாசு தனது பாணியில் மசாலா கலந்து இறக்கியிருக்கிறார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. சி.டி நடமாடும் இந்த காலத்தில் கூட கர்நாடகா தியேட்டர்களில் 150 நாட்கள் ஓடிய படம். சிவலிங்கா தமிழிலும் வரவிருக்கிறது.  ராகவா லாரன்சை, வாசு இயக்கிக் கொண்டிருக்கிறார்.

''புதுமுக இயக்குனர்கள் புகுந்திருப்பது மாற்றத்திற்கான அறிகுறி. வித்தியாசமான கதைகளுக்கு கன்னட மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதும் ஒரு காரணம். டெக்னிக்கலாகவும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. தமிழ் போலவோ தெலுங்கு போலவோ பரந்து விரிந்த மார்க்கெட் இல்லாதது மிகப் பெரிய குறை. ஓவர்சீஸ் மார்க்கெட்டும் இல்லை. ஒரு கன்னடப்படம் 50 கோடி வசூலித்தாலே பெரிய விஷயம். வித்தியாச  சிந்தனை கொண்ட இளைஞர்கள் கன்னட சினிமாவை இப்போது வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்றே நினைக்கிறேன். திறமை இருந்தாலும் மார்க்கெட்டிங் செய்தால்தானே சினிமாவுக்கு ஆடியன்ஸ் அதிகாரிக்கும்.. அதற்காகவே இதுபோன்ற விழாக்கள்!'' என்கிறார் டைரக்டர் வாசு.

திரும்பிப் பார்க்க வைக்கிறது கன்னட சினிமா!

--எம்.குமரேசன்

Vikatan