படபடப்புக்கு இடையே படப்பிடிப்பு..! இது ’வாகா’ திகில்!

ரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில், விக்ரம்பிரபு நடித்துவரும் படம் வாகா. காஷ்மீர் பகுதியில் 69 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

காஷ்மீர் எல்லைப் பகுதியான வாகா என்னும் இடத்தில்தான் படத்தின் முக்கால் பகுதிக்  காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளன. திடீரென்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியென்பதால், அந்தப்  பகுதியில் படப்பிடிப்பு நடத்திய திக் திக் அனுபவங்களை படத்தின் ஹீரோ விக்ரம்பிரபு நிருபர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

“படப்பிடிப்பு நடந்த 69 நாட்களுமே, ராணுவ அதிகாரிகள் எங்களுக்குப்  பாதுகாப்பாக இருந்தனர். தங்குமிடத்திலிருந்து படப்பிடிப்புக்குச் சென்று, திரும்பிவரும் வரையிலும் அவர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தனர். இதற்கான ஏற்பாட்டைச் செய்ததெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான விஜயகுமார் சார்தான். அவர் தற்பொழுது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அவர் தான் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்கிக்கொடுத்தும் எங்களின் பாதுகாப்பிற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.

ஒருநாள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது, தீடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது, உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, தங்குமிடத்திற்கு திரும்புமாறு ராணுவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். பிறகுதான்  தீவிரவாதிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகத்  தெரியவந்தது. பெரிய சவாலுடன் தான் படப்பிடிப்பை நடத்திமுடித்திருக்கிறோம்.

காஷ்மீர் எல்லையில் நடக்கும் அழகிய காதல் கதை வாகா. ராணுவ அதிகாரியாக நான் நடிக்க, எனக்கு ஜோடியாக, காஷ்மீர் பெண்ணாக ரன்யா ராவ் நடிக்கிறார்.  காஷ்மீரில் படமாக்கியது புதிய அனுபவமாகவும், ராணுவ அதிகாரிகளுடன் பழகியது நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று கூறினார் விக்ரம்பிரபு.

டி.இமான் இசையமைத்திருக்கும் 'வாகா', வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!