மூன்று முதல்வர்களுடன் நடித்த ஜோதிலட்சுமி காலமானார்! | Jyothi Lakshmi Passed Away; Celebs mourn the death of the yesteryear actress

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (09/08/2016)

கடைசி தொடர்பு:10:28 (11/08/2016)

மூன்று முதல்வர்களுடன் நடித்த ஜோதிலட்சுமி காலமானார்!

தமிழ் சினிமாவில் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த “பெரிய இடத்துப்பெண்” படத்தில் அறிமுகமானார் ஜோதிலட்சுமி. அப்படத்தில் “கட்டோடு குழலாட ஆட” என்கிற பாடலில் ஜோதிலட்சுமி தோன்றும் காட்சி அந்த காலத்தில் பிரசித்தி பெற்றது. 

அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதாவின் தோழியாக நடித்தவர். கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர், ஒன்றிரண்டு பாடல் காட்சிகள் மட்டும் நடனமாடக்கூடிய வாய்ப்பே கிடைத்து. நடனத்திறமை அதிகமாக இருந்ததால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். 

1970 - 80களில் தெலுங்கு சினிமாவில் ஜோதிலட்சுமிக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. டி.ராஜேந்தர் தன்னுடைய ராகம் தாளம் பல்லவி படத்தில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, மாயா என்று மூன்று கவர்ச்சி நடிகைகளை ஒரே பாடலுக்கு நடனமாடவைத்தார். 

விட்டலாச்சாரியார் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் ஜோதிலட்சுமியும் அவரது தங்கை ஜெயமாலினியும் நடித்திருப்பார்கள். மேலும், இயக்குநர் இராமநாராயணன், இவரை தன் படங்களில் வில்லி வேடத்தில் நடிக்கவைத்தார். 

“என்னைத் தாலாட்ட வருவாளா” என்கிற அஜித் படத்தில் தன் மகள் ஜோதிமீனாவுடன் சேர்ந்து போட்டுப்போட்டுக்கொண்டு ஆடிய பாடல் காட்சிகள் பிரசித்திப்பெற்றது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சேது படத்தில் “கானக் கருங்குயிலே” பாடல் மற்றும் ரஜினியின் முத்து படத்தில் “கொக்கு சைவக்கொக்கு” பாடல் என்று அனைவரின் மனதிலும் நின்றவர். 

இவர் இறுதிவரை நடிப்புக்கு ஓய்வு கொடுத்ததே இல்லை. வெள்ளித்திரை கைவிட்டாலும் சின்னத்திரையில் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் கிடைத்தது. தற்பொழுது சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் "வள்ளி" என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் நாகம்மா என்ற சீரியலிலும் நடித்துவந்தார். அறுபத்தெட்டு வயதான ஜோதிலட்சுமி தைரியமான பெண்மணி. இவருடைய மகள் ஜோதி மீனாவும் சில படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தவர். 

அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். என்.டி.ஆர்., ஜெயலலிதா, என்று மூன்று முதல்வர்களுடனும் நடித்தவர் ஜோதிலட்சுமி. சமீபகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். நேற்று (8-8-2016) நள்ளிரவு உடல்நிலை மோசமாகி, இயற்கை எய்தினார். திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை (9-8-2016) தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்