`முடிஞ்சா இவன புடி' படத்துக்கு தடை கிடையாது - கே.எஸ்.ரவிகுமார்


                                

மழை விட்டாலும் தூவானம் ஒய்ந்தபாடில்லை கதையாக எப்போதோ ரிலீஸானது 'லிங்கா'. இப்போதுவரை அந்தப்படப் பஞ்சாயத்து இழுத்துக் கொண்டே இருக்கிறது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘முடிஞ்சா இவன புடி'  படத்தை தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழிகளில் இயக்கி இருக்கிறார். இந்தபடம் ஆகஸ்ட் 12-ம்தேதி ரிலீஸாகிறது.  இந்தச் சூழ்நிலையில்  'ராக்லைன் வெங்கடேஷ் எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தால்தான் 'முடிஞ்சா இவன புடி' படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம்' என்று 'லிங்கா' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில்  'லிங்கா' விநியோகஸ்தர் சிங்காரவேலன்  தென்னிந்திய வர்த்தக சபை செயலாளர் அருள்பதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ’எனக்கு சேரவேண்டிய 53 லட்சத்தை  வேந்தர் பிலிம்ஸ் கணக்கில்  சேர்க்க சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். நான் தற்போது வேலை நிமித்தமாக கப்பலில் இருக்கிறேன். நீங்கள் எனது பணத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நான் சென்னை வந்தபிறகு என் பணத்தை தங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்தக் கடிதம் கீழே.

அதே சிங்காரவேலன் தனது மேனேஜர்  விக்னேஷ்வர் வாயிலாக அருள்பதி மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், ‘நாங்கள் 'லிங்கா' மீது தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அருள்பதி, ராக்லைன் வெங்கடேஷிடம் கட்டப்பஞ்சாயத்து நடத்தி எங்கள் பணத்தை அபகரிக்க பார்க்கிறார்' என்று  புகார் கொடுத்து இருக்கிறார். அந்தக் கடிதம்..

வெள்ளிக்கிழமை 'முடிஞ்சா இவன புடி' ரிலீஸாகுமா இல்லையா என்கிற நெருக்கடியான சூழ்நிலை நிலவி வருகிறது.  'ரஜினிசார் நடித்த 'லிங்கா' படத்தை மனதில் வைத்துக் கொண்டு 'முடிஞ்சா இவன புடி' படத்தை ரிலீஸாக விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்.  குறிப்பாக அருள்பதியின் திட்டத்தை சட்டப்படி முறியடிப்பேன்'  என்று தயாரிப்பாளர் ராம்பாபு கூறினார். இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டோம். 'என்னோட தயாரிப்பாளர் ராம்பாபு  'முடிஞ்சா இவன புடி' படத்தில் ‘ரஜினி வழங்கும்’ என்றுதான் தனது பேனரில் அச்சிட ஆசைப்பட்டார். ரஜினி விருப்பம் இல்லாமல் அப்படிச் செய்யக்கூடாது என்று விட்டுவிட்டார். ராக்லைன் வெங்கடேஷ் ராம்பாபுவின் நெருங்கிய நண்பர் அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக தனது பேனரில் ராக்லலைன் வெங்கடேஷ் பெயரைப் போட்டார். அது வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றம் ஏற்பட, 'லிங்கா' விநியோகஸ்தர்கள்  பணம்கேட்டு வந்தனர். நேற்று இரவே  பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது. ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12-ம்தேதி 'முடிஞ்சா இவன புடி' திரைப்படம் ரிலீஸாகும்' என்று விளக்கம் சொன்னார்.

- சத்யாபதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!