தயாரிப்பாளர்கள் பயத்தை விட்டொழித்தால், தமிழ்ப்படங்கள் விருதுகளை அள்ளும்! - அனுராக் காஷ்யப் | Anurag Kashyap in Raman Ragav Screening

வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (22/08/2016)

கடைசி தொடர்பு:14:52 (22/08/2016)

தயாரிப்பாளர்கள் பயத்தை விட்டொழித்தால், தமிழ்ப்படங்கள் விருதுகளை அள்ளும்! - அனுராக் காஷ்யப்

இந்திய சினிமா துறையில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பல்வேறு தளங்களில் பயணிப்பவர் பாலிவுட்டின் மிக முக்கிய ஆளுமையான அனுராக் காஷ்யப். அவரது திரைக்கதை இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து  விமர்சன ரீதியாக பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ராமன் ராகவ் 2.0.

இத்திரைப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடல் மற்றும் திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நேற்று (21-08-2016/ஞாயிறு) சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை மற்றும் இயக்குநர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமன் ராகவ் 2.0 பற்றிய உரையாடலாக அல்லாமல் மேலும் பல தளங்களில் பார்வையாளர்களின் கேள்விகள் விரிந்தன.அவற்றிற்கு அனுராக் காஷ்யப் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.கலந்துரையாடலில் கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளும் அவற்றிற்கு அனுராக் அளித்த பதில்களும் பின்வருமாறு,

“ராமன் ராகவ் திரைப்படத்தில் அதிகளவு விஷுவல் இல்லாதது போல் உள்ளதே?”

"ஆமாம்.படத்தின் பட்ஜெட்டும் நேரமின்மையுமே காரணங்கள்.மொத்த படமும் 20 நாட்களில் எடுக்கப்பட்டது.படத்தில் வரும் டிஸ்கோ காட்சிகள் அனைத்தும் என் அலுவலக அறையிலேயே எடுக்கப்பட்டது"

“இந்தப்படம் உண்மையிலேயே 60களில் பம்பாயில் சுற்றித்திரிந்த சீரியல் கில்லரின் கதையா?இப்படத்தில் ராமன் சைக்கோவா?”

"உண்மைக்கதை இல்லை.இந்த காலத்தில் அந்த ராமன் ராகவின் மறுபிறவி இருந்தால் எப்படியிருக்கும் என்பதன் பதில்தான் ரா.ரா.2.0.இந்த படத்தில் வரக்கூடிய ராமன் சைக்கோவா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்"

“படத்தில் ஏன் இவ்வளவு வன்முறை?”

"கதைக்குத் தேவையாக இருந்தது அவ்வளவுதான்.

“படத்தின் குறியீடுகள் குறித்து...?”

"நேரடியாக சொன்னால் எக்கச்சக்கமாக வெட்டி வீசிவிடுவார்கள் படத்தை!” (சிரிக்கிறார்)

“படத்தில் ராமன்  அக்காவையே கொல்லுமளவு வன்முறையாளனாக இருந்தாலும், படத்தில் அந்தக் காட்சிகளை ரசிகன் ரசித்துத்தான் பார்க்கிறான். அவன்மீது கோவமோ, பயமோ இல்லை.. இது ஏன்? நாம் வன்முறைக்குப் பழகிவிட்டோமா?”

“நிச்சயமாக நமக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான். அவன் மேலெழுந்து இவற்ற்றை ரசிக்கிறான். நான், நீங்கள்.. நம் எல்லோரிடமும் அவன் ஒளிந்திருக்கிறான்”

‘படத்தில் இந்து முஸ்லிம் பிரச்னைகளை குறியீடுகளாகவே..”

(கேள்வியை ரசிக்கிறார்) ‘மிகச்சரி. ஆனால் எத்தனை பேருக்குப் புரியுமோ என்று பயந்தேன். உங்களுக்குப் புரிந்திருக்கிறது நன்றி. மேலும்,  ஒரு படத்தில் நான் எடுத்தவற்றை உங்களுக்கு அப்படியே கடத்த முடியும் என்பதில்லை. நான் நினைக்காதவற்றையும் நீங்கள் உணர முடியும். அதுதான் கலையின் வெற்றி”

“இதை ஏன் பீரியட் ஃபிலிமாக எடுக்கவில்லை”

‘அதற்கு குறைந்தது 40 கோடி தேவைப்படுமே!”

“படத்தில் ஒரு காட்சியில் வசந்தபாலன் குறித்த வசனம் வருகிறது, நாயகி தெலுங்கு இதெல்லாம் வியாபார நிமித்தமா?”

 “மும்பை முழுக்க மஹாராஷ்ட்ரியர்களால் நிறைந்தது அல்ல. அங்கே பல மாநிலங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்து நான் படமாக்கினால் அது நேர்மையான படைப்பாக இருக்காது!”

“கேங்ஸ் ஆப் வாசப்பூர் பாகம் 3 வருமா?”

"கண்டிப்பாக வராது"

“ஷாரூக்கான்-ஐஸ்வர்யா ராயை வைத்து ரொமாண்டிக் படம் இயக்குவீர்களா?”

"அவர்கள் நடிக்க சம்மதித்தால் இயக்கலாம். ஆனால், என் பாணி படமாகத்தான் இருக்கும்"

“தமிழில் நல்ல படங்கள் வருவதில்லையா.. விருதுகள் குறைவாகவே கிடைக்கிறதே?”

"உண்மையைச் சொன்னால் தமிழில் விருது பெறத் தகுதியான திரைப்படங்கள் அதிக அளவில் வருகின்றன. ஆனால்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பட ரிலீஸை தள்ளி வைத்து திரைப்பட விழாக்களுக்கு அனுப்னபினால் ஆன்லைனில் வெளியாகிவிடுமோ என பயப்படுகின்றனர். இந்த நிலை மாறினால் நிச்சயம் தமிழ்ப் படங்கள் உலக அளவில் பல விருதுகளைக் குவிக்கும்"


-ரா.கலைச்செல்வன்
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்