'தர்மதுரை'யில்  ராதிகாவை அவமானப்படுத்தவில்லை... சீனு ராமசாமி விளக்கம்!

மீபத்தில் ராதிகா நடித்த 'தர்மதுரை' திரைப்படத்தைப் பார்த்த சரத்குமார் கோபமானார். 'தமிழ் சினிமாவின் சீனியர் நடிகையான ராதிகாவுக்கு டைட்டில் கார்டில் உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்தி விட்டனர் 'என்று கொந்தளித்து இருக்கிறார், சரத்குமார். 'தர்மதுரை' படத்தின் இயக்குநரான சீனு ராமசாமியிடம் சரத்குமார் கோபம் குறித்து விளக்கம் கேட்டோம். 

''ராதிகா மேடத்தை நான் எந்தளவுக்கு மதிக்கிறேன் என்பதை 'தர்மதுரை' படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தை பார்த்தாலே புரியும். இந்தப்படம் ராதிகா அவர்களின் மரியாதையில் மணிமகுடம் சூட்டும். ராதிகா மேடத்தோடு பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு.

'தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கு கதை எழுதிவிட்டு அம்மா கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ராதிகா மேடத்தின் ராடன்டிவி ஆபீஸுக்கு ஒரு வருஷம் அலையாய் அலைந்தேன்.  அவரை என்னால்  பார்க்கமுடியாமலே போய்விட்டது.  அதன்பின் 'தென்மேற்கு பருவக்காற்று' ரிலீஸாகி சரண்யாவுக்கு தேசியவிருது கிடைத்தது. அப்போது ஒருமுறை ராதிகா மேடத்தை சந்தித்தேன். 'மேடம் சரண்யா நடிச்ச கேரக்டர்ல நீங்க நடிக்க வேண்டியது. உங்களைத்தேடி ராடன்டிவி ஆபீஸுக்கு வந்தேன் பார்க்க முடியலை' என்கிற தகவலை சொன்னேன். 

'தர்மதுரை' படத்துக்காக 25-நாட்கள் அவுட்டோர் ஷுட்டிங்கில் மேடம் கலந்து கொண்டார். அப்போது ஐந்து நாட்கள் மட்டுமே அவர்கள் நடிக்கும்காட்சிகளை படமாக்கினேன்.  அதன்பின் சென்னைக்கு அனுப்பி விடுவேன். அப்புறம் இடைவெளிவிட்டு ஐந்து ஐந்து நாட்களாகத் தான் படம்பிடித்தேன். ஏனென்றால் அவர்கள் ஒரு  இல்லத்து அரசி ராடன்டிவி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவி என்கிற நிலைகளை எல்லாம் உணர்ந்துதான் அவர்களுக்கு உரிய மரியாதையை படப்பிடிப்பில் கொடுத்தேன்.

என்னுடைய உதவி இயக்குனர்களிடம் சீனியர் நடிகரான ராஜேஷ் பெயருடன் ராதிகா மேடத்தின் பெயரை போடச் சொன்னேன்.  தனித்து டைட்டில் கார்டில் போட்டு இருக்க வேண்டும் என்பது சரத்சாரின் விருப்பம் என  முன்பே சொல்லி இருந்தால் செய்து இருப்போம்.  நானே ராதிகா மேடத்துக்கு ' இது இப்போ பேச வேண்டிய விஷயமே கிடையாது. ஏதோ கவனக்குறைவால் நடந்துவிட்ட ஒன்று. சரத்சார் இப்படி கருத்து தெரிவித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று மெசேஜ் அனுப்பினேன்" என்று  தனது தரப்பைச் சொன்னார்.

- சத்யாபதி

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!