விஜய்க்காக பத்து வருஷம் காத்திருந்த இயக்குனர் ...


                                பரதன் இயக்கத்தில் 'விஜய் -60' படத்தில் நடித்து வருகிறார் விஜய்.  திருநெல்வேலி  பின்புலத்தில் ஒரு விஜய்யும், நகரத்தில் கல்லூரி மாணவராக ஒரு விஜய்யும் நடித்து வருகிறார்கள்.  விஜய் படித்துவரும் அதே கல்லூரியில் மாணவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் அவரது தாய்மாமன் வேடத்தில் தம்பி ராமையா நடித்து வருகிறார். 'விஜய் -60' படத்தின் முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சி  மகாபலிபுரத்தில் இருக்கும் கல்லூரியில் நடந்தது.  தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.


                               இயக்குனர் தரணியிடம் 'கில்லி', 'தூள்' படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியவர் பரதன். அப்போது இருந்தே விஜய்யும், பரதனும் நெருக்கமான பழக்கம்.  விஜய் தனக்காக ஒரு கதையை பரதனிடம்  தயார் செய்யச் சொல்லி இருந்தார்.  விரைவில் விஜய்க்கு பொருத்தமான பக்காவான ஒரு கதையைச்  ரெடி செய்து கதை  சொல்ல காத்திருந்தார். விஜய் அழைத்தார் முழுக்கதையையும் கூர்ந்து உன்னிப்பாக கேட்டு முடித்த விஜய், ' அதுசரி வேற கதை ஏதாவது வெச்சு இருக்கீங்களா' என்று கேட்க  ' இன்னொரு  டபுள் ஆக்ட் கதை இருக்கு. ஒண்ணு பாஸிட்டிவ், இன்னொன்னு நெகட்டிவ் ரோல் உங்களுக்கு செட் ஆகாது' என்று  சொன்னார் பரதன். 'அப்படியா பரவாயில்லே அந்தக்கதையை சொல்லுங்க' என்று  விஜய் மிண்டும்  கேட்க  பரதன் அந்தக கதையையும்  முழுமையாகச் சொன்னார்.


                             கதையைக்கேட்டு முடித்த  விஜய் 'பரதன் ரெண்டாவது கதையைத்தான் சேர்ந்து செய்யுறோம்' என்றார். 'சார் உங்களுக்கு மக்கள் மத்தியில பாஸிட்டிவ் இமேஜ் இருக்கு.  நீங்க வில்லனா நெகட்டிவ் ரோலுல நடிச்சா கண்டிப்பா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க" என்று எவ்வளவோ விஜய்யிடம் கெஞ்சிப் பார்த்தார், பரதன். விஜய் பிடிவாதமாக ஒப்புக்கொள்ளவில்லை.  அப்போது அப்பச்சன் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு காத்து இருந்தார்.  விஜய் தேதி தர, பரதன் இயக்கத்தில் 2007-ல் அப்படி  வெளிவந்த திரைப்படம்தான் 'அழகிய தமிழ்மகன்' .  ஹீரோவாக நடித்த விஜய்யை ரசித்த மக்கள் ஏனோ வில்லன் விஜய்யை வெறுத்தனர் அதனால் படம் தோல்வி அடைந்தது.  'அழகிய தமிழ்மகன்' படத்துக்கு பிறகு அதிதி என்ற சிறு பட்ஜெட் படத்தைத் தவிர கடந்த ஒன்பது வருடங்களாக வேறுபடம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் தனித்து இருந்தார், பரதன். 


                            முதலில் பரதன் சொன்ன கதை பிரமாதமாக இருந்ததே நாம்தான் இரண்டாவதாக சொன்ன கதையை தேர்வு செய்து அவருடைய எதிர்காலத்தை வீணடித்து விட்டோமோ என்கிற மன உளைச்சல் விஜய்யை வாட்டி வதைத்தது. பரதன் தோல்விக்கு காரணமான நாமே அவரது வெற்றிக்கு காரணமாக இருந்தால் என்ன? என்று விஜய் மனசுக்குள் எழுந்த கேள்விக்கான விடைதான்  'விஜய்-60' திரைப்படம்.பத்தாண்டுகளுக்கு முன்பு எந்தக் கதையை நிராகரித்துவிட்டு, அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் நடித்தாரோ, அதே கதையில் தான் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.   பரதன்  படத்தின் தலைப்பு 'விஜய்-60' என்று  இப்போது சொல்லப்பட்டாலும் ரிலீஸாகும் நேரத்தில் எம்.ஜி.ஆர் நடித்து பெருவெற்றி பெற்ற 'எங்க வீட்டு பிள்ளை' தலைப்பை சஸ்பென்ஸாக அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.  தற்போது அ.தி.மு.க ஆட்சி நடப்பதால் தானாகப்போய் தண்டவாளத்தில் தலை வைக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள்.  எம்.ஜி.ஆர்  நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை தயாரித்த நாகிரெட்டியாரின் வாரிசு வெங்கட் ரமண ரெட்டி விஜய் படத்தை தயாரிப்பதால் அ.தி.மு.க தரப்பிலும், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பாது என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.


- சத்யாபதி  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!