‘‘கேரளா என்டெ தேசமாக்கும்; பினராயி விஜயன் என் முதல்வராக்கும்!’’ - நெகிழும் கமல்!

கமல்ஹாசன் விஷயத்தில் மட்டும் படம் ரிலீஸ் ஆனாலும் சிக்கல்; விளம்பரத்தில் நடித்தாலும் சிக்கல்; கருத்துச் சொன்னாலும் சிக்கல்; விருது வாங்கினாலும் சிக்கல்! இப்போது லேட்டஸ்ட்டாக,  கமல் கேரள முதல்வருக்கு எழுதிய கடிதத்தை, நெட்டிசன்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஃபிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே’ விருதை, தமிழில் சிவாஜிக்குப் பிறகு கமல் வாங்கியிருப்பதை கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று மொத்தத் திரையுலகினரும் கொண்டாடிக் கொண்டிருக்க, ‘தமிழக அரசுக்கு, கமலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கக்கூட நேரம் இல்லை, பாவம்’ என்று சீமான் போன்ற போராளிகள் நக்கலடித்துக் கொந்தளித்து விட்டார்கள். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியே. இதன் மூலம் இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது!’’ என்று கமலுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். 

இதற்குப் பதிலாக கமல் எழுதிய கடிதம்;

‘‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி! ‘சே.. என்னே ஒரு மனிதம். வேற்று மாநிலத்து முதல்வர், தமிழக நடிகரின் சாதனைகளை மனம் திறந்து உண்மையாகப் பாராட்டுவது எவ்வளவு அழகு!’ என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதில் எனக்கு மாற்றுக் கருத்தொன்று உண்டு என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ‘‘திரு.பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர். நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள் - கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று?’’ என்று வழக்கம்போல் ‘கமல்’ மாதிரியே கடிதம் எழுதியிருக்கிறார் கமல்.

‘எண்டே தேசம் கேரளம்; எண்டே ஃபுட் புட்டு; எண்டே சாமி சோட்டாணிக் கரை பகவதி’ என்று விவேக் ஒரு படத்தில் காமெடியாகச் சொல்வதை, ரியலாகவே செய்து விட்டார் பரமக்குடியைச் சேர்ந்த உலகநாயகன்!  

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!