'தி கிரேட் ஃபாதர்' யார் தெரியுமா? - #HBDMammookka

'மம்மூக்கா' என ரசிகர்களினால் செல்லமாக அழைக்கப்படும் 'அழகன்' மம்மூட்டியின் பிறந்ததினம் இன்று. எர்ணாகுளம் தொடங்கி அண்டார்டிக்கா வரையில் அகில உலகமெங்கும் பரவியிருக்கும் டோட்டல் மல்லுக்களும் இந்த 65 வயது இளைஞனின் பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டுள்ளனர். மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி 65-வது பிறந்தநாளான இன்று அவரது புதிய படமான 'தி க்ரேட் ஃபாதர்' அறிவிப்பு வெளியாகியுள்ளது போனஸ்.

மம்முட்டி சிறந்த நடிகர், கடுமையான வாசிப்பாளர், தொழிலில் அதிக பற்றுகொண்டவர்.இவை எல்லாவற்றையும் விட ஈரம் கசியும் மனதுக்கு சொந்தக்காரர்.

மம்முட்டிக்கு கார் ஓட்டுவதென்றால் அவ்வளவு பிடிக்கும். அதிலும் அதிவேகமாக ஓட்டுவது அவரது பொழுது போக்குகளில் ஒன்று. ஒரு முறை கோழிக்கோட்டிலிருந்து நள்ளிரவில் ஷுட்டிங் முடித்து அவர் மட்டும் தனியாக மஞ்சேரி நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். கேரள சாலைகளின் வளைவுகள்தான் உலகப்பிரச்சித்தி பெற்றதாயிற்றே, அப்படி ஒரு வளைவில் வேகமாக திரும்பும் போது ஒரு உருவம் சாலையை மெதுவாக கடந்து கொண்டிருக்க அவசரமாக ப்ரேக் அடித்தும் அதன் மீது லேசாக மோதியே நின்றிருக்கிறது கார். இறங்கி ஓடிப்போய் மம்முட்டி பார்த்தால் ஒரு முதியவர். நல்லவேளையாக அவருக்கு ஒன்றுமில்லை, ஆனால் சாலை ஓரத்தில் அவரது மனைவி கடும் வலியோடு துடித்துக்கொண்டிருந்திருக்கிறார். மருத்துவமனைக்கு செல்லுவதற்கு வண்டியில் லிப்ட் கேட்க வந்தவர்தான் அவரின் காரில் விழுந்திருக்கிறார். உடனடியாக இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு அந்த அகால நேரத்தில் மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆஸ்பத்திரியில் இறக்கி ஸ்ட்ரெச்சரில் ஏற்றி உள்ளே போன அந்த கிழவனார் சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நிம்மதியுடன் வந்து இவர் யார் என்று தெரியாமல் உதவிக்கு நன்றி சொல்லி பழைய நைந்து போன இரண்டு ரூபாய்த்தாளை கொடுத்துள்ளார். அதை பெற்றது தான் வாழ்வில் பெற்ற பெரும் பேறு என பெரும் பொக்கிஷம் போல அதை சேமித்து வைத்துள்ளார். 

அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் ஒரு கொலை வழக்கு நடந்து வந்தது, ஒரு பேராசிரியரின் மகன் இன்னொருவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கிறார். அது அந்த பேராசிரியருக்கு தெரிய வந்து கண்டிக்கிறார், ஆனால் மகன் கேட்கவில்லை. இதனிடையே தன் உறவுக்கு தடையாக இருப்பதால் அந்த பெண்ணின் கணவனை பேராசிரியரின் மகன் கொன்று விடுகின்றார். இந்த வழக்கு நடக்கிறது, விசாரணையில் அரசுத்தரப்பால் அந்த பையன்தான் குற்றவாளி என சரிவர நிரூபிக்க முடியவில்லை. பேராசிரியரின் மகனுக்கு விடுதலை கிடைக்க இருந்த நிலையில் தன் மகனாக இருந்தாலும் ஒரு சின்னக்குழந்தையின் தந்தையை கொலைசெய்தவன் விடுதலை ஆகிவிடுவதை அந்த பேராசிரியரினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வழக்கில் தன் மகனுக்கு உள்ள தொடர்பை துவக்கத்தில் இருந்து பல்வேறு ஆதாரங்களை சமர்பித்து இருவருக்கும் இருந்த தவறான உறவை பல்வேறு சாட்சியங்கள் மூலம் வெளிப்படுத்தி, கொலை செய்தது தன் மகன்தான் என நிரூபித்தார். அவரின் மகனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இது குறித்து அந்த பேராசிரியரின் மனம் குறித்தும், சொந்த மகனுக்கே ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்த அவரின் அறம் குறித்தும் விரிவான கட்டுரையை மலையாள இதழுக்கு எழுதிய மம்முட்டி இறுதி பாராவில் இப்படி குறிப்பிட்டிருந்தார். 


"வாய்ப்பிருந்தும் தன் மகனைக் கைவிட்ட தந்தையல்ல அவர். அறத்தோடு வாழும் ஒரு தகப்பனின் வெந்துருகும் நெஞ்சம் எப்படிப்பட்டதென்று படம் பிடித்துக் காட்டிய மனிதர். நினோமேத்யூ ( பேராசிரியரின் மகன்) இனியும் சட்டத்தின் துணைகொண்டு நீண்டு பயணிக்கலாம். ஆனால் அத்தகப்பன் நீதிமன்றத்தில் கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கல்லில் செதுக்கியது போலிருக்கும்.

‘நான் சொன்ன வார்த்தைகள் எதையும் என் மகன் கடைசிவரை கேட்கவேயில்லை’’

ஒரு பொறுப்பான தகப்பனாக இந்த நிகழ்வு அவரை மிகவும் உலுக்கி எடுத்துவிட்டது. வெறும் கட்டுரையோடு நின்று விடக்கூடாது என முடிவெடுத்த மம்முட்டி, தனது 65வது பிறந்தநாளான இன்று அந்த கதையை அடிப்படையாக கொண்டு "தி க்ரேட் ஃபாதர்" என்கிற படத்தை துவக்கிவிட்டார். 

ஹேப்பி பர்த் டே மம்மூக்கா!!!

-வரவனை செந்தில்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!