வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (09/09/2016)

கடைசி தொடர்பு:15:55 (15/09/2016)

விஜயகாந்த் உறவினரை முன்னிறுத்தும் விஷாலின் வியூகம்!

 

அடுத்த ஆண்டு ஜனவரியில் தமிழ் திரைப்பட  தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் 'நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்டிடுவோம்...' என்று களத்தில் இறங்கி இருக்கிறார். நடிகர் சங்கத் தேர்தலின்போது நாசர், விஷால் அணிக்கு  ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் ஜே.கே.ரித்தீஷ். அப்போது 'நான் நடிகர் சங்க செயலாளர் ராதாரவிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தேன்' என்று சொன்னார். அதற்கு 'நான் ரித்தீஷ் என்பவர் மூகத்தையே பார்த்தது இல்லை' என்று ராதாரவி பதிலடி கொடுத்தார்.

                                   நேற்றுவரை நாசர், விஷால் அணியோடு ஒன்றுசேர்ந்து நின்று கொண்டிருந்த ஜே.கே.ரித்தீஷ் இப்போது அவர்களுக்கு எதிராக நடிகர் சங்கத்தின்மீது ஊழல் புகார் கொடுத்துள்ள வாராகியோடு கரம் சேர்த்துக் கொண்டு ராதாரவியை நேரில் சந்தித்தார். திடீரென   'தலைவர் பதவிக்கு ஜே.கே.ரித்தீஷ்  போட்டியிடப் போகிறார்' என்றும் அவருக்கு ஆதரவாக ராதாரவி பிரச்சாரம் செய்வார் என்றொரு செய்தியை கிளப்பி விடுகிறார்கள்.

 உண்மையில் என்னதான் நடக்கிறது?

                                  தமிழ்பட தயாரிப்பாளர் என்று  சென்சார் சர்டிபிகேட் இல்லாததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்றுவரை  உறுதி செய்யப்படாத உறுப்பினர்தான் ஜே.கே.ரித்தீஷ். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் கார்டு இல்லாத ஒருவர்  வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுகிறார்.  பல ஆண்டுகளுக்கு முன்  திரைப்படம் தயாரித்தவர்கள் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வேண்டுமானால் போட்டியிடலாம். கடந்த 5 ஆண்டுகளுக்குள் திரைப்படங்கள் தயாரித்தவர்கள் மட்டும்தான் தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் தலைவர், துணைத் தலைவர்கள், செயாலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் தகுதி பெற்றவராவார்.

                               அடுத்து நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் பதவி வகித்துக் கொண்டு இருக்கும் விஷால், தயாரிப்பாளர் சங்கத்துக்கான பதவிக்கு போட்டியிட முடியுமா?  தற்போது வகித்துவரும் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேண்டுமானால்  போட்டியிடலாம். அதுபோலத்தான்  முன்பு தமிழ் திரைப்பட  இயக்குனர்கள் சங்கத்தில் பொறுப்பு வகித்துவந்த  அமீர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பெப்சி அமைப்பு தேர்தலில்  தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமீரை ஃபாலோ செய்து விஷாலும் தனது நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்வாரா? நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் விஷால் சொல்லுக்கு  நாசர் சம்மதிப்பாரா? என்பதுதான் மெகா கேள்வி?

                             'தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றுவேன்..' என்று சூளுரைக்கிறாரே அப்படி விஷால் என்னதான் திட்டமிட்டு இருக்கிறார்?  என்று அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். 'நிச்சயமாக விஷால் ராஜினாமா செய்ய மாட்டார். நடிகர்களில் பலர் தயாரிப்பாளர்களாக சங்கத்தின் உறுப்பினர்காளாக இருக்கின்றனர் அவர்களின் ஓட்டுக்களை ஒன்று திரட்டும் பணியில் இறங்குவார். பலமான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார், விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர்,  ஜனவரியில் வரவிருக்கும் சங்கத்தின் தேர்தலில்  தலைவர் பதவிக்கு  சுதீஷை  நிறுத்தும் எண்ணத்தில் இருக்கிறார். அதற்காக அவரை விஷால்  ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார்.  சட்டமன்ற தேர்த்தலில் தோல்வியைச் சந்தித்து துவண்டு போயிருக்கும்  விஜயகாந்த் குடும்பத்துக்கு, சினிமா தேர்தல் இளைப்பாறும் தண்ணீர்  பந்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சத்யாபதி          

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்