பாஸ் உங்களை எவ்வளவு மிஸ் பண்றோம் தெரியுமா? #6YearsofBossEngiraBaskaran

உங்களைப் பார்த்துக் கொண்டாடி ஆறு வருசமாச்சே பாஸ்! கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ளே காலம் ஹைவேயில் போற ஆடி கார் மாதிரி எவ்வளவு ஸ்பீடா போய்டுது. நண்பேன்டா! என்ற ஒற்றை வசனம் மூலம் நட்பு பாராட்டி, வேல வெட்டியில்லாத நண்பனுக்கு கேரன்டி கையெழுத்துப் போட்டால், அவன் கூடவே திரிஞ்ச நண்பன், சின்னாபின்னமாக வேண்டியிருக்கும் என்ற பேருண்மையை உலகுக்கு உணர்த்தி இன்னையோட ஆறு வருசமாச்சுங்களே பாஸ்.

* 'பாஸ் என்கிற பாஸ்கரன்' அப்படினு படத்துக்குப் பேர் வெச்சாலும், இந்தப் படம் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்தான். படத்தில் ஆர்யா, சந்தானம் என இரு கதாநாயகர்கள். வெட்டியா ஊர் சுத்துற ஹீரோ எப்படிக் காதலியோட சேர்ந்தார்ங்கிறதுதான் படத்தோட கதைனு ஒரே வரியில் சொல்லிடலாம். ஆனா அதை இரண்டரைமணி நேரப் படமா எடுத்து, கொஞ்சம்கூட சலிக்காத காட்சியமைப்பால், நம்மை சீட் நுனியில் உட்கார வெச்ச அந்த மகா அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்டம்தான்.

* ஹீரோ பல வருசமா பரிட்சை எழுதுவார்... எழுதுவார்... எழுதிக்கிட்டே இருப்பார். ஆனா பாஸ் பண்ண மாட்டார். பரிட்சையில்தான் பாஸ் பண்ண முடியலை, பேர்லயாவது பாஸ் இருக்கட்டுமேனுதான் பாஸ்கரன்ற பேரை பாஸ்னு சுருக்கி வெச்சுருப்பாருங்கிற விஷயம் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

* நயன்தாரா! கதாநாயகன் உடன் அரியர் எக்ஸாம் எழுத வந்த ஸ்டூடன்ட் என நினைத்தால் எக்ஸாமினரே அவங்கதான். மாணவர் ஆர்யா, ப்ரொஃபசர் நயன்தாராவைப் பார்த்ததும் காதலில் தலைகீழாகக் குதிக்கிறார். 'பிரேமம்' படத்துக்கான ஆணிவேராக சிம்புவின் 'வல்லவன்' அமைந்ததென்றால், அதன் சல்லிவேரே இந்தப் படமாகத்தான் இருந்திருக்குமென உலகப்பட ரசிகர்கள் என்றாவது ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.

* கதையே இல்லாமல் படம் எடுக்க பத்து வழிகள்னு மற்ற இயக்குநர்களுக்கு இந்தப் படம் மூலமாக ராஜேஷ் தன்னம்பிக்கை ஊட்டினார் என்பது ஆணித்தரமான உண்மை. மக்களின் கலாசாரத்தைத் திரையில் கொண்டுவருவதுதான் ஒரு கலைஞனின் உண்மையான வெற்றி. அந்த வகையில் இளைஞர்கள் ரத்தத்தில் சொட்டுச் சொட்டாய் கலந்துள்ள ஆல்கஹால் பற்றி ஒவ்வொரு படத்திலும் டாஸ்மாக்கில் சரக்கடிக்கும் காட்சிகள் வைத்து, சைட் டிஷ் சாப்பிட்டபடி படம் பார்க்க வைத்ததில் இயக்குநருக்கு மாபெரும் வெற்றி.

* தல தளபதி ரசிகர்கள் ஒன்றுசேர்வதென்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம். தங்களுக்குள் ஆயிரம் பிரச்னை வந்தாலும், வெளியிலிருந்து எவனாவது கிளம்பி பஞ்சாயத்து பண்ணவந்தால், ஒன்றுசேர்ந்து கருத்து கந்தசாமியை சுளுக்கெடுப்பார்கள். தல-தளபதி சலூன் ஓனரான நல்லதம்பி, இருவரது ரசிகர்கள் மத்தியில் சிக்கி சிந்தும் ரத்தத்தின் சூடு இந்த உண்மையை உணர்த்துகிறது. இதைச் சொன்னால் என்னைக் கல்லால் அடிக்க வருவார்கள்.

* பொதுவாக ஒரு படத்திலிருந்து மீம் எடுப்பார்கள். ஆனால் இந்தப் படம் முழுவதிலும் இருந்தே மீம் எடுக்கலாம். மீம் பசியெடுத்த நெட்டிசன்களுக்கு வருசக்கணக்கில் இந்தப் படம் தீனி போட்டது வரலாற்று உண்மை.

* பேக்கரி டீலிங் செய்த வடிவேலு வழியில், சலூனிற்காக சந்தானம் செய்த டீலிங்கை மறக்க முடியுமா? இனிஷியல் பிரச்னையைத் தீர்த்து, படம் முழுக்க நண்பனின் காதல் பிரச்னையைத் தீர்த்து, நண்பன் வாங்கிய கடனைத் தீர்த்து... என பல குறைகளைத் தீர்த்து வைப்பதுதான் சந்தானத்தின் வேலை.

*  அப்புறம் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். படத்தின் ஹீரோ ஆர்யாதான் என்பதை அடிக்கடி நினைவூட்டியதே படத்தில் வரும் பாடல்கள்தான். நயன்தாராவுடன் சந்தானம் டூயட்டில் ஆடியிருந்தால் சர்வநிச்சயமாக அவர்தான் ஹீரோவாகத் தெரிந்திருப்பார்.

*  இயக்குநர் ராஜேஷ் கதை, ஹீரோயின் இல்லாமக்கூட படம் எடுப்பார். ஆனா சந்தானம் இல்லாம படம் எடுக்க மாட்டாருங்கிற பேரைக் கொடுத்ததும் இந்தப் படத்தோட வெற்றிதான்!

* இந்த ஒரு மாவை வைத்தே வரும் காலத்தில் ஏகப்பட்ட தோசைகளைச் சுட்டுவிடலாம்கிற தன்னம்பிக்கையை இயக்குநருக்குக் கொடுத்த வகையில் படம் உண்மையிலே பாஸ்தான்!

* அரியரே எழுதி பாஸ் பண்ணாதவன், டுட்டோரியல் ஆரம்பிச்சு லைஃப்ல ஜெயிக்கலாம்ங்கிற தன்னம்பிக்கை ஊட்டிய  இந்தப் படத்தை ஆறு வருடங்கள் என்ன... ஆயிரம் வருடங்கள் ஆனாலும் 'வெற்றிக்குறி' வைத்து உன்னை வரவேற்போம் பாஸ்!

-கருப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!