Published:Updated:

'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவது தவறு!'- ஜே.கே.ரித்தீஷ்

Vikatan
'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவது தவறு!'- ஜே.கே.ரித்தீஷ்
'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவது தவறு!'- ஜே.கே.ரித்தீஷ்

சர்ச்சைகளுக்குள்ளேயே சிக்கிக் கிடப்பது சினிமாவும் அரசியலும். அந்த இரண்டிலும் கால்பதித்து, மற்றவர்களைவிட கூடுதல் சர்ச்சைகளை ஒட்டிக் கொண்டு திரிபவர் ரித்திஷ். இப்போது சர்ச்சையே அவர் பக்கம் போய் ஒட்டிக் கொண்டுள்ளது. விரைவில் நடக்கவிருக்கும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலை எதிர்த்து ரித்திஷ் போட்டியிடப் போவதாக ஒரு தகவல். அது தொடர்பாக அவரைச் சந்தித்தோம். 

“நான் நடிச்ச படத்தை, மொத தடவ தியேட்டர்ல போய் பாத்தப்ப, சினிமாவுக்கும்-தமிழ் மக்களுக்கும் நாம எவ்வளவு பெரிய கெடுதல் பண்ணிருக்கோம்னு எனக்குப் புரிஞ்சது... ஆனாலும், ஜெமினி ‘பிரிட்ஜி’ல ஒட்டி இருந்த சினிமா போஸ்ட்டர, அரை மணி நேரம் நின்னு வேடிக்கை பாத்த ஒரு கிராமத்தான், சினிமாவுக்குள்ள வந்து, மொதப் படத்துலயே,  இந்தளவுக்கு நடிச்சது பெரிசுதானனு என்னை நானே தேத்திக்கிட்டேன் சார்” என வெள்ளந்தியாகப் பேசித் தொடங்கியவர், நடிகர் சங்க விவகாரம், அரசியல், சினிமா என்று நாம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ரகளையாக பதில் சொன்னார்.

"நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை ஆதரிக்க என்ன காரணம்? "

"ராதாரவியும், சரத்குமாரும்தான் எனக்கு நல்ல பழக்கம். அவங்களுக்கு ஓட்டுப்போடனும்னுதான் இருந்தேன். ஆனா, சேலத்துக்கு ஓட்டு கேட்கப் போன இடத்துல எனக்கு ஒரு உண்மை தெரியவந்தது. நான் நாடக  நடிகர்களுக்கு கொடுத்த, பத்து லட்சத்த அவங்களுக்கு ராதாரவி கொடுக்கல. அது எனக்கு சரத்குமார் அணி மேல கோபத்த உண்டாக்குச்சு. சரியா, அந்த நேரத்துல, நடிகர் ரமணா மூலமா விஷால் என்னைச் சந்தித்தார். நானும் விஷாலை ஆதரிச்சேன். அதே நேரத்துல, எங்க கட்சியில இருந்து என்னைக்கூப்பிட்டு,  நடிகர் சங்கத் தேர்தலில் நிக்க வேணாம்னு சொன்னாங்க. நானும் அதுக்கு கட்டுப்பட்டு தேர்தல்ல போட்டியிடல. இன்னைக்குவரை, சங்கத்துக்குள்ளேயே போகல. ஏன்னா, நம்மாளதான் ஜெயிச்சாங்க. அதுனால சங்கத்த கைப்பத்திட்டார்னு சொல்லக்கூடாதுல்ல. அதுக்குத்தான்." 

"நடிகர் சங்கத்தில் இப்போது பிரச்னை செய்யும் வராகியை நீங்கள் தான் இயக்குகிறீர்கள் என்று சொல்கிறார்களே?"

"வராகி ஒரு போராளி. பல பிரச்னைகளுக்காக உயிரக்கொடுத்து போராடியிருக்கிறார். பல வருஷமா எனக்கு அவர் நண்பர். எங்கிட்ட நடிகர் சங்கம் பற்றி புகார் சொன்னார். “அதுக்கும் எனக்கும் தொடர்பு இல்ல. அதுக்குத் தனியா நிர்வாகி இருக்காங்க. நீங்க அவங்ககிட்ட போய் புகார் சொல்லுங்க. கேள்வி கேளுங்கன்னு” சொன்னேன். மார்ச் மாதத்தில் இருந்து சங்கத்துக்கு கடிதம் எழுதினார். கிரிக்கெட் போட்டிய ஒலிபரப்ப, நாலு மாநிலத்துல இருக்கும் டி.வி-க்களிடம் கொட்டேஷன் வாங்கி, நல்லவிலைக்கு அதை விற்காமல், சன் டி.வி.க்கு எப்படி கொடுத்தீர்கள்ன்னு கேள்வி கேட்டார். அதுக்கு அவர்கள் பதில் சொல்ல, அவர சங்கத்துல இருந்து வரச்சொன்னாங்க. அப்போக்கூட நண்பர்கள் மூலமாக, வராகிக்கு சரியான பதிலைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். சங்க நிர்வாகிகள் அனைவரும் முறையாக பதில் சொல்வார்கள் என்று விஷால் தரப்பில் சொன்னார்கள். ஆனால், நடந்தது வேறு. வராகி அங்கபோனாப்ப, இவர் யார் மீது புகார் கொடுக்கப்போனாரே, அவரே இவருக்கு பதில் சொல்லி இருக்கிறார். அதுல கோபமான வராகி என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். நல்ல காரியத்துக்காக பண்ணிருக்கோம். கொஞ்சம் பொறுமையா இருங்க. எந்தப் பிரச்னையும் இப்போ வேண்டாம்ன்னு சொன்னேன். உடனே, அப்ப நீங்களும் நடக்குற தப்புக்கு உடந்தையான்னு என்னக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை ரெண்டுபேரும் கோர்ட்டுக்குப் போனது தப்பு. சங்கத்துக்கு நிதி திரட்டும் சக்தி, விஷால் கார்த்திக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், அவங்க நிர்வாகத்த சரியா பண்றாங்களான்னு சொல்ல முடியாது. "

"ராதாரவி பிறந்த நாளன்று அவரை வீட்டில் சந்தித்த போது,தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்ன பேசினீர்கள்?"

"நடிகர் சங்கத் தேர்தல் முடிஞ்ச ரெண்டு நாளில், ராதாரவி அண்ணே, என்னைக்கூப்பிட்டார். அவர் தோக்குறதுக்கு காரணமே நான்தான் அப்டினு தெரிஞ்சும் என்னை அழைத்துப் பேசினார். அப்டினா அவருக்கு எவ்ளோ பெரிய மனசு. அதுதான் அவர் பிறந்தநாளுக்கு நேரில் போய் வாழ்த்துச் சொன்னேன். அவர் என்னைத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிக்க சொல்லவில்லை. ஆனா, விஷால் ரெண்டு இடத்துல கால வைக்கக்கூடாது. இப்போ இருக்குற இடத்தை அவர் முதல்ல சரி பண்ணனும். அகல உழுறத விட... ஆழ உழனும்னு பழமொழியே இருக்கு. இதுவே இன்னும் சரியாகல.. அதுக்குள்ள எதுக்கு அங்க வர்ரார். என்னைப்பொறுத்தவரை கட்சி என்னை அனுமதித்தால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன். தயாரிப்பாளர் சங்கக் கூட்டங்களுக்கு இப்போவே ரெகுலரா போக ஆரம்பிச்சுட்டேன். இன்னும் ஒரு மாசத்துல அங்க இருக்க எல்லாப் பிரச்னையையும் சொல்லுவேன்."

”உங்கள் சினிமா அறிமுகம் எப்படி நடந்தது?””

"சினிமான்னா என்னன்னே தெரியாது.நண்பர் சின்னி ஜெயந்தாலதான் அது நடந்துச்சு. முதல் படம் வர்றதுக்கு முன்பே, பெரிசா விளம்பரம்லாம் கொடுத்திட்டேன். எதுக்கும் நம்ம நடிச்ச படத்த, நாமாளே ஒரு தடவ பாத்துடலாம்னு நெனச்சு போட்டுப் பாத்தேன். எனக்கே சிரிப்பா இருந்துச்சு, அப்ப, சின்னி ஜெயந்த் சார்கிட்ட, படத்தோட டைட்டிலுக்கு கீழ, ‘ட்ரூ பனிஷ்மென்ட்’ அப்டின்னு ஒரு கேப்ஷன் போடுங்கன்னு சொன்னேன். அது யாருக்காகன்னு கேட்டார். பாக்கிறவங்களுக்குத்தான் சார். தியேட்டருக்கு வர்றவன்கிட்ட நான் கேக்குற மன்னிப்பா அது இருக்கட்டும். அதுனால, அதப்போடுங்கன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் ரெண்டாவது படம் நாயகன். அத தெளிவா பண்ணேன்"(சீரியஸாகவே சொல்கிறார்)

”தொழிலதிபர், சினிமா கதாநாயகன் சரி... தி.மு.கவில் எம்.பி-ஆகிவிட்டு, அ.தி.மு.க-வுக்கு தாவிவிட்டீர்களே.. ஏன்?” 

"அழகிரி அண்ணே, பழக்கத்துலதான் நான் அரசியலுக்குள்ள நுழைஞ்சேன். அவர்தான் எனக்கு தி.மு.க-வில எம்.பி. சீட் வாங்கிக்கொடுத்தார். ஆனா, இப்போ அந்தக் கட்சி ஸ்டாலின் கைக்குப் போயிருச்சு. அதுக்கு அப்புறம், அங்கயிருந்து வெளிய வந்துட்டேன். தி.மு.க-வில கலைஞர் குடும்ப வாரிசுகளே 250 பேர் இருக்காங்க. ஆனா, தமிழ்நாட்டுல இருக்கிற தொகுதிகளே 234 தான். அவங்களுக்கே போட்டியிட தொகுதி ஷார்ட்டேஜ். இதுல நமக்கு என்ன கிடைக்கப்போகுது. அதனால, இனி அங்க இருந்து பிரயோஜனம் இல்லன்னு முடிவு பண்ணி வெளிய வந்துட்டேன். எந்தத் தொழிலுமே பண்ணாத குடும்பம் கலைஞர் குடும்பம். ஆனா, அந்தக் குடும்பத்துல இருக்க எல்லா வாரிசுகளுக்கும் கோடிக்கணக்குல சொத்து இருக்கு. ஸ்டாலின் தன்னோட சொத்து மதிப்பு 4 கோடி அப்டினு கணக்கு காட்றார். ஆனா, அவர் பையன் எடுக்குற படத்துல ஹீரோயின் சம்பளமே 3 கோடி. படத்தோட மதிப்பு 30 கோடி. வருஷத்துக்கு 3 பாடம் எடுக்கிறார். எந்தப் படமும் ஓடல. மறுபடியும் படம் எடுக்க அவருக்குப் பணம் வேணும். அதுக்கு ஊழல் பண்ண ஆரம்பிப்பாங்க. அதனால, தமிழக மக்கள் எல்லாம், உதயநிதி படத்த கொஞ்சமாவது ஓட வெச்சுருங்க. அப்பத்தான் அவங்க ஊழல் பண்ணாம இருப்பாங்க. "

"கலைஞருக்கு பிறகு தி.மு.க-வில் மாற்று அழகிரியா? ஸ்டாலினா?"

"அழகிரியைத்தான் சொல்வேன். அவரோட பெருந்தன்மை ஸ்டாலின்கிட்ட கிடையாது. அதவிடுங்க, யார் வந்துதான் இனி என்ன பிரயோஜனம். அந்தக் கண்மாயே அழிஞ்சு போச்சு. அதுல இருக்க மீனெல்லாம்  பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. இனி எந்தக் கட்டுமரத்துலு போனாலும், கரைசேர முடியாது. "

"உங்களுக்கு நீங்களே கொடுத்த விளம்பரம்தானே உங்களுக்கான முகவரி?"

"முயற்சி செஞ்சா வெற்றி பெறலாம்ன்றதுக்கு உதாரணம் அப்துல்கலாம் அய்யாதான். அவர்கிட்ட இருந்துதான் நான் கத்துகிட்டேன். இன்னைக்கு பேஸ்புக், வாட்ஸ்அப் அப்டினு என்னென்னமோ இருக்கு. ஆனா, அப்போ தட்டி போர்டு மட்டும்தான் இருந்துச்சு. அதை நான் பயன்படுத்திக்கிட்டேன். என்ன மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்தேன். அப்பத்தான மக்களுக்கு என்னத் தெரியும். இப்ப நடிகர் பிரபு இருக்கார்ன்னா, நடிகர் திலகம் சிவாஜி வாரிசுன்னு அவர எல்லாருக்கும் தெரியும். நம்மள யாருக்குத் தெரியும்? நான்தான்... நான்தான்.. அப்டினு போய்ப்போய் சொன்னாதான் தெரியும். சொல்லவேண்டிய காலகட்டத்துல சொன்னாதான் வளர முடியும். இல்லன்னா முடியாது. நான் சின்ன வயசுல டி.ராஜேந்தரோடு தீவிர ரசிகன். இன்னமும் எந்தக்கூட்டத்துலயும் அவர் வெட்கப்படாம நடிப்பாரு... ஆடுவாரு... பாடுவாரு... அது எனக்குப் பிடிச்சது. கூச்சப்படாத தன்மை, அப்புறம் கொஞ்சம் விளம்பரம். இது ரெண்டும் இருந்தாத்தான், ஒருத்தன் இப்ப வளரமுடியும். "

-பிரம்மா 
படங்கள்: ஆ.முத்துக்குமார்

Vikatan