“அஜித் இடத்திற்கு வர நிறைய உழைக்கணும்” ஜெய்யை மேடையில் திட்டிய சிவா! #க்விக்செவன்

 என்னம்மா இப்படிப்பண்றீங்களேமா... ஒரே டயலாக்கில் படு வைரலடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.  ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே  படங்களைத் தொடர்ந்து, இவரின் இயக்கத்தில் வரவிருக்கும் மூன்றாவது படம் “அம்மிணி”, அக்டோபர் 14 ரிலீஸ். 82 வயதான அம்மிணி கதாபாத்திரத்தில் “விண்ணைத்தாண்டி வருவாயா”வில் த்ரிஷாவிற்கு பாட்டியாக நடித்த சுப்புலட்சுமி நடிக்கிறார். 57வயதான சாலம்மா கதாபாத்திரத்தில் லட்சுமியே நடிக்கிறார்.  இந்த இரண்டு பேரும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமே கதைக்களம்.


 “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தைத் தொடர்ந்து, எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துவந்த படத்திற்கு” சரவணன் இருக்க பயமேன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. எழிலும் உதயநிதியும் இணையும் முதல் படம். ரெஜினா, ஸ்ருஷ்டி என இரண்டு நாயகிகள். எழில் படம் என்றாலே டி.இமான் தானே இசை. கடந்த முறை மட்டும் சத்யா இசையமைத்தார். இந்த முறை இமான்.


 சுராஜ் இயக்கத்தில் “கத்திச்சண்டை” முடிந்த கையோடு மிஷ்கின் இயக்கத்தில் “துப்பறிவாளன்” படத்திற்கு ரெடியாகிவிட்டார் விஷால். வரும் செப்டம்பர் 23ல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிப்பார் என முன்னரே படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் நடிக்கவிருப்பது தற்பொழுது உறுதியாகியிருக்கிறது.என்ன கதாபாத்திரம் என்று கேட்டால், அது சஸ்பென்ஸ் என்று பொடிவைக்கிறது படக்குழு. 


 ’அஜித், அவர் சம்பந்தப்பட்ட சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று நானே விமர்சனம் செய்திருக்கிறேன். அதுதானே அவருடைய படத்திற்கு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது என்பதை தாமதமாக உணர்ந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் தான் இந்த முடிவை அஜித் எடுத்திருக்கிறார். சில நடிகர்கள், நடிக்க தொடங்கிய காலகட்டத்திலே இவ்வாறு செய்வது தவறு ” என்று பொறிந்து தள்ளியவர் தயாரிப்பாளர் சிவா. காரணம், சென்னை 28 இரண்டாம் பாகத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் ஜெய், நிதின் சத்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் ஜெய்யைத் தான் குறிப்பிடுகிறீர்களா என்று கேட்டதற்கு, உடனே ஆமாம் என்று மேடையிலேயே விஷயத்தை உடைத்தார். தவிர, அஜித்தை பின்பற்ற அவர் இடத்திற்கு வர நிறைய உழைக்க வேண்டும்” என்று கடுப்பானார் சிவா. 


 மலையாள திரையுலகின் மெகா ஸ்டார்களில் ஒருவர் ப்ரித்விராஜ். ஹீரோவிலிருந்து இயக்குநராக மாறியிருக்கிறார். அப்போ ஹீரோ? மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால். இந்தச் செய்தியை இணையத்தில் ப்ரித்வி வெளியிடவும் ஒட்டுமொத்த மலையாள திரையுலகுமே பூரிப்பில் கண்விரிந்து கிடக்கிறது.  லூசிஃபர் (LUCIFER) என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கான கதையை முரளி கோபி எழுதியுள்ளார். பவர்பாண்டி படத்தை தனுஷ் இயக்குவது போல, மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகும் செல்லப்பிள்ளை ப்ரித்விக்கும் வாழ்த்துகள் குவிகின்றனவாம். 


 அடுத்தப் படத்திற்கான கதை ஒன்றை எழுதி வருகிறார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் அதை இயக்கவிருப்பது வெங்கட் பிரபு. இரண்டு இயக்குநர்கள் ஒரே படத்தில் பணியாற்றவிருக்கிறார். படத்தில் நடிக்கவிருப்பவர்கள் பற்றி  இந்த வருட இறுதிக்குள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஜி.வி. நடிப்பில் “கடவுள் இருக்கான் குமாரு” படத்தில் ராஜேஷும், “சென்னை 28” இரண்டாம் பாகத்தில் வெங்கட் பிரபுவும் பிஸியாக இருக்கிறார்கள். இவ்விரு படங்களும் முடிந்தப்பிறகே இந்தப் படத்திற்கான பணிகளில் ஈடுபடுவார்கள்.


 பாஸ்... ஒரு முக்கிய செய்தி!  காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துத் தமிழகத்தில் நாளை முழு அடைப்பு. அதனால் திரையரங்கிலும் காலை மற்றும் மாலை காட்சிகள் ரத்து என்று சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார். எனவே,நாளை ரிலீஸாகும் புதுப்படங்களை நாளை மாலை 6மணிக்கு மேல் அல்லது சனிக்கிழமை பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

-பி.எஸ்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!