ஹாரீஸ் படங்கள் தாமதமாக காரணம் இதுதான்! #க்விக்செவன் | Quick seven cinema news updates 19-09-2016

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (19/09/2016)

கடைசி தொடர்பு:19:05 (19/09/2016)

ஹாரீஸ் படங்கள் தாமதமாக காரணம் இதுதான்! #க்விக்செவன்

 எழில் இயக்கத்தில் “சரவணன் இருக்க பயமேன்” மற்றும் கெளரவ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்துவருகிறார் உதயநிதி. இப்படங்களைத் தொடர்ந்து தளபதி பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. “பொதுவாக என் மனசு தங்கம்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பார்த்திபன், சூரி, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.  இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கோவை, மதுரை பகுதிகளில் நடக்கவிருக்கிறது.

 கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துவரும் படத்திற்கான படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டது. டி.ராஜேந்தர் முக்கிய ரோலில் நடிக்கும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தற்பொழுது, மூன்றாவது கட்டமாக பாடல்காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மடோனா சபாஸ்டியன் நடித்துவருகிறார். படத்தின் பெயரை விரைவில் வெளியிட படக்குழு திட்டம். 

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் “பைரவா” படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீடு உரிமையும் பெரும் விலைபோயிருக்கிறதாம். தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷன் கைப்பற்றியிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள். கீர்த்திசுரேஷ்,சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது,  

 ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படங்களுக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதாக சொல்லப்பட்டது. அதற்கு ஹாரிஸின் "STUDIO - H" ஒலிப்பதிவு ஸ்டூடியோதான் காரணம். சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவிற்காகவே பல கோடி ஹாரிஸ் செலவு செய்திருக்கிறார். விரைவில் திறப்புவிழா காணப்போகும் இந்த ஸ்டூடியோவில் தான் இருமுகன் படத்திற்கான இசை பணிகள் நடந்ததாம். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் இசையமைக்க முடியும். சினிமாவில் லைவ் இசையை கொண்டுவரவேண்டும் என்பது தான் ஹாரிஸின் நோக்கம். உலகத்தரத்தில் இசை தரவேண்டுமென்றால் தாமதமாகத்தானே செய்யும்.

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துவரும் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்கிறார். தவிர, முக்கிய ரோலில் நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.  இச்செய்தியை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருக்கிறார். ரகுல் ப்ரீத்சிங் மட்டுமே மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் என்பதை ட்விட்டரில் குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஏ.ஆர். 

 சிங்கம் மூன்றாம் பாகம் வரும் டிசம்பர் 16ல் ரிலீஸ்., விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவின் 35வது படம் உருவாகவிருக்கிறது. அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவிருக்கிறார். தொடர்ந்து சூர்யாவின் 36வது படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. தயாரிப்பு நிறுவனம், சூர்யாவின் 36வது படத்திற்கான இயக்குநர் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறது. 

 தமிழின் முதல் ஸோம்பி படம் “மிருதன்”, இப்படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜனின் அடுத்தப் படம் “டிக்டிக்டிக்” . தமிழின் முதல் விண்வெளி படமாக உருவாகவிருக்கிறது “டிக்டிக்டிக்”. ஜெயம்ரவி, இமான் என்று அதே கூட்டணியுடன் களமிறங்குகிறார் சக்தி.  தற்பொழுது லட்சுமன் இயக்கத்தில் போகன் படத்தின் பணிகளில் இருக்கிறார் ஜெயம்ரவி. எனவே, அக்டோபர் மாதம் முதல் டிக்டிக்டிக் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

-பி.எஸ்- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்