அனிருத்துக்கு குட்பை சொன்ன தனுஷ்!

ட்விட்டரில் அனிருத்துக்கு குட்பை சொல்லி இருக்கிறார் தனுஷ். ஆம், அனிருத்திற்கு ட்விட்டரில்  அன்ஃபாலோ பட்டனை க்ளிக்கி இருக்கிறார். 


இசையமைப்பாளர் அனிருத்தின் காட்ஃபாதரே தனுஷ் தான். முதல் படமான 3-இல் ஆரம்பித்து ரெமோ வரை அனிருத்தின் இசை பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர் தனுஷ். அனிருத் இசையமைத்த 14 படங்களில் 8-இல் தனுஷ் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்.


 3,வேலையில்லா பட்டதாரி,மாரி,தங்கமகன் என தனுஷின் சமீபத்திய படங்கள் அனிருத் லேபிளோடு தான் களம் இறங்கியது. பாடல்களும் தெறி லோக்கல் ஹிட்.  எதிர்நீச்சல்,காக்கிசட்டை, நானும் ரவுடி தான்  என தனுஷ் தயாரித்த படங்களுக்கும் அனிருத் தான் ஆஸ்தான இசையமைப்பாளர். செல்வராகவனின் படமான இரண்டாம் உலகத்திற்கு ஹாரீஸ் இசையமைக்க, பின்னர் பின்னணி இசை தந்து படத்தை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றது அனிருத் தான்.ஐஸ்வரியா தனுஷின் மாமா மகனான அனிருத் அவரின் இரண்டாம் படமான 'வை ராஜா வை' படத்திற்கு கூட இசையமைக்கவில்லை.அப்போதும் சில காரணங்கள் சொல்லப்பட்டது.ஆனால், 3 படத்தில் இருந்த மேஜிக்கல் இசை, 'வை ராஜா வை'யில் இல்லை என்பது ரசிகர்களுக்கு தெரியும்.


இவ்வளவும் இருந்தும், தனுஷ்- அனிருத் பிரிவு படங்களின் வாயிலாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. தொடரி படம் பிரபு சாலமன் இயக்கம் என்பதால் இமான் இசை என ஒப்புக்கொண்டாலும், அடுத்த படமான கொடியிலும் அனிருத் இல்லை என்னும் போதே , ' என்னடா தொண்ட கவ்வுது ' என  ஷாக் ஆனார்கள் தனுஷ்-அனிருத் #DnA  ரசிகர்கள். ஏனெனில் கொடி பட இயக்குனர் R.S.செந்தில்குமார் இதற்கு முன்னர் இயக்கிய இரு படங்களுக்குமே அனிருத் தான் இசை. கொடி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக புக் செய்யப்பட்டார். மூன்று படங்களுக்குமே தனுஷ் தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் - தனுஷ் காம்போவின்  'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் யுவன், தனுஷ் - வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை என இனி வரும் தனுஷ் படங்கள் எதிலும் அனிருத் இல்லை.அதற்கும் கவுதம் மேனன் - யுவன், வெற்றிமாறன் - சந்தோஷ் என்பதே புதுக்கூட்டணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றிமாறன் ஜி.வி.பிரகாஷை விட்டும், கௌதம் மேனன் ஹாரிஸ்,ரஹ்மானை விட்டும் வந்து இருக்கிறார்கள்.இதில் அனிருத் பெயர் பெரிதும் வரும் என எதிர்பார்த்தார்கள் அவர்களது ரசிகர்கள்.


கடந்த வாரம் தனுஷ் முதல்முறையாக இயக்க இருக்கும் பவர்பாண்டி படத்தின் போஸ்டர் வெளியாகியது. தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் முதல் பட நாயகனான ராஜ்கிரண் தான் படத்தின் ஹீரோ. இன்ப அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள், அடுத்து போஸ்டரில் தேடியது அனிருத் பெயரைத்தான். ஆனால், அனிருத் பெயர் இல்லை. அதற்கு பதில் ஜோக்கர் படத்தின் இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனின் பெயர் இருந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


ஆனந்த விகடனில் வந்த பேட்டியில் அனிருத்-தனுஷ் ஜோடி பிரிஞ்சது ஏன்? என்னும் கேள்விக்கு, இப்போ அவர் ரொம்ப பிஸி. அமைஞ்சா பார்க்கலாம் என பதில் சொல்லி இருக்கிறார் தனுஷ்.  


இப்போது இறுதியாக ட்விட்டரில் அனிருத்தை அன்ஃபாலோ செய்து இருக்கிறார் தனுஷ். ட்விட்டரில் இப்போதும் தனுஷை ஃபாலோ செய்து கொண்டு இருக்கும் அனிருத், இன்று காலை தனுஷை டேக் செய்து தொடரி படத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார். 

 

அனிருத்தும், தனுஷும் இணைய வேண்டும் என்பது தான் இருவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பும். அதற்கு,காலம் தான் பதில் சொல்லும் 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!