வாவ்... ஆஸ்கருக்கு செல்கிறது 'விசாரணை'!

வெனிஸில் திரையான முதல் தமிழ் படம், மூன்று தேசிய விருதுகள் வென்ற படம் என பல வரவேற்புகள் பெற்றது விசாரணை. தற்போது இன்னொரு ஸ்பெஷல் பாராட்டுக்கு தயாராகிவருகிறது.

89வது ஆஸ்கரில், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுப் பிரிவுக்காக, வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 2017 பிப்ரவரி 27ம் தேதி நடக்கவிருக்கிறது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி.

 

விசாரணை படம் பற்றி வெற்றிமாறன் ஆனந்த விகடன், மைல்ஸ் டூ கோ தொடரில் கூறியது,

"ஒருநாள் தனுஷிடம் ‘தியேட்டர்ல மூணே மூணு நாள் ஓடுற ஒரு படம் இருக்கு. தயாரிக்கிறீங்களா?’னு கேட்டேன். ‘உலகத்துல எந்த டைரக்டரும் ஒரு தயாரிப்பாளரிடம் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்க’னு சிரிச்ச தனுஷ், என் மீதுள்ள நம்பிக்கையில் கதையைக்கூட கேட்காமல் அங்கேயே `ஆரம்பிச்சிடலாம்'னு சொன்னார்.

அந்த அளவுக்கு ‘விசாரணை’ மேல் எனக்கு நம்பிக்கை வரக் காரணமான மனிதர் சந்திரகுமார். ‘விசாரணை’யின் மூலக்கதையான ‘லாக்கப்’ நாவலை எழுதியவர். இந்த நாவலை எங்க டைரக்டரிடம் வொர்க் பண்ணின ஞானசம்பந்தன் என்கிற தங்கவேலவன்தான் படம் பண்ணலாம்னு என்னிடம் கொண்டுவந்து தந்தார். இப்ப அவரும் படம் பண்ணப்போறார். ‘உங்கள் நாவலைப் படமாக்குறேன்’னு நான் சொன்னதும், ‘அன்னைக்கு நாங்க அழுத அழுகை, அந்த நாலு சுவர் தாண்டி வெளிய கேட்டுடாதானு ஏங்கினோம். நாளைக்கு இந்த உலகமே அதைக் கேட்கப்போகுது தோழர்’னு சந்திரகுமார் சொன்ன வலி நிறைந்த அந்த வார்த்தைகள்தான் இந்தப் படைப்பின் ஆதாரம்.  

‘விசாரணை’ படத்தை உலகத் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கணும்னு முடிவுபண்ணினேன். அதனால்தான் தனுஷிடம் அப்படிக் கேட்டேன். திரைப்பட விழாக்கள் கலையை, திறமையை வெளிக்காட்டும் தளம் மட்டுமே கிடையாது; மாற்று சினிமாவுக்கான மாற்றுச் சந்தையையும் கண்டுபிடிக்கிற இடம். அந்த மார்க்கெட் நோக்கித்தான் ‘விசாரணை’ படத்தைக் கொண்டுபோக நினைச்சேன்". 

விசாரணை திரைப்படம் கண்டிப்பாக ஆஸ்கரின் டாப்-5க்குள் வரும். ஆஸ்கர் விருது பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

- பா.ஜான்ஸன்

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!