Published:Updated:

நடிகை.. நாயகி.. மனுஷி! #சில்க் ஸ்மிதா

Vikatan
நடிகை.. நாயகி.. மனுஷி! #சில்க் ஸ்மிதா
நடிகை.. நாயகி.. மனுஷி! #சில்க் ஸ்மிதா

பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, கடும் நெருக்கடியை பிரதமர் இந்திரா காந்தி, சந்தித்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் கையில்  ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. புத்தகத்தில் இருந்து தலையை எடுத்த இந்திரா காந்தி “Who is this ‘Silk’!?” என பக்கத்தில் உள்ளவரிடம் குறுநகையுடன் கேட்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால் அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி,  நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என பெயர் மாற்றப்பட்டது.

உதிரி உதிரியாய் வந்த கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் சில்க்  ஸ்மிதா ஒரு  மின் மினி பூச்சி. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க்  ஸ்மிதா. பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' சில்க் ஸ்மிதாவை மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக காட்டியது. அசோக்குமாரின் 'அன்று பெய்த மழை' பன்முகத் திறமை கொண்ட நடிகையாக்கியது. சில்க்  ஸ்மிதாவின் நடனத்திறமைக்கு விளக்கமேத் தேவையில்லை.

1980களில் ஸ்மிதா இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். ரஜினி, கமல் போன்றவர்கள் கூட படத்தில் ஸ்மிதாவுக்கு கேரக்டர் இருக்கிறதா? என்று கேட்பார்களாம். சில சமயங்களில் அவரது கால்ஷீட்டிற்கு முன்னணி கதாநாயகர்களே காத்திருந்தது உண்டு. தயாரிப்பாளர்களோ கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும் முன்  ஸ்மிதாவிடம் கால்ஷீட் கிடைக்குமா? என்று பார்த்து விட்டுதான் தயாரிப்பு பணியையே தொடங்குவார்கள்.

புகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம்  பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக  ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.

செனனை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்த சில்க் ஸ்மிதா, தெருவில் வரும் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது, 'ஸ்கூலுக்கு போங்கடா ஒழுங்கா..!' என்றெல்லாம் அறிவுரை கூறுவாராம்.தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சில்க் ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் கூட, உள்ளேயிருந்து அடுத்த நிமிடம் பந்து வெளியே வீசப்பட்டு விடுமாம். அதுமட்டுமல்ல, தான் சம்பாதித்த பணத்தை நல்ல காரியங்களுக்கும் சில்க் ஸ்மிதா செலவழித்து வந்துள்ளார். சில்க்கின் சினிமா முகம் தாண்டியும் அவரின் இன்னொரு முகம் அறிந்த பிரபலங்கள் அதை பற்றி,  முன்பு விகடனிலும் பகிர்ந்திருந்தனர்.

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி இன்னும் பல சூழ்நிலைகள் அவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த  தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது. '' தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்'' என சக நடிகைகள் கண்ணீர் விட்டனர். 

கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின்  வாழ்க்கையை மையப்படுத்தி “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா  கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் சக்கைப் போடு போட்டது.

அபார நடனத்திறமையாலும் , கண்களின் வசீகரத்தாலும்  குணச்சித்திர வேடங்களாலும்  தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல்,  தென்னகத் திரைப்பட உலகையே சில்க் ஸ்மிதா பல ஆண்டு காலம் கட்டிப் போட்டிருந்தார்.

சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் ஒட்டப்படும் போஸ்டர்கள் வழியாக  அந்த வசீகர கண்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டுதான்  இருக்கின்றன.

-எம்.குமரேசன்
 

Vikatan