Published:Updated:

என் வழி ரஜினி வழி... தோனி லக லக லக லக...

Vikatan
என் வழி ரஜினி வழி... தோனி லக லக லக லக...
என் வழி ரஜினி வழி... தோனி லக லக லக லக...

M.S. Dhoni: The Untold Story.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷந்த் சிங் ராஜ்புட் நடித்த, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். செப்டம்பர் 30ல் தமிழ், இந்தியில் வெளியாக உள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ப்ரமோ நிகழ்ச்சிக்கு தோனி வருகிறார் என்றதும் ஹவுஸ் ஃபுல்.

தோனி வருவதற்கு கொஞ்சம் லேட்டானது. உடனே மேடை ஏறி மைக் பிடித்த விஜய் டிவி தொகுப்பாளினி டிடி ‘‘இவ்வளவு நேரம் உங்களை வெயிட் பண்ண வச்சதுக்கு ஸாரி... ஆனா, தோனி எவ்வளவு பெரிய பிளேயர். அவருக்காக காத்திருக்கிறது தப்பே இல்லை’ என தனக்கே உரிய பாணியில் அடித்து நொறுக்கி விட்டு, ‘நம்ம அவரை எப்படி வரவேற்கப் போறோம்...’ என்றதும், ஆடியன்ஸ் ஹோவென கத்தினர். ‘இந்த மாதிரி இல்லைப்பா... தோனி, தோனி, தோனி, தோனி.... இந்த மாதிரி...’ என டிடி எடுத்துக் கொடுக்க, ‘தோனி, தோனி, தோனி, தோனி....’ என, ரசிகர்கள் உடனடியாக பிக் அப் செய்தனர். 

இந்த ரிகர்சல் நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென கேமரா வெளிச்சம் மொத்தமாக ஒரு இடத்தில் குவிந்தது. ஆம். சிஎஸ்கே நாயகன் எம்எஸ்டி வந்து விட்டார். கூடவே, இந்த படத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்த சுஷந்த் சிங் ராஜ்புட்டும். உடனே லைட்ஸ் ஆஃப் பண்ணி, வி.ஐ.பி.களை சீட்டில் அமர வைத்தனர். படத்தின் ட்ரெய்லர் ஓடியது. பின், படத்தில் இடம்பெற்ற பாடலை, எஸ்பிபி சரண் பாட, தமிழ் புரியாவிட்டாலும் தலையாட்டி ரசித்தார் தோனி. ‘பாடல் பிடித்திருந்ததா?’ என டிடி கேட்டதும், ‘அஃப் கோர்ஸ்’ என தோனியிடம் இருந்து பதில் வந்தது.

ஒருவழியாக ப்ரமோ நிகழ்ச்சி தொடங்கியது. ‘எப்படி இருக்கிங்க’ என டிடி கேட்டதுதான் தாமதம், ‘நல்லா இருக்கேன்’ என தோனி அழகு தமிழில் பதில் சொல்ல, கைதட்டல் அடங்க சிறிது நேரம் பிடித்தது. இந்த படம் உருவான விதம் குறித்து கேட்ட கேள்விக்கு ‘ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆரம்பிங்க, பார்க்கலாம் என சொல்லி வைத்தேன். அவர்கள் உடனடியாக வேலையைத் தொடங்கி விட்டனர். அதன்பின் என்னால் பின்வாங்க முடியவில்லை. சுஷந்த் அருமையான நடிகர். இந்த படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஒன்பது மாதம் கடினமாக பயிற்சி செய்து கிரிக்கெட் ஷாட்களை ஆடி இருக்கிறார். ஸ்கிரீனில் பார்க்கும்போது அந்த ஷாட் நேர்த்தியாக இருக்கிறது. அநேகமாக சுஷந்த் அடுத்த படத்தில் நடிக்கும்போது, இந்த படத்தில் நடித்த சாயல் இல்லாமல் பார்த்துக் கொள்வது சவலாக இருக்கும்’’ என்றார்.

‘உங்களிடம் ஒரு குட்டிப் பொண்ணு ரொம்ப நேரமாக கேள்வி கேட்க காத்திருக்கிறாள்’ என்று சொன்னதும் நடிகர் சூர்யாவின் மகள் தியா, மகன் தேவ் இருவரும் மேடைக்கு வந்தனர். தியா கேட்ட ‘நீங்கள் பள்ளியில் படிக்கும்போது குறும்புத்தனம் செய்தீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘பொதுவாக குழந்தையாக இருக்கும்போது எல்லோரும் குறும்புத்தனம் செய்வர். ஆனால், நான் அவ்வளவு குறும்பு செய்ததில்லை. சீரியஸாக இருந்தேன். டீச்சர்கள், பெற்றோர்கள் சொன்னதைக் கேட்டேன். நீங்கள் குறும்பு செய்யலாம். அதே நேரத்தில் பெற்றோர் சொல்வதையும் கேட்க வேண்டும்’’ என தோனி சொன்னதை அப்படியே கேட்டுக் கொண்டனர் அந்த சுட்டீஸ். 

அவர்கள் புறப்படும்போது டிடி, ‘இவர்கள் நடிகர் சூர்யாவின் பிள்ளைகள்’ என்றதும், ‘ஓ... அப்படியா’ என்ற தோனி, ‘‘ஒன்று தெரியுமா, நான் உங்க அப்பாவின் தீவிர ரசிகன். சிங்கம் படத்தை இந்தியில் பார்த்தேன். இந்தியை விட தமிழில் வெளியான சிங்கம் படம் நன்றாக இருக்கும் என ஒருவர் சொன்னார். சப் டைட்டிலுடன் சிங்கம் பார்த்தேன்’’ என சூர்யா புராணம் பாடினார் தோனி. அடுத்து வழக்கம் போல, சென்னை பற்றிய கேள்விக்கு, ‘‘சென்னை ரசிகர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. சென்னையில்தான் என் முதல் டெஸ்ட் போட்டியை ஆடினேன். சென்னையின் ஸ்பெஷல் பற்றி சொல்ல வேண்டுமானால், இங்கு கிடைக்கும் உணவு ரொம்ப பிடிக்கும். பலரும் ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி நான்றாக இருக்கும் என்று சொல்வாரகள். ஆனால், எனக்கு சென்னை பிரியாணி பிடிக்கும் கொஞ்சம் ஸ்பைசியாக இருக்கும். அதேநேரத்தில் சுவையாகவும் இருக்கும். ஃபில்டர் காஃபியும் அருமையாக இருக்கும். அதோடு, லெதரில் உற்பத்தி செய்யும் பொருட்கள் நன்றாக இருக்கும்’’ என அடுக்கிக் கொண்டே போனார்.

கடைசியாக, ‘நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, சந்திக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே’ என டிடி எடுத்து விட, ‘’ஆம், இன்று மாலை அவரை சந்திக்க உள்ளேன். எப்போதுமே அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன். ஆனால், அதைப் பற்றி யாரிடமாவது சொல்ல தயக்கமாக இருந்தது. இன்று அவரை சந்திக்க போகிறேன். அதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது’’ என்றார் தோனி. 

சூப்பர் ஸ்டார் வசனம் தெரியுமா எனக் கேட்டதும், ‘‘ஆக்சுவலி, ரஜினியின் பழைய வசனம் ஒன்று ரொம்ப பிடிக்கும். அதை சொல்லிக் காட்டுகிறேன். அதை சரியாக செய்யவில்லை எனில், மன்னிக்கவும்...’ என்று சொல்லி விட்டு, எழுந்து நின்று, ‘வசனத்தை சொல்வதற்கு முன் இப்படி செய்ய வேண்டும்’ என கோட்டை இங்கும் அங்கும் காற்றில் ஸ்டைலாக பறக்க விட்டு (ரஜினி செய்வது போல) ‘என் வழி தனி வழி’ என்று சொல்ல, படையப்பா பார்த்த திருப்தியில் ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள். தா.ரமேஷ்
படங்கள்: அசோக்

Vikatan