Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்! #LegendSJanaki


அறுபது வருடங்கள், பதினேழு மொழிகளில் நாற்பத்து எட்டாயிரம் பாடல்கள், நான்கு தேசிய விருதுகள், முப்பத்து இரண்டு மாநில விருதுகள், மைசூர் பல்கலை கழகத்திலிருந்து கௌரவ முனைவர் பட்டம், தமிழ் நாடு அரசின் கலைமாமணி பட்டம் என இசையில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்தவர் பாடகர் ஜானகி. அவர் அண்மையில் இசைத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியது இசை ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தென் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் இவர் வாழ்வில் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், இனி திரைப்படங்களிலும் சரி, மேடைகளிலும் சரி, பாடப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்

மழலையாக இருக்கும் போதே பாடத் தொடங்கினார் ஜானகி. அவரின் முதல் மேடை நிகழ்ச்சியை மூன்று வயதில் பாடினார். தன் மாமாவின் அறிவுரைக்கு இணங்க இருபது வயதில் சென்னைக்கு பாடுவதற்காக வந்த இவர், ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பாடகராக சேர்ந்தார். 1957ம் ஆண்டு, “விதியின் விளையாட்டு” என்ற திரைப்படம் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் ஜானகி. அன்று முதல் இன்று வரை, தென்னிந்திய மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். “செந்தூரப் பூவே”, “இஞ்சி இடுப்பழகி”, “ஊரு சனம் தூங்கிருச்சி”, “மச்சானப் பாத்தீங்களா” போன்ற கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும், பசுமையான பாடல்களுக்கு தன் மழலை குரலை கொடுத்து மேன்மை படுத்தியவர் ஜானகி. எஸ்.பி. பால சுப்பிரமணியம் மற்றும் பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான். இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையை கொண்டவர் ஜானகி.

ஜானகியின் பாடல்களை திரையில் பார்க்கும் போது மட்டும், கதாநாயகியே பாட்டை பாடுவது போல தோன்றும். அவரின் பாடல்கள் இயற்கையான உணர்வுகளின் வெளிப்பாடு என்றே கூறலாம். குரலில் எந்த வித சிரமமும் தெரியாமல், பாடல் அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் சென்று வருவார் ஜானகி. “காதல் கடிதம் தீட்டவே” என்ற பாடலில், காதல் வழியும் என்றால் “சின்னத் தாயவள்” பாடலில் தாய்மை தாலாட்டும்.  “சின்னச் சின்ன பூவே” பாடலில் மழலை குரல், “ஊரு சனம் தூங்கிருச்சி”, “இஞ்சி இடுப்பழகி” போன்ற பாடல்களில், கிராமத்து பெண்ணின் குரல், “பொன் மேனி உருகுதே”, போன்ற பாடல்களில் விரகத்தின்கா வெளிப்பாடு, “எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்” பாடலில் குடி போதையில் ஆடும் பெண்ணின் தொனி என்று இசையின் பல பரிமாணங்களை குரல் வழியாகவே வெளிப்படுத்தியவர்  ஜானகி. “சிங்கார வேலனே தேவா” போன்ற நுணுக்கங்களை கொண்ட பாடலை, தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் இல்லாத காலத்தில் எவ்வாறு ஜானகி பாடி முடித்தார் என்று இசை உலகினர் இன்று வரை வியக்கின்றனர்.

அனைத்து மொழிகளிலும் மிகச் சரியான உச்சரிப்பை கொண்டவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. தனது இசை வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடிய “சிங்கார வேலனே தேவா” முதல், இப்போது பாடிய “அம்மா அம்மா” வரை தன் குரலால் மக்களை வசீகரிக்க முடிந்திருக்கிறது என்றால், அந்த பெருமை ஜானகியின் உழைப்புக்கும் திறமைக்குமே போய் சேரும். திரைப் பாடல்களுடன் பாரம்பரிய இசையை சேர்த்து அமைப்பது என்பது இளையராஜாவிற்கு கை வந்த கலை. அவ்வாறு அவர் இசை அமைத்த பாடல்களை மிகச் சரியாக பாடுவது ஜானகி தான் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். “காற்றில் எந்தன் கீதம்”, “புத்தம் புது காலை”, “சுந்தரி நீயும்” போன்ற பாடல்கள் இதற்கு சான்று. பாடலின் ஏதாவது ஒரு நொடியில் தவறு செய்தால் கூட உணர்வு சரியாக கேட்பவருக்கு போய் சேராது என்பது போல் மிகக் கடினமான பாடல்களை குரலில் சின்ன சிரமம் கூட தெரியாதவாறு பாடியுள்ளார் ஜானகி. “சங்கத்தில் பாடாத கவிதை”, “தென்றல் வந்து தீண்டும்போது” போன்ற பாடல்கள் இதற்கு சான்று.

ஜானகி முற்றிலும் வித்தியாசமான குரல்களில் பாடக் கூடியவர். “போடா போடா போக்க” பாடலில், கிழவியின் குரல், “மாமா பேரு மாறி” பாடலில் ஒரு ஆணின் குரலில் கூட பாடியுள்ளார். மேற்கத்திய இசையை தமிழ் திரையுலகிற்கு மிக சிறப்பாக கொண்டு\ வந்து சேர்த்த பாடகர்களில் ஜானகியும் ஒருவர். “பாடவா உன் பாடலை”, “ஒரு பூங்காவனம்”, “இது ஒரு நிலாக்காலம்” “ஓ ஓ மேகம் வந்ததோ” போன்ற பல்லாயிரக் கணக்கான மேற்கத்திய பாணி பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து ஜானகி பாடிய, “ஒட்டகத்த கட்டிக்கோ”, “கத்தாழங் காட்டுவழி”, “முதல்வனே” போன்ற பாடல்கள் என்றும் இனிமையானவை. “மார்கழி திங்களல்லவா” பாடல் ஜானகிக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதை பெற்றுத் தந்தது.

பாடத் தொடங்கிய பிறகு எந்த வித குரல் பயிற்சியும் செய்ததில்லை என்று கூறியுள்ளார் ஜானகி. “நான் பாடகி” என்ற செருக்கும் ஆடம்பரமும் எந்த விதத்திலும் தெரியாமல், மிகவும் எளிமையான தோற்றத்துடன் மேடைகளுக்கும்  நிகழ்ச்சிகளுக்கும் வந்து செல்வார். அவர் பாடும்போது உதடை தவிர கை தலை என்று உடலில் வேறு எந்த பாகமும் அசையாது. மைக்கை பிடித்து ஒரு இடத்தில் நின்றால், நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே நின்று பாடுவார். உச்சஸ்தாயியில் பாடினாலும் சரி கீழ்ஸ்தாயியில் பாடினாலும் சரி, எந்த வித அசைவும் தெரியாது.

ஜானகியின் குரலை விட இனிமையான குரலை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம் தான். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி. பிலிம் பேர், 1997ம் ஆண்டு, ஜானகிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. 2013ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த “பத்ம பூஷன்” விருதை “மிக தாமதமாகக் கொடுப்பதாக கூறி நிராகித்தவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. “10 கல்பநகள்” என்ற மலையாள திரைப்படத்திற்காக அவர் பாடிய “அம்மபூவினு” என்ற பாடல் தான் அவர் கடைசியாகப் பாடிய பாடல்.

“மலையாள மொழியில் தான் கடைசி பாடலை பாட வேண்டும் என்பது திட்டமிடப்படவில்லை”, என்று கூறுகிறார் ஜானகி, ”நான் ஓய்வு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் அது தானாக அமைந்தது. சீமா விருதுகளில் நான் பாடியது தான் என் கடைசி மேடை நிகழ்ச்சி. நான் கடைசியாக பாடிய நேரலை நிகழ்ச்சி அதற்கு முன்னால் கோழிகோடில் நடை பெற்றது. பல மொழிகளில், ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதெல்லாம் போதும்”  என்கிறார் ஜானகி.

இனி பாடுவதில்லை என முடிவெடுத்தால் வருந்தவேண்டியதொன்றுமில்லை. எத்தனையெத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் அவர். ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து சிலாகிக்கவே நம் வாழ்நாள் போதாதே!


-ம. சக்கர ராஜன்,

மாணவப் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement