“எங்களை வேலை செய்யவிடுங்க” - கண்ணீர் சிந்திய சிவகார்த்திகேயன்!

24 AM ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜாவின் முதல் தயாரிப்பு ரெமோ. அதன் வெற்றிக்காக ஒரு பிரஸ் மீட்டை நடத்தியது ரெமோ டீம்.

இவ்விழாவில் முதலில் கெளரவிக்கப்பட்டவர்கள் விநியோகஸ்தர்கள். திருப்பூர் சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களைச்சேர்ந்த விநியோகஸ்தர்கள் மேடையில் சிறப்பு விருந்தினர்களால வரவேற்கப்பட்டனர். இவர்களைத்தொடர்ந்தே படக்குழுவினர் மேடை ஏறினர். பிரம்மாண்டமான மேடை, கண்கவரும் எல்.ஈ.டி. ஒளித்திரை என அரங்கத்தையே அசரவைத்திருந்தார் தயாரிப்பாளர் ராஜா.  

“இப்பலாம் படம் ரிலீஸாகி 10 நாள் ஓடுனாலே, 100 நாட்கள் ஓடிய வசூலை அடைந்துவிடும், பொதுவாக வெற்றிவிழா நிகழ்ச்சியைத்தான் அனைத்து படங்களிலும் பார்த்திருக்கிறேன். முதன்முறையாக நன்றி விழா என்று நிகழ்ச்சியை தொடங்கயிருப்பதே, இந்த ரெமோ டீம் என்று தான் நினைக்கிறேன்” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.  

மற்ற கம்பெனியில் வேலை செய்யும்போது, அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும். முதன்முறையாக சுதந்திரமாக இந்த டீமுடன் வேலை செய்தேன் என்று குறிப்பிட்டார் அனிருத்.  அனைத்து கலைஞர்கர்களும் மேடையில் பேசினர். 

இறுதியாக சிவகார்த்திகேயன் பேசும் போது கண் கலங்கியதால் மொத்த அரங்கமே அமைதியில் நிறைந்தது. “ ஒரு படத்தை மட்டுமே எடுத்துக்கிட்டு, அதையே சுத்தி சுத்தி ஓடி வேலை செஞ்சி, நானும் எங்க டீமும் தவறு செய்யாத போதும், படம் ரிலீஸாகுமானு தெரியாம வரும் தவிப்பு எதுவுமே இந்தப் படத்தில் எனக்கு கிடையாது. 18 மணிநேரம் வேலை, அதன்பிறகு குடும்பத்தோடு சந்தோஷமா இருந்தேன். ஆனா இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ராஜாவை அவர் குடும்பத்தோடு நான் பார்த்தது கூட இல்லை. இன்னைக்கு வரைக்கும் தூங்கலைங்க இவர்.  

நிறைய புரொடக்‌ஷன் ஹவுஸ்ல அவரை வாசல்லயே நிப்பாட்டிருக்காங்க. ஆனாலும் அந்த கம்பெனிக்காவே நிறைய உழைச்சிருக்காரு. சொத்து இருக்கானு கேளுங்க இந்த மனுஷன்ட்ட, சொந்தமா கார் இருக்குமா? இந்தப் படம் ரிலீஸ் வரைக்கும் எவ்வளவு பிரச்னைய கொடுத்தீங்க?. யார்லாம் கொடுக்குறீங்கனு உங்களுக்கேத் தெரியும். ரசிகர்களுக்காக மட்டும் தான் படம் எடுக்க வந்துருக்கோம். வேற யாருக்காகவும் இல்லை.  கெஞ்சி கேட்டுக்குறேன், எங்களை வேலை செய்யவிடுங்க. 

எனக்குப்புரியலை, யாருக்குமே கிடைக்காத  வாய்ப்பு,  இதை வச்சிட்டு, பெரிசா ஒரு படம் பண்ணலாம்ங்குறது மட்டும் தான் எங்க ஆசை. எங்களுக்கு நீங்க எந்த உதவியும் செய்யவேண்டாம், ஆனா வேலை செய்யுறத மட்டும் தடுக்காதீங்க. நான் யாரைச்சொல்லுறேன்னு உங்களுக்கேத்தெரியும்” என்று பேசினார் சிவகார்த்திகேயன். 

இவர் சொன்ன அந்த நபர் யாரென்பது தான் மர்மமாக இருக்கிறது.  

- பி.எஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!