காதலுக்கு முன்... காதலுக்குப் பின்... ஹீரோயின்களின் டாட்டூ சொல்வது என்ன?

காதல் மயக்கத்தில் தன்னவரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்வதும், காதல் காணாமல் போனதும் அந்த டாட்டூவை மறைத்தபடி வாழ்வதும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நடிகைகள் மத்தியில் சகஜமாகி விட்டது. 

ஏஞ்சலினா ஜோலியின் உடம்பில் இருப்பவை மொத்தம் 12 டாட்டூக்கள். ஒவ்வொரு டாட்டூவின் பின்னணியிலும் ஒரு கதை உண்டு.

பின்னங்கழுத்தில் 'Know Your Rights' என்கிற டாட்டூ அவரது ஃபேவரைட் பேண்டின் பிரபல பாடலின் தலைப்பு.

இடது முழங்கை முன் பகுதியில்  எண் 13- ஐக் குறிக்கும் ரோமன் லெட்டரை டாட்டூவாக போட்டிருக்கிறார். தனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது என்பதன் வெளிப்பாடாம்!

இவை தவிர தனது குழந்தைகள் பிறந்த இடங்களை நினைவுப்படுத்தும் வகையில் அட்சரேகை, தீர்க்க ரேகைகளைக் குறிக்கும் ஏராளமான டாட்டூக்களையும் இவர் உடம்பில் பார்க்கலாம்.  சமீபத்தில் பிரிந்த கணவர் பிராட் பிட்டின் பிறந்த இடத்தைக் குறிக்கும் டாட்டூவும் அதில் ஒன்று.

முதல் கணவர் பில்லி பாபுடன் சேர்ந்து தனது கையில் போட்டுக் கொண்ட டாட்டூவை, அரபிக் எழுத்துக்கள் கொண்ட இன்னொரு டாட்டூவால் மறைத்துக் கொண்டவர் ஏஞ்சலினா.  பிராட் பிட்டை பிரிந்த பிறகு அவரது நினைவாக தன்னிடம் மிச்சமிருக்கும் டாட்டூவை லேசர் முறையில் அழிக்க முடிவு செய்திருக்கிறாராம் ஏஞ்சலினா.

பிரபுதேவா பெயரை டாட்டூ போட்டுக் கொண்ட நயன்தாரா, இன்று வரை அதை அழிக்க நினைக்காமல் மேக்கப்பில் மறைத்தபடியே வலம் வருகிறார்.

'ஏக் தீவானா தா' படத்தில் நடித்தபோது, சக நடிகர் பிரதீக் உடன் காதல் வயப்பட்டு, 'மேரா பியார் மேரா பிரதீக்' என டாட்டூ போட்டுக் கொண்டவர் நடிகை எமி ஜாக்சன். காதல் கசந்து முறிந்ததும், கஷ்டப்பட்டு அந்த டாட்டூவையும் நீக்கிவிட்டார்.

'இனிமே எந்தக் காலத்துலயும் யார் பேரையும் டாட்டூ போட்டுக்க மாட்டேன்.  சின்ன வயசுல தெரியாம பண்ணின தப்பு அது...' என டாட்டூ நீக்கத்துக்கு தன்னிலை விளக்கமும் தந்திருக்கிறார் எமி. ரன்பீர் கபூருடனான காதலின் நினைவாக தன் கழுத்தில் RK என டாட்டூ போட்டுக் கொண்டவர் தீபிகா படுகோன். காதல் காணாமல் போனது. டாட்டூவை முற்றிலும் அழிக்காமல், அதை வேறு டிசைனுக்கு மாற்றிக் கொள்கிற திட்டத்தில் இருக்கிறாராம் தீபிகா.

தங்களது காதலை கன்ஃபர்ம் செய்கிற வகையில் ஆளுக்கொரு கையில் ஒரே மாதிரியான டிசைனில் டாட்டூ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சமந்தாவும் நாக சைதன்யாவும். இது தவிர காதலரின் முதல் எழுத்தான  N என்கிற இன்னொரு டாட்டூவும் உண்டு சமந்தாவிடம்.  தனது உடலிலுள்ள ஒவ்வொரு டாட்டூவையும் தற்போதைய காதலின் சின்னங்களாகப் பேசுகிற சமந்தா, பின்னங்கழுத்தில் போட்டுள்ள You  டாட்டூ பற்றியும் பெருமை பேசத் தவறுவதில்லை. ஆனால் அது அவரது முன்னாள் காதலர் சித்தார்த்தை காதலிக்கும் போது போடப்பட்டது என்பது பலரும் அறியாதது.  பழைய டாட்டூவை அழிக்க வேண்டாம் என நினைப்பவர்கள், இன்னொரு டாட்டூவின் மூலம் வேறு டிசைனுக்கு மாற்றிக் கொள்வதுதான் இன்று லேட்டஸ்ட். சமந்தா செய்திருப்பதும் அப்படியே!

- ஆர்.வைதேகி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!