Published:Updated:

"யாருக்கும் அடங்காத ஓநாய் மிஷ்கின்!" பா.இரஞ்சித்

Vikatan
"யாருக்கும் அடங்காத ஓநாய் மிஷ்கின்!" பா.இரஞ்சித்
"யாருக்கும் அடங்காத ஓநாய் மிஷ்கின்!" பா.இரஞ்சித்

இயக்குனர் ராம் ஹீரோவாகவும் இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடிக்க  மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கி இருக்கும் படம் சவரக்கத்தி. இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்தை தொடர்ந்து நடிகர் நாசர் பாரதியார் பாடலை பாட விழா துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளினி மீண்டும் ஒரு முறை டிரைலரும் பாடலும் திரையிடப்படும் என சொன்னதும். எழுந்த இயக்குனர் மிஷ்கின் " அய்யயோ வேணாங்க பிளீஸ் " என சொல்லி கலகலப்பாக்கினார். 

விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசியதில் இருந்து சில துளிகள்:

தமிழச்சி தங்க பாண்டியன் ;
" இந்த படத்துல வேலை செஞ்சதுல மகிழ்ச்சியும் மனநிறைவும். லோன் வூல்ப்ங்கிறது தான் அவரு எப்போவுமே தன்னை முன்னிறுத்திக்குற ஒரு விஷயம். மிஷ்கினை எந்த விதமான அடையாளத்துக்குள்ளும் அடக்கிட முடியாது. மிஷ்கின் ஒரு தனிமையின் சாண்டாகிளாஸ். 'நான் ஒரு transgenderஆ தான் பிறந்துருக்கணும்’னு அவரு அடிக்கடி சொல்லுவாரு. மிஷ்கின் ஒரு ஆணையோ பெண்ணையோ அணைச்சுக்கறப்போ அவ்ளோ பாதுகாப்பா எல்லோராலையும் உணர முடியும். பாதுகாப்பையும் பேரன்பையும் கொடுக்குறவரு. முழுக்க முழுக்க பிடித்ததோட வேலை செய்ற அலுவலகமா தான் இருக்கும். எல்லோருக்கும் என்னோட வாழ்த்துகள்" 

இயக்குனர் பாலாஜி சக்திவேல் :

" மிஷ்கின் ஒரு பாசக்கார பையன், என்னடா பையன்னு சொல்லலாம் தானே? தமிழச்சி தங்க பாண்டியன் எழுதி மிஷ்கினால் பாடப்பட்ட ஒரு பாடல் திரையிடப்பட்டது. அந்தப் பாட்டு உண்மையிலேயே மனதை பாதித்தது. நிச்சயமா பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என முடித்துக் கொண்டார்.

இயக்குனர் சசி :
" சில இயக்குனர்கள் தப்பா படம் பண்ணிடுவாங்க ஆனா என்னைக்கும் தப்பான படம் பண்ண மாட்டாங்க. அப்படித்தான் ராமையும் மிஷ்கினையும் பார்க்கிறேன். இன்னும் சொல்ல போனால் இந்த இரண்டு பேரும் தப்பான படங்களிலேயே பங்கேற்க மாட்டாங்கன்னு தான் சொல்லணும். அந்த நம்பிக்கையோடு தான் நான் இந்த படத்தையும் பார்க்கிறேன். இந்த இரண்டு ஆளுமைகளையும் மீறி ஆதித்யாவும் அரோல் கரோலியும் பின்னிட்டாங்க . இருவருக்கும் என்னோட வாழ்த்துகள்" 

இயக்குனர் ரஞ்சித் : 
" யாருக்கும் அடங்காத ஓநாய் மிஷ்கின் அண்ணா. தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் யாருக்குமே அடங்காதவர் இவர். அவரோட படமும் அப்படித் தான். ராம் அண்ணாவும் இதுல நடிச்சுருக்காரு ரொம்ப மகிழ்ச்சி. படம் மிகப்பெரிய வெற்றி பெறணும்னு ஆசைப்படறேன். அண்ணன் நல்லா இருக்கணும் "

நடிகர் நாசர் : 
' மிஷ்கினுக்கு என்னோட வாழ்த்துகள்.., எப்போதுமே ஓநாய்கள் கூட்டமா தான் இருக்கும். தனியா ஒரு ஓநாய் திரியுதுன்னா அது ரொம்ப திமிர் பிடிச்ச ஓநாயா தான் இருக்கும். மிஷ்கின் அப்படி ஒரு திமிர் பிடிச்ச ஓநாய். ஒரு கலைஞனுக்கு கண்டிப்பா அந்த ஞானத் திமிர் வேண்டும். அது இல்லைனா அவன் கலைஞனாவே இருக்க முடியாது. மிஷ்கினோட எல்லாப் படமும் எப்போதும் ரொம்ப ஆழமா இருக்கும். ஆனா இந்த படம் ஹியூமர் கலந்து இருக்கும்னு நினைக்குறேன். மிஷ்கினோட குழு எப்போதுமே ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்"

ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் :
" மிஷ்கின் திடீர்னு எப்போவாச்சும் போன் பண்ணி ஐ லவ் யூ ன்னு சொல்லிட்டு கட் பண்ணிடுவான். அஞ்சாதே படத்தை பார்த்துட்டு மிஷ்கினுக்கு கூப்பிட்டேன். படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு வெளிய வரதுக்குள்ள கிளம்பி வந்துட்டான். அவனோட எல்லா படத்துலயும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திடுவான். கார்த்திக் என்னோட அசிஸ்டென்ட். அவன் கண்டிப்பா நல்லா பண்ணிருப்பாங்கிற நம்பிக்கை இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துகள் "

இயக்குனர் ராம் :
" ஒரு மனிதன் இன்னொரு மனிதனை முதல் முதல்ல சந்திச்சா கை குடுப்பான். இல்லனா கட்டி பிடிப்பான். ஆனா முதல் முதல்ல நான் மிஷ்கினை சந்திச்சப்போ ஒரு நிகழ்ச்சியில உட்கார்ந்திருக்கேன். பின் சீட்டுலேர்ந்து யாரோ என் தலையை தடவி கொடுத்து சொறிஞ்சுகிட்டே இருந்தாங்க. திரும்பி பார்த்தா மிஷ்கின் உட்கார்ந்துட்டு இருக்காரு. அதுக்கப்புறம் எப்போலாம் நான் குழப்பமா இருக்கேனோ அப்போவெல்லாம் மிஷ்கினை பார்க்க போய்டுவேன். மிஷ்கினை பொறுத்தவரைக்கும் அவரிடம் ஒரு முரட்டு துணிச்சலும் அசாத்திய நம்பிக்கையும் இருக்கும். மிஷ்கின் ஒரு குங் ஃபூ கத்துகிட்ட  குங் ஃபூ பாண்டா. இந்த படம் ஆரம்பிச்ச சமயத்துல மிஷ்கின் ஆபிஸ்க்கு போயிருந்தேன். ஒரு படத்துல நடிக்க போறேன் காமெடி ஸ்க்ரிப்ட்னு சொன்னாரு. நான் அவருக்கு ரொம்ப தைரியம் சார். உங்கள காமெடியா வைச்சு காமெடி எடுக்கணும்னு நினைக்குறாருனு சொன்னேன். அப்படித்தான் இந்தப் படத்துல நடிப்பதற்கான சூழல் அமைஞ்சது. கற்றது தமிழ்ல தான் முதல் முதல்ல ஷூட்டிங் எப்படி இருக்கும்னே பார்த்தேன். அதே போல இந்த படத்துல இன்னொரு யூனிட்டோட ஷூட்டிங் எப்படி இருக்கும்னு பார்க்க்க முடிஞ்சது. சவரக்கத்தி ஆரம்பம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி நிறைஞ்சதா இருக்கும்.”

நடிகை பூர்ணா :
" தமிழ் படங்கள்ல ஆரம்பிச்சு எதுவும் சரியா போகாத தருணம். அப்போதான் சினிமாவுக்கு திறமை மட்டுமே போதாதுன்னு தெரிஞ்சுது. முழுக்க முழுக்க என்னோட டான்ஸ் பயிற்சிகள்ல இறங்கிட்டேன். அப்புறம் தெலுங்குல ஒரு படம் நல்லா போனது. தொடர்ந்து அங்கேயே நிறைய படங்கள் நடிச்சேன். தமிழ்ல வாய்ப்பு வரும்போதெல்ல்லாம் தவற விட்டுக்கிட்டே இருந்தேன். அப்புறம் தான் இந்த படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. டிரைலர் பார்த்த அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதாங்க.”

இயக்குநர் மிஷ்கின் :

" தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. ஆனா இவன தம்பியா வைச்சுகிறதுக்கு நான்தான் பயப்படணும். முதல்ல என்கிட்ட வந்து ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி தாங்கன்னு சொன்னான். சரி என்னமாதிரி வேணும்னு கேட்டேன். ஒரு காமெடி ஸ்கிரிப்ட் கொடுங்கன்னு சொன்னான். சரின்னு ஆரம்பிச்சதும் இதுல நீங்களே நடிச்சுடுங்கன்னு சொன்னான். சில காட்சிகள் எழுதியதும் எதுலயுமே கதையோட என்ன பொருத்தி பார்க்க முடியல. அப்புறம் தான் ராம் வந்தான். எல்லா விஷயத்துலயும் ராமை ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமாவில் ராம் ரொம்ப அழகானவன். அப்புறம் தான் சுமத்திராங்கிற கேரக்டர் வந்துச்சு. ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். என்னோட அம்மாவை நினைச்சு எழுதினேன். ஆனா ஹீரோயின்ஸ்கிட்ட கேட்குறப்போ யாருமே ஒத்துக்கல. எல்லாம் ஓகே சார். ஆனா ரெண்டு குழந்தைங்க , வயித்துல ஒரு பத்து மாச குழந்தைன்னுலாம்  நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எல்லோருக்குமே இன்னும் இருநூறு வருஷம் நடிக்க போறோம்ங்கிற எண்ணம் போல. பிறகு தான் பூர்ணா வந்தாங்க. அவங்க நடிச்ச படமெல்லாம் எடுத்து பார்த்தா எல்லாமே மொக்க படம். இதுல ஒரு அஞ்சு வயசு குழந்தை மாதிரி அவ்ளோ அழகா கேட்டுகிட்டு நடிச்சுருக்காங்க. ராம் ஒருபக்கம் காமெடி பண்ணுவாரு. நான் ரவுடித்தனம் பண்ணிட்டு இருப்பேன். நடுவுல பூர்ணா பத்து வயசு குழந்தையோடன்னு மூணு பெரும் படம் பூரா ஓடிக்கிட்டே இருப்போம். ஒரு ஸீன்ல நானும் ராமும் கட்டிப்பிடிச்சு சண்டை போட்டு அவருக்கு உண்மையிலேயே கால் உடைஞ்சுடுச்சு. அவ்ளோ ஈடுபாட்டோட நடிச்சான். ரொம்ப சூப்பரான படம் அப்படி இப்படினுலா சொல்ல மாட்டேன் .ஒரு நல்ல படம் அவ்ளோதான் குடும்பத்தோட பாருங்க. இது ஒரு ஒழுக்கமான படமா இருந்தா கண்டிப்பா ஓடும்! " - க. பாலாஜி

படங்கள் : உ.கிரண்குமார் 

Vikatan