சிவகார்த்திகேயன் அழுதது ஏன்...? விஷாலை மிரட்டியது யார்..? --- நாசர் விளக்கம்

 

 

கோவையில் கேரள அரசு நடத்தும் அரசு விழாவில் கலந்து கொள்ள ஏர்போர்ட்டுக்கு  புறப்பட்டுக் கொண்டு இருந்தார் , தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர்.  சிவகார்த்திகேயன் எதற்காக அழுதார்?  விஷாலை மிரட்டியது யார்? என்பது குறித்து நாசரிடம் கேட்டோம்.

'' சிவகார்த்திகேயன் திடீர்னு அழுவார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளர் 'எஸ்கேப்' மதன் சிவகார்த்திகேயன் தன்னிடம்  புதுப்பட ஒப்பந்தத்துக்காக அட்வான்ஸ் பணம் வாங்கியதாக சொல்கிறார். சிவாவோ மறுக்கிரார். உண்மையில் இருவருக்கும் இடையில் பணப்பரிவர்த்தனை நடந்து இருக்கிறது. அது புதுப்படத்துக்கான அட்வான்ஸ் பணமா? இல்லை வேறு தனிப்பட்ட முறையில் பெறப்பட்டதா? என்பது குறித்து இருவரையும் ஒன்றாக அழைத்து விசாரிக்க இருக்கிறோம். 

                             விஷால் தன்னையும் மிரட்டியதாகச் சொல்வது பழைய கதை. தனிப்பட்ட முறையில் அவரை சிலர் மிரட்டிய சம்பவத்தை சிவகார்த்திகேயன் நிகழ்வோடு ஒப்பீடு செய்து பேசியிருக்கிறார், வேறு ஒன்றும் உள்நோக்கமில்லை. சினிமா திரையில் பத்துபேரை பாந்தாடும் வீரர்கள் ஹீரோக்கள் அப்படிபட்டவர்களில் சிலர் நிஜத்தில் மேடையில் அழுவதும், என்னை மிரட்டினார்கள் என்று சொல்வது சரியா? என்று என்னிடம் சிலர் கேள்வி கேட்டனர். எல்லோரும் நிஜ வாழ்க்கையில் எதார்த்தமான மனிதர்கள்தான். திரையில் ஆக்ரோஷமாக சண்டை போடும் ஹீரோக்கள் நிஜத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. நான்கூட நிறைய படங்களில் வில்லன் வேஷத்தில் நடித்து ஏகப்பட்ட பேரை கொன்று இருக்கிறேன் அதற்காக நிஜ வாழ்க்கையிலும் நான் அதேமாதிரிதான் இருப்பேன் என்று நினைப்பது அபத்தம்.

                         இனிவரும் காலங்களில்  ஒரு நடிகர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான கால்ஷீட் தேதிகள், பணபரிவர்த்தனை குறித்து எழுத்துப் பூர்வமான ஒப்பந்தத்தை நடிகர் சங்கம் செயல்படுத்தும்.  நடிகர்களுக்கு ஒரு சிலர்  நெருக்கடிகொடுப்பதால்  சிவகார்த்திகேயன் மேடையில் அழுதது போன்றோ, விஷாலை மிரட்டியது போன்றோ சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் நடிகர் சங்கம் தடுத்து நிறுத்தும்.

வாராகி கொடுத்த ஊழல் புகாரில் கமல் பெயரையும் சேர்த்து இருக்கிறாரே?

வாராகி எதற்கெடுத்தாலும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அந்த ஆதாரங்களை எல்லாம் மீடியாவின் முன்னிலையில்,  மக்கள் மத்தியில் வெளியிடட்டுமே.  கமல்சார் பெயரை சேர்த்து இருப்பது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு விளம்பரத்துக்காகத்தான்.

- சத்யாபதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!