மதுரையில் சிதையும் சிந்தாமணி... இடிக்கப்படும் திரையரங்குகள்! | theatres demolished in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (17/10/2016)

கடைசி தொடர்பு:16:04 (18/10/2016)

மதுரையில் சிதையும் சிந்தாமணி... இடிக்கப்படும் திரையரங்குகள்!

மதுரையில் பாரம்பரிமான திரையரங்குகள் இடிக்கப்பட்டு வருவதன் மூலம் மாநகரின் ஆரம்பகால அடையாளங்களை இளம் தலைமுறையினர் அறியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையின் கீழமாசி வீதியில் அமைந்திருந்த பிரபலமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.

சினிமா ரசிகர்கள் அதிகம் நிறைந்த நகரம் மதுரை. ஒரு காலத்தில் திரைப்படம் ரீலிஸாகும் நாளை, திருநாளைப்போல கொண்டாடுவார்கள். படம் வருவதற்கு முன்பே புதுமுக நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை துவக்கி விடுவார்கள். 
நடிகர்களுக்கு பாரபட்சமில்லாமல் பட்டங்களையும் சூட்டி மகிழ்வார்கள். திரைப்படங்களோடு ரத்தமும் சதையுமாக இருந்த மக்கள், 
கால மாற்றத்தில் திரைப்படங்களை வீட்டிலயே பார்க்க பழகி விட்டார்கள். அதற்கு காரணம், டிக்கெட் விலை உயர்வும், விலை மலிவான குறுந்தகடு புழக்கமும் ஆகும்.

இதனால் மதுரையில் எழுபதுக்கு மேல் இருந்த திரையரங்குகள் காற்றாட ஆரம்பித்தன. 

வணிக நிறுவனங்களின் பெருக்கம் முக்கியமான இடங்களில் அமைந்திருக்கும் திரையரங்குகளை கபளீகரம் செய்ய துவங்கின.  சமீப காலமாக நகரின் புகழ்மிக்க திரையரங்குகள் இடிக்கப்பட்டு வர்த்தக நிறுவனங்களாக மாறி  வருவதை மதுரை மக்கள் கண்ணீரோடு பார்க்கிறார்கள்.

மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பதற்காக திரையரங்கின் உரிமையாளர்கள் நஷ்டப்பட்டுக்கொண்டே இருக்க முடியாதல்லவா....
இன்று மதுரையின் மையப்பகுதியில் நிலங்களை சதுர அடி முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை விலை கொடுத்து வாங்க வர்த்தகர்கள் தயாரக இருக்கும் நிலையில், தியேட்டர் நடத்துவதை விட அதை வணிக நோக்கத்துக்கு மாற்றவே தியேட்டர் உரிமையாளர்கள் நினைக்கிறார்கள்.

அந்த வகையில்தான் மதுரையின் முதல் திரையரங்கான இம்ப்ரீயல் வர்த்தக கட்டிடமாக மாறியது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கான தங்கம் இருந்த இடத்தில் இன்று சென்னை சில்க்ஸ் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

வடக்கு மாசி வீதியில் இருந்த பழம்பெரும் திரையரங்கமான சந்திரா கார் பார்க்கிங்காக மாறிவிட்டது. இவ்வளவு ஏன் முப்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடனா, நாட்டியா, நர்த்தனா இன்று பெரிய மருத்துவமனையாக காட்சியளிக்கிறது. 
முனிச்சாலை தினமணி டாக்கீஸ் ஜவுளிக்கடையாக மாறி விட்டது. மதுரை தெற்குமாசி வீதியில் 1930-ல் சவுராஷ்டிரா முதலாளியால் கட்டப்பட்ட சிடி சினிமா தியேட்டர், ஜவுளிக்கடை குடோனாக மாறிவிட்டது. இத்திரையரங்கில் அக்காலத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான சிந்தாமணி திரைப்படம் மூன்று வருடம் ஓடியது. அந்த வருமானத்தில் கீழமாசி வீதியில் கட்டப்பட்ட சிந்தாமணி திரையரங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படம் திரையிடப்பட்டது. அதை மதுரையின் பிரபலமான ராஜ்மஹால் துணிக்கடைக்காரர்கள் விலைக்கு வாங்கி குடோனாக பயன்படுத்தி வந்தனர். 

தற்போது அங்கு பிரமாண்ட ஜவுளிக்கடை கட்டுவதற்காக திரையரங்கை இடிக்கத் துவங்கியுள்ளார்கள். 

தமிழகத்தை பொறுத்தவரையில் திரையரங்குகள் என்பது நம்முடைய பண்பாட்டு, கலை, அரசியல் வளர்ச்சியோடு தொடர்புடையது. நாகரீகத்தையும், நவீனத்தையும், புதிய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மையங்கள்.

இன்று அவைகள், பரந்துபட்ட சந்தை மயமாக்கலில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய  முடியாது. எனினும் சில காரணங்களுக்காக தியேட்டரில்தான் படம் பார்க்கவேண்டும் என்று இருப்பவர்களுக்கு இழப்புதான்.

செ.சல்மான்.
படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்