Published:Updated:

விசாரணையுடன் போட்டி போடும் மற்ற நாட்டு சினிமாக்கள்! #Oscar2017

Vikatan
விசாரணையுடன் போட்டி போடும் மற்ற நாட்டு சினிமாக்கள்! #Oscar2017
விசாரணையுடன் போட்டி போடும் மற்ற நாட்டு சினிமாக்கள்! #Oscar2017

89-வது ஆஸ்கர் விருது விழா 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி நடக்கவுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் உலகம் முழுவதிலுமிருந்து பல நாடுகள், படங்களை அனுப்பி வைத்தன. இந்தியாவின் சார்பாக "விசாரணை"போட்டியிடுகிறது. இந்நிலையில், ஆஸ்கரில் போட்டியிடும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ளது:

1. மொத்தம் 89 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

2. அதில் 85 நாடுகளின் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

3. அஃப்கானிஸ்தான், அர்மேனியா, கேமரூன், துனிசியா ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

4. ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக ஏமன் நாட்டில் இருந்து ஒரு திரைப்படம் தேர்வாகியுள்ளது. " ஐ ஆம் நொஜூம், ஏஜ் 10 & டிவோர்ஸ்டு" (I AM NOJOOM, AGE 10 & DIVORCED)

"விசாரணை" படத்தோடு 84 பிற நாட்டு படங்கள் போட்டியிடப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிக் கணிப்புகளை இப்பொழுதே செய்ய முடியாது என்றாலும்... பட்டியல் வெளியானதில் இருந்து சில திரைப்படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன :  

1. " சாண்ட் ஸ்டார்ம்" (SAND STORM) : இஸ்ரேல்

உலக வரலாற்றில் தொடர் யுத்தங்களை சந்தித்து வரும் பூமியான இஸ்ரேலின் பெண் இயக்குநர் எலைட் ஜெக்ஸர் இயக்கியிருக்கும் படம். தன் கனவிற்கும், குடும்ப கலாசாரத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஓர் அரேபிய டீனேஜ் பெண்ணின் வாழ்வை சொல்லும் படம். 

2. "டெசியர்தோ" (DESIERTO) : மெக்ஸிகோ

பிழைப்புக்காக  உயிரைப் பணையம் வைத்து எல்லைத் தாண்டிப் போகும் மெக்ஸிக்கர்களின் கண்ணீர்க் கதை. இயக்கம் ஜோனஸ் க்யூரன். "கிராவிட்டி" படத்திற்கான ஆஸ்கர் வென்ற இயக்குநர் அல்போன்சோ க்யூரனின் மகன். ஏக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது இந்தத் திரைப்படம். 

3. " தி சேல்ஸ் மேன் " (THE SALES MAN) : இரான்

              ஹீரோ ஒரு சேல்ஸ்மேன். ஒரு புது வீட்டுக்கு குடி வருகிறான். அதற்கு முன் அங்கிருந்த பெண் பாலியல் தொழில் வந்தார். இதைத் தொடர்ந்து ஏற்படும் சம்பவங்கள் தான் படத்தின் கதை...2016-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை இப்படம் வென்றுள்ளது. 

4. " இட்ஸ் ஒன்லி தெ என்ட் ஆஃப் தி வேர்ல்ட்" (ITS ONLY THE END OF THE WORLD) : கனடா

 இன்னும் சில நாட்களில் சாகப் போகும் ஒரு எழுத்தாளர்... 12 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தை சந்திக்க வருகிறார். அங்கு ஏற்படும் அனுபவங்கள்... கேன்ஸ் திரைப்பட விழாவில் "கிராண்ட் ப்ரீ" விருதினை இப்படம் வென்றது. 

5. "எல்லே" (ELLE) : ப்ரான்ஸ்

வீட்டில் தனியாக இருக்கும் பெண் அடையாளம் தெரியாத ஒருவனால் பாலியல் வன்புணர்ப்புக்கு ஆளாகிறாள். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே படத்தின் களம்...

இவை மட்டுமல்லாமல் ஜெர்மனியின் "டோனி எர்ட்மேன்" (TONY ERDMAN), சிலி நாட்டின் "நெருடா" (NERUDA), வெனிசுலாவின் "ஃப்ரம்  அ ஃபார் " (FROM A FAR), பிலிப்பைன்ஸின் " ம ரோசா" (Ma' ROSA) உட்பட பல படங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகத் தரமான திரைப்படங்களோடு "விசாரணை" போட்டியிடுவது மகிழ்ச்சி தான் என்றாலும்... இவைகளை வென்று ஆஸ்கர் விருது கிடைத்தால் அது இந்திய சினிமாவின் சரித்திரத்தில் முக்கிய நிகழ்வாக அமையும்...

கனவு கைகூடுமா??? பதில் பிப்ரவரி 26-ம் தேதி தெரியும்... 

- இரா.கலைச்செல்வன்

Vikatan