தமிழ் சினிமாவின் முதல் டிரெண்ட்செட்டர் - ஶ்ரீதரின் நினைவலைகள்!

தமிழ்சினிமாவில் டிரெண்ட் செட்டர் படங்களைத் தந்த இயக்குனர்களைப் பட்டியலிட்டால், ஶ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர், என்றுதான் பட்டியலிடவேண்டும். இவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஶ்ரீதர். ஶ்ரீதரின் நினைவுநாள் இன்று (அக்டோபர் 20).

தமிழ்சினிமா அதுவரையிலும் அணிந்திருந்த கிரீடங்களையும், போர்வாளையும், பட்டு அங்கவஸ்திரங்களையும், டர்பனையும் தூக்கி எறிந்துவிட்டு ராஜா காலத்து கதைகளில் இருந்து சமூகக் கதைகளுக்கு அழைத்துச்சென்ற படம் 'பராசக்தி' என்றால், அதன் நீட்சியாக நவீன சினிமாவுக்கு புதிய பாதையை அமைத்துத் தந்த படம் 'கல்யாண பரிசு', இயக்கியவர் ஶ்ரீதர்.

கிருஷ்ணன்-பஞ்சு, பீம்சிங், பி.ஆர்.பந்தலு, ஏ.பி.நாகாரஜன் என பல ஜாம்பவன்கள் இருந்தாலும், சினிமாவில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள், நேர்த்தியான எடிட்டிங், காலத்தை வென்ற பாடல்கள், மிகையில்லாத மேற்கத்திய பாணி கதாபாத்திரங்கள், என திரையுலகில் 'மேக்கிங் ஸ்டைல்' என்ற  ஒன்றையே முதன் முதலில் கொண்டுவந்தவர் ஶ்ரீதர்தான்.

ஶ்ரீதர்தான் முதன் முதலில் நவீன பாணி சினிமாவைத் தொடங்கிவைத்தார் (கல்யாணப் பரிசு).

முதன்முதலில் சிம்லாவில் ஷூட்டிங் நடத்தினார் (தேன் நிலவு). முதன் முதலில் 'காதலிக்க நேரமில்லை' படத்தை ஈஸ்ட்மென் கலரில் எடுத்து வெளியிட்டார்.

முதன்முதலில் அதிகமான புதுமுகங்களைக் கொண்டு படம் இயக்கியவரும் இவர்தான் (வெண்ணிற ஆடை). 
முதன் முதலில் 18 நாட்களில் (நெஞ்சில் ஓர் ஆலயம்) ஷூட்டிங்கை முடித்து 27 நாட்களில் வெளியிட்டவர் இவர்தான்.
முதன்முதலில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் ஒரு தமிழ்சினிமாவின் படப்பிடிப்பை நடத்தி பாடல் காட்சியில் இன்றுவரை மைல்கல்லாக அதைத் திகழச்செய்தார் ( சிவந்த மண்).

அப்போதெல்லாம், வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்துகொண்டால், விவித் பாரதியின் 'ரசிகர் தேன்கிண்ணம்'தான் மிகப்பெரிய வரம். டேப்- ரெக்கார்டர், டி.வியெல்லாம் பெரிதாக அறிமுகமில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் விரும்பிக்கேட்டு கடிதங்களை அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அனுப்பி இருப்பார்கள். ஒவ்வொரு கடிதமும் வாக்குகளாக எண்ணப்பட்டு எந்தப் பாடலுக்கு எத்தனை வாக்குகள் என்பது வரிசையாக அறிவிக்கப்படும். அதில் சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற, 'ஒரு ராஜா ராணியிடம்...' பாடல்தான் முதலிடத்தில் இருக்கும். 

திரைப்படப் பாடல்களின் இசை, பாடல் வரிகள், படமாக்கப்பட்ட லொகேஷன், ஏ.எம்.ராஜா, பி.பிஶ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், என வித்தியாசமான குரல் ஆளுமைகளைப் பயன்படுத்தியதென எவ்வளவோ புதிய முயற்சிகளைச் செய்து பார்த்து அதில் வெற்றியும் பெற்றார்.

பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜாவை, 'கல்யாண பரிசு' மூலமும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை ரஜினிகாந்த் நடித்த 'துடிக்கும் கரங்கள்' மூலமாகவும் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்.

கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, தேன் நிலவு, ஊட்டிவரை உறவு, வெண்ணிற ஆடை, நெஞ்சம் மறப்பதில்லை, சிவந்த மண், அவளுக்கென்று ஓர் மனம், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, என படத்தலைப்புகளையே நாவல்களுக்கு உரிய நேர்த்தியோடு வைத்து அழகு பார்ப்பார்.

ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஶ்ரீ, ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என ஏராளமான புதுமுகங்களை அந்த காலத்திலேயே அறிமுகம் செய்து புகழ் பெற்றவர். அவ்வளவு ஏன் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் ஶ்ரீதர்தான்.

75 வயதில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 60 படங்களை இயக்கியுள்ள ஶ்ரீதருக்கு இன்னமும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது 'காதலிக்க நேரமில்லை' படம்தான். எப்போது நாம் பார்த்தாலும், போன வாரம் ரிலீசான படம் போலவே அந்தப் படம் இருப்பதுதான் அதன் சிறப்பு. இத்தனைக்கும் அந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், 'வயது 18 ஜாக்கிரதை'.

சிவந்த மண்ணின் தாக்கம்தான் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். உலகம் சுற்றும் வாலிபன் பட வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஶ்ரீதர் உதவினார். பல ஆண்டுகள் கழித்து தருணம் பார்த்து ஶ்ரீதருக்கு, உரிமைக்குரல், மீனவ நண்பன் ஆகிய இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் அளித்தார். இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்தவை.

1954-ல் திரையுலகில் அறிமுகமான ஶ்ரீதர் மூன்று தலைமுறைகள் கடந்து, இளையராஜாவுடன் இணைந்து, 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', 'தென்றலே என்னைத் தொடு' ஆகிய மூன்று படங்களையும் மிகப்பெரிய மியூசிக்கல் ஹிட்டாக அமைத்தார். ‘

'I am always want to take a movie and not a talkie'

என்று தனது படங்கள் பற்றி ஶ்ரீதர் சொல்லுவார். படத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், தனக்கு எது சரியென்று படுகிறதோ அதையே படமாக்குவார். இல்லாவிட்டால் தான் இயக்கிய முதல் படமான கல்யாணப் பரிசின் க்ளைமாக்ஸில் 'காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்' என்ற சோகப் பாடலைப் பாடிக்கொண்டு முகத்தைக் காட்டாமல் முதுகைக் காண்பித்தவாறே செல்லும் காட்சியை வைக்கும் துணிச்சல் வேறு எவருக்கு வரும். 'படம் முடிந்ததென எழுந்தவர்கள், பாடல் முடியும்வரை ஜெமினிகணேசன் சிறு புள்ளியாய் மறையும் வரை நின்று கொண்டிருந்துவிட்டு கனத்த இதயதோடு வெளியில் வருவார்கள். அதுதான் தமிழ்த் திரையுலகின் முதல் ஸ்டேண்டிங் ஓவேஷன். 

-கதிரேசன்

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!