மீண்டும் ரிலீஸாகும் தனுஷின் தம்பி படம்..!

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து அது சரியாக மக்களிடம் சென்று சேராவிட்டால் அதை மறுபடியும் ரிலீஸ் செய்யும் நிகழ்வு எப்போதாவது நடக்கும். அப்படி ரீ-ரிலீஸ் செய்யும் படம் செம ஹிட்டடிப்பதும் உண்டு. அதற்கு சிறந்த உதாரணங்கள் பாலா இயக்கிய சேது மற்றும் மிஷ்கின் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி. 2006,பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ரிலீஸான சித்திரம் பேசுதடி திரைப்படம், சரியான மார்க்கெட்டிங் இல்லாததால் படம் நன்றாக போகவில்லை. பிறகு அந்தப் படத்துக்கு நல்ல மார்க்கெட்டிங் செய்து 2006, மார்ச் மாதம் 3-ம் தேதி ரிலீஸ் செய்தனர். படமும் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் அப்படியொரு நிகழ்வு நாளை நிகழவுள்ளது. 

 

பிரபுதேவாவின் உதவி இயக்குநர் கதிரவனின் இயக்கத்தில் கண்ணன், ஸ்ரீஜா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்த படம் கதிரவனின் கோடைமழை. 2016, மார்ச் மாதம் வெளியான இந்தப்படம் அப்போது சரியாக மக்களிடம் சென்று சேரவில்லை. ஆனால் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்டுடியோ9 தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், கதிரவனின் கோடைமழை படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் ரொம்ப பிடித்துப்போக, நானே இந்தப் படத்தை வெளியிடுகிறேன் என்று கூறி படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

 

 

இதைப்பற்றி அறிமுக இயக்குநர் கதிரவன் கூறும்போது, “பெருங்கோபத்தை விட பேரன்பு மிகவும் ஆபத்தானது என்பதை மையமாக வைத்து, விருதுநகர் மாவட்டம், சங்கரன் கோவில் பகுதிகளில் முழு படத்தையும் எடுத்தேன். நான் எதிர்பார்த்த வெற்றி இந்தப் படத்துக்கு கிடைக்காததால் ரொம்பவே மனமுடைந்து போன எனக்கு, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி ஆறுதல் அளிக்கிறது. அவர் கொடுத்த உற்சாகத்தினால் படத்தில் சில மாற்றங்கள் செய்து நாளை வெளியிடுகிறோம். படம் கண்டிப்பாக நல்ல பெயர் எடுக்கும் என்பதிலும் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்கள் பெரியளவில் பேசப்படும் என்பதிலும் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

 

இந்தப் படத்தின் நாயகன் கண்ணன், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் தம்பி சேதுராமனின் மகனாவார். அதாவது தனுஷுக்கு தம்பி முறையாம். 

 

நாளை என்ன படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா!

 

மா.பாண்டியராஜன

Do you like the story?

Please Appreciate the Author by clapping!