மணிரத்னம் அறிமுகப்படுத்தும் அடுத்த குழந்தை நட்சத்திரம்!

பார்பி டால் மாதிரி இருக்கிறார் தியானா மதன். 5 வயது குட்டி தேவதை. விளம்பரங்களில் பிரபலமான குட்டி மாடலான தியானா, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறாள்.

 பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் ஒரு விளம்பரத்தில் அவரது குழந்தைப் பருவ கேரக்டரில் நடிக்க இருக்கிற தியானாவுக்கு, மணிரத்னத்தின் பட அழைப்பு  இன்னுமொரு மெகா வாய்ப்பு.

''ஒரு விளம்பரத்துக்காக மும்பை வந்திருந்தோம். ஒரு ஹெல்த் ட்ரிங் விளம்பரத்துக்கான ஆடிஷன்ல தியானா நடிச்சிருந்தா. அந்த கிளிப்பிங்ஸை புரடக்ஷன் கம்பெனியை சேர்ந்தவங்க மணிரத்னம் சாருக்கு அனுப்பியிருக்காங்க. ரெண்டு, மூணு நாள் கழிச்சு, தியானா அந்தப் படத்துக்கு செலக்ட் ஆயிட்டதா தகவல் வந்தது. இப்போதைக்கு தியானாவோட கேரக்டர் என்னங்கிறதைப் பத்தி நான் எதுவும் சொல்லக்கூடாது. ஆனா இந்தப் படம் நிச்சயம் அவளுக்கு நல்ல பிரேக்கா அமையும்ங்கிறதுல சந்தேகமில்லை..'

என்கிறார் தியானாவின் அப்பா விபுல் மதன். 

''எங்க வீட்ல இதுக்கு முன்னாடி யாரும் விளம்பரத் துறையிலயோ, சினிமாவுலயோ இருந்ததில்லை.  தியானாவுக்குள்ள அந்தத் திறமை இயல்பா வந்திருக்கு. பாடறது, ஆடறது, ஸ்விம்மிங்னு தியானா எப்பவும் துருதுருனு ஏதாவது பண்ணிட்டே இருப்பா. அவளோட விருப்பத்தைப் பார்த்துட்டுதான் விளம்பரங்கள்ல நடிக்க என்கரேஜ் பண்றோம். இப்ப அவ ரொம்ப சின்னப் பொண்ணு. கொஞ்சம் வளர்ந்ததும் அவளுக்கு இதெல்லாம் பிடிச்சிருந்து, தொடரணும்னு விரும்பினா, நானும் என் மனைவியும் அவளுக்கு முழு சப்போர்ட் பண்ணத் தயாரா இருக்கோம்'' என்கிறார் தியானாவின் அப்பா.

விளம்பரத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் தீபிகா படுகோனை சந்தித்திருக்கிறாள் தியானா. அவளது குறும்பையும் திறமையையும் பார்த்து வியந்த தீபிகா, தியானாவுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்தியிருக்கிறார். கூடவே அவளுடன் ஃபோட்டோகிராஃப், ஆட்டோகிராஃப் என அசத்தியதில், தியானா ஆல்ரெடி அங்கே பாப்புலர்!

- ஆர்.வைதேகி

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!