வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (21/10/2016)

கடைசி தொடர்பு:18:57 (21/10/2016)

"ஒரு வேளை நடிக்க வராவிட்டால் தீவிர அரசியலில் ஈடுப்பட்டிருப்பேன்" - 1969ல் ஜெயலலிதா #Flashback

ஜெயலலிதா - செய்தியாளர்களேயே சந்திக்காதவராகவும், பத்திரிக்கையாளர்களிடம் சினேகபூர்வமாக இல்லாதவராகவும், பொதுவாகவே இறுக்கமானவராகவும் கடந்த 20 ஆண்டுகளாக மாறிவிட்டார். ஆனால் உண்மையில் அது அவரின் குணமல்ல. எம்ஜிஆர் பிரியத்துடன் ஜெயலலிதாவை அழைக்கும் அம்மு என்கிற பெயர்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவரின் சளசளக்கும் பேச்சுக்காக இவருக்கு முதல் முதலில் எம்ஜிஆர் வைத்த பட்டப்பெயர் "வாயாடி" அனைவரும் பம்மிக்கொண்டு இருக்கும்போது அவரிடம் சரிக்கு சரியாய் 'கவுண்டர்' கொடுப்பதால் அந்தப் பெயரை அவர் வைத்தாராம். 

ஜெயலலிதாவிடம் 1969-ம் ஆண்டு விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் இரண்டே கேள்விகள்தான் கேட்கப்பட்டது. அதற்கு வெள்ளந்தியான மனதுடன் பதில் சொல்லியுள்ளார். அந்த பேட்டியில் அவருடன் நடித்த நடிகர்கள் பற்றியும், நடிகையாக ஆகவில்லை என்றால்? என்கிற டெம்ப்ளேட் கேள்விக்கும் அவரின் பதில்கள் கீழே...

" நான் நடித்த நாயகர்களில் எம்ஜிஆருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் சில கன்னடப்படங்களில் நடிக்க துவங்கியிருந்தேன். அப்போது பந்துலு அவர்களின் தயாரிப்பில் ஒரு கன்னடப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தையும் பந்துலு தயாரிப்பதால் அதிலும் என்னை நடிக்க வைக்க எம்ஜிஆரிடம் அனுமதி கேட்டார். அப்போது நடித்துக்கொண்டிருந்த கன்னடப்படத்தை ரஷ் பார்த்தபின் உறுதி சொல்கிறேன் என எம்ஜிஆர் சொன்னார். படம் பார்த்தபின் என்னைப்பார்க்கவே இல்லை, பந்துலு பக்கம் திரும்பி சரி என தலையாட்டிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு பயங்கர சந்தோஷமாகிவிட்டது.  எம்ஜிஆர் - எல்லோரிடமும் சரிசமமாக பழகுவார். அதேபோல் அனைவரிடமும் மரியாதையாக பேசுவார். ஒரு போதும் அது குறையாது. 

மற்ற நடிகர்கள் பற்றி கேட்டபோது ஜெயலலிதா சொன்ன பதில்கள்:

சிவாஜி 

சிவாஜி அவர்களுடன் முதல் முதலில் கலாட்டா கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். முதல் சீன் ஒரு காதல் காட்சி. நான் சாதாரணமாக இருந்தாலும் சிவாஜி உணர்ச்சிகரமான வசனம் பேச வேண்டிய நேரத்தில் சிரித்து விடுவார். அதனால் இரண்டு, மூன்று டேக் போனது. " நான் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் ஆனால் உன்னுடன் நடிக்கும்போது உன்னை குழந்தையாக கையில் தூக்கி வைத்து விளையாடியது நினைவுக்கு வந்துவிடுகிறது" என குறிப்பிட்டார். என்னை அப்படியேதான் பார்த்தார்.

ஜெய்சங்கர் 

செட்டில் விளையாட்டுதனமாக இருப்பார்.எதைப்பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார்.  அனாவசியமான பாலிடிக்ஸ் கிடையாது. யாரைபற்றியும் தேவையின்றி பேசமாட்டார். 

ரவிச்சந்திரன்

 இவர் என்னுடன் நடித்த முதல்படத்தில் காட்டிய அக்கறையை அதன் பின்னர் இழந்துவிட்டார் என்றுதான் நினைக்கிறேன்.  கதாநாயகனுக்குரிய முகவெட்டு,தோற்றம்,நடை, என அனைத்தும் இருந்தாலும் அதை அவர் சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லலாம். 

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

 கணீர் கணீர் என மணியடித்தது போன்ற இவரின் வசன உச்சரிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மணிமகுடம் படத்தில் இவருடன் நடித்தேன். வசனங்களை கையில் கொடுத்தால் முதல் முறை படிக்கும்போதே அதை பலமுறை படித்தது போன்று ஏற்ற இறக்கமாக வாசிப்பார்.

ஏ.வி.எம் ராஜன்

இவருடன் மேஜர் சந்திரகாந்த் படத்தில் நடித்தது. அப்போது செட்டில் யாருடனும் பேசமாட்டார். அவருண்டு அவர் வேலை உண்டு என இருப்பார். செட்டில் கூட கலகலவென பேசியோ சிரித்தோ பார்த்ததே இல்லை.

"நடிக்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?" 

'எனக்கு ஆங்கில இலக்கியம் மீது ஆர்வம் அதிகம். கண்டிப்பாக ஆங்கில இலக்கியத்தை கரைத்து குடித்திருப்பேன் அல்லது ஓவிய ஆசிரியாராக ஆகி இருந்திருப்பேன். காரணம் ஓவியத்திலும் ஆர்வம் அதிகம் எனக்கு.  யாமினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப்போல 'கிளாசிக்கல்' நடனம் ஆட வேண்டும் என ஆர்வம் அதிகம். அதில் ஈடுபட்டிருப்பேன். அவ்வளவு ஏன் அரசியலிலும் ஆர்வம் அதிகம் உண்டு. ஒரு வேளை நடிக்க வராவிட்டால் தீவிர அரசியலில் ஈடுப்பட்டிருப்பேன். தேர்தல் - இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பேன்" என அதில் தெரிவித்திருந்தார். 

இதில் நடனம் ஓவியம் தவிர அனைத்திலும் வெற்றிகரமாக பிற்காலத்தில் சாதித்துக்காட்டியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது

தொகுப்பு: வரவனை செந்தில்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்