1700 அரங்குகளில் காஷ்மோரா; பவர் பாண்டியின் 40 நிமிட ஆச்சரியம்! #க்விக் செவன்

 கார்த்தியின் “காஷ்மோரா” மற்றும் தனுஷின் “கொடி” இரண்டுமே தீபாவளி ரிலீஸ். இப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கேரளாவிலும் மோதிக்கொள்ள தயார். தெலுங்கில் காஷ்மோரா மற்றும் தர்மயோகி என்ற பெயர்களில் டப் செய்யப்படுகின்றன. காஷ்மோரா தெலுங்கு உரிமை பிவிபி சினிமாவும், தர்மயோகி பட உரிமை CH சதீஷ்குமார் வசமும் இருக்கின்றன. இதனால் இப்படங்களில் புரமோஷன் வேலைகளையும் அவர்களே கவனித்துக்கொள்கிறார்கள். முதன்முறையாக கார்த்தி படம் 1700 திரையரங்குகளில் ரிலீஸாகிறது.  கொடி பட விளம்பரத்திற்காக தனுஷூம் த்ரிஷாவும் களமிறங்கியிருப்பதால், இரு படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது

 நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்துவரும், இயக்குநர் ராமின் “தரமணி” ரிலீஸாகவிருக்கிறது. நவம்பர் 20ம் தேதி இசையும், டிசம்பர் 23ம் தேதி படத்தை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வசந்த் ரவி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடித்திருக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து மம்முட்டியை வைத்து “பேரன்பு” படத்தையும் இயக்கி முடித்து விட்டார் ராம்.  

 கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா நடித்துவரும் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் இரண்டாவது டிரெய்லர் நேற்று ரிலீஸாகி, வைரல் ஹிட். சில மணிநேரங்களிலேயே லட்சங்களில் பார்வையாளர்கள் குவிந்தனர். இதற்கு காரணம் படத்தின் ஸ்டைல். க்யூட் மஞ்சிமா, க்ளாசிக் சிம்பு என் இளசுகளை சுண்டியிழுக்கிறது வீடியோ. முதல் பாதி கதையை டிரெய்லரிலேயே புரிந்து கொள்ளமுடிகிறது. இரண்டாம் பாகமே படத்தின் ட்விஸ்டாக இருக்கலாம். எப்படியோ நவம்பரில் ரொமான்ஸ் த்ரில்லர் ரெடி. 

 சைத்தான் படத்தை இயக்கிவரும் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி, அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்கவிருக்கிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கான ஹீரோயின் யாரென்பது முடிவாகாமல் இருந்தது. இப்போது ரம்யா நம்பீசன் உறுதியாகியிருக்கிறார். உடன் ஆனந்த்ராஜ் மற்றும் சதீஷ் நடிக்கிறார்கள். நவம்பர் 2ல் தொடங்கி, ஒரே ஷெட்டியூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறது படக்குழு. சத்யராஜினின் நாதம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இப்படம் தெலுங்கில் ஹிட்டடித்த ஷனம் பட ரீமேக் என்று செய்திகள் பரவி வந்த நிலையில், இயக்குநர் தன்னுடைய சொந்த கதை என்று அச்செய்தியை மறுத்துள்ளார்.  

 விஷால், தமன்னா, சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கத்திசண்டை. இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியிருப்பதற்கு ஒரே காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலு நடித்திருக்கிறார் என்பதே. இப்படத்தில் வடிவேலுவின் அறிமுகக் காட்சியில், கபாலி நெருப்புடா பாடல் பின்னணியில் வருகிறதாம். நீண்ட நாள் கழித்து மீண்டும் நடிப்பதை சிம்பாலிக்காக சொல்கிறாராம் வடிவேலு. நெருப்புடா நெருங்குடா பாப்போம்...  தீபாவளிக்கு ரிலீஸாகவேண்டிய இப்படம், நவம்பர் 18 ரிலீஸ். 

 பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்திருப்பதால் ரிலீஸில் சிக்கல். இதனால் தியேட்டர் கிடைக்குமா என்பதும் சந்தேகம். கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா, அனுஷ்கா சர்மா நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவிருந்த படம்  “ஏ தில் ஹே முஷ்கில்” இப்பொழுது சென்சாரிலும் சிக்கல். அனுஷ்கா சர்மா மற்றும் ஐஸ்வர்யா உடன் ரன்பீர் கபூரின் முத்தக்காட்சிகள் அன்லிமிட்டெட் ரகம். இதனைப் பார்த்த சென்சார், முத்தக்காட்சிகளைப் பாதியாக குறைக்கும்படி அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. சுழட்டியடிக்கும் சிக்கலில் தவிக்கும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்பதுவே சந்தேகம் தான். 

 நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று மிரட்டிய தனுஷ், இயக்குநராகவும் சிக்ஸர் அடித்துவருகிறார். பவர்பாண்டி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்துவருகிறது. ராஜ்கிரண் நாயகனாக நடித்துவரும் பவர்பாண்டி படத்தில், தனுஷூம் நடிக்கிறார். இப்படத்தில் 40 நிமிடங்களுக்கு தனுஷ் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு. இசை சான்ரோல்டன். 

-பி.எஸ்- 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!