Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘முதல் முறை இன்னொருவர் இயக்கத்தில் டி.ராஜேந்தர்!’: என்ன ரியாக்‌ஷன்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர்,மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், நண்டு ஜெகன் ஆகியோர் நடித்து வரும் படம் கவண். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக போஸ் வெங்கட் நடிக்கிறார். இவர் மெட்டிஒலி நாடகத்தில் நடித்து, பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தில் மூலம் சினிமாவிற்குள் வந்தவர். அவரை தொடர்பு கொண்டு கவண் படத்தை பற்றி கதைத்தோம்.

“2003ல ஈரநிலம் படத்திற்கு அப்பறம் இப்போ தான் ஒரு ஹீரோவுக்கு நேரடி வில்லனா நடிக்கிறேன். நான் சிவாஜி படத்தில் நடிக்கும் போதே டைரக்டர் கே.வி.ஆனந்த் எனக்கு நல்ல பழக்கம். அதுக்கப்பறம் அவரோட கோ படத்தில் நடிச்சேன். என்னை அவர் எப்போதும் ஒரு நடிகராக தான் பார்ப்பார். அவரோட எல்லா படத்தோட கதையையும் என்னிடமும் பகிர்ந்து கொள்வார். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதும் வில்லன் கதாபாத்திரம் இப்படி இருக்கணும் அப்படி பேசணும்னு ஒரு ஆளை தேடிட்டு இருந்தார். ஒரு நாள் ‘நீங்க வாங்க போஸ், இந்த கேரக்டருக்கு செட் ஆவிங்களானு பார்க்கலாம்’னு கூப்பிட்டார். நான் அவரை பார்க்க போகும் போதே அவர் வில்லன் கதாபாத்திரம் எப்படி இருக்கனும்னு என்கிட்ட சொன்னாரோ அப்படியே என்னை மாத்திக்கிட்டு போய் நின்னேன். அவரால எதுவும் சொல்ல முடியலை, ஓகேனுட்டார்” என்றவரிடம், அப்படி என்ன பண்ணிட்டு போனீங்க பாஸ் என்று கேட்டோம்.

“கவண் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு 55 வயசுக்கு மேல் இருக்கணும், கண்டிப்பாக படம் முழுக்க மொட்டை தலையோடு தான் இருக்கணும்னு என்கிட்ட சொல்லியிருந்தார். நான் அவரை பார்க்க போகும் போதே மொட்டை அடிச்சுட்டு தான் போனேன். அவர் உடனே ஓகே சொல்லிட்டார். இந்த படத்தில் மொட்டை மட்டும் ரிஸ்க் இல்லை. நான் எப்போதும் 74 கிலோவுக்கு மேல் எடையை கூட்டினது இல்லை. ஆனால் இந்த படத்திற்காக 87 கிலோவுக்கு மேல் எடை போட்டிருக்கேன். அதுமட்டுமில்லாமல் நான் இதுவரை பக்கா சென்னை பாஷை பேசி எந்தப் படத்திலும் நடிச்சது இல்லை. முதல் முறையா இந்தப் படத்தில் லோக்கல் சென்னை பாஷை பேசுற அரசியல்வாதி கேரக்டர் பண்றேன்” என்றவர், விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“நான் இவ்வளவு வருடங்களாக பல நடிகர்களோட நடிச்சிருக்கேன். ஆனால் விஜய் சேதுபதி மாதிரி ஒரு கம்ஃபர்ட்டபுளான நடிகரை பார்த்ததில்லை. நாங்க இரண்டு பேரும் சேர்த்து நடிக்கிற சீன்ல நான் எப்படி பண்ணப்போறேன், அவர் எப்படி பண்ணப்போறார்னு டிஸ்கஸ் பண்ணி அதுக்கப்பறம் தான் ஷூட்க்கு போவோம். அந்த அளவுக்கு தன்னோட நடிக்கிற நடிகர்களை வசதியா ஃபீல் பண்ண வைப்பார். அப்படி பண்ணும் போது நமக்கும் ரொம்ப வசதியா இருக்கும். இந்தப் படத்தில் 30 காட்சிகள் நான் நடிச்சிருக்கேன். எல்லா காட்சிகளையும் நாங்க இப்படி தான் ஷூட் பண்ணினோம். எந்த காட்சிகளிலும் அவர் நடிக்கிற மாதிரியே தெரியாது. அந்த அளவுக்கு லைவ்வா நடிச்சார். அவரோட சேர்ந்து நடிக்கும் போது நானும் ரொம்ப லைவ்வா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்தப் படத்துல என்னோட நடிப்புக்கு எவ்வளவு பாராட்டுகள் வந்தாலும் அது விஜய் சேதுபதிக்கும் சேரும், இதை நான் அவர்கிட்டையும் சொல்லிருக்கேன்” என்ற போஸ், தொடர்ந்தார்.

 

“விஜய் சேதுபதி என்னை முதல் நாள் ஷூட்டிங்கில் பார்க்கும் போது அவருக்கு என்னை அடையாளம் தெரியலை. அதுக்கப்பறம் நான் அவர்கிட்ட பேச்சு கொடுத்துட்டு இருக்கும் போது தான் அவர் என்னை அடையாளம் கண்டுகிட்டார். ‘என்ன போஸ், மொட்டை அடிச்சு, இப்படி எடை போட்டுட்டீங்க’னு ஆச்சரியமாக கேட்டார். கதைக்கு தேவைப்பட்டதுனு கே.வி.ஆனந்த் சொன்னார், அதான் இப்படி மாத்திக்கிட்டேன்னு சொன்னேன். நான் எப்போதும் ஜிம் பாடியா இருப்பேங்கிறதால என்கிட்ட அடிக்கடி உடம்பை எப்படி ஃபிட்டா வெச்சுப்பீங்கனு கேட்பார். நான் தினமும் கிரிக்கெட் விளையாடுவேன். நல்லா ஜிம்ல ஒர்க்-அவுட் பண்ணுவேன்னு சொன்னேன். இப்படியே நிறைய பேசிபோம். ஆனால், நான் தான் அவர்கிட்ட நடிப்பை பத்தி கேட்டுக்கிட்டே இருப்பேன். நான் எவ்வளவு கேள்வி கேட்டாலும், மனுசன் சலைக்காமல் பதில் சொல்லுவாப்ள” என்றவர், இயக்குநர் கே.வி.ஆனந்த் பற்றியும் சொல்கிறார்.

“கே.வி.ஆனந்த் சார்க்கு நான் எப்படி நடிப்பேன்கிறதை தாண்டி நான் என்னென்லாம் விரும்பி சாப்பிடுவேன்கிறது வரைக்கும் அவர் தெரிஞ்சு வச்சிருந்தார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தில் எப்போதுமே சைவ சாப்பாடு மட்டும் தான் போடுவாங்க. ஆனால், நான் அசைவ சாப்பாட்டு பிரியன். என்னோட கால்ஷீட் முடிஞ்சு நான் கிளம்புற அன்னைக்கு மதியம் சாப்பிட போனேன். சாம்பார் சாதத்தை கையில் எடுக்கும் போது கே.வி.ஆனந்த் போன் பண்ணி, ஷூட்டிங் நடந்த இடத்துக்குள்ள ஒரு ரூம்க்கு வர சொன்னார். அங்க போய் பார்த்தா நாட்டுக்கோழி குழம்புல இருந்து பல அசைவ சாப்பாட்டு ஐட்டங்கள் இருந்தன. எல்லாமே நான் விரும்பி சாப்பிடக்கூடிய ஐட்டங்கள். அது எல்லாமே அவர் வீட்டில் இருந்து சமைச்சு கொண்டு வந்திருக்காங்க. இன்னைக்கு உன்னோட கால்ஷீட் முடிஞ்சு கிளம்புற, இன்னைக்காவது உனக்கு பிடிச்ச சாப்பாட்டை கொடுக்கலாம்னு தான் இந்த ஏற்பாடு, நல்ல சாப்பிடு’னு சொன்னார். நான் சாப்பிடுற வரைக்கும் என் பக்கத்தில இருந்தார். அந்தளவுக்கு பாசமா பழக கூடியவர். அவரும் நல்லா சாப்பிடுவார். எந்த சாப்பாடு எந்த கடையில் நல்லா இருக்கும்னு எல்லாத்தையும் அப்பேட்டா வைச்சிருப்பார். அவர்கூட இருந்தா எப்போதும் நம்ம வயிறு ஃபுல்லா தான் இருக்கும்” என்றவரிடம், கவண் படத்துல நடிச்சிருக்க மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க என்று கேட்டோம்.

 

 

 

“படத்தில் டி.ராஜேந்தர் சார் நடிச்சிருக்கார். நானும் அவரும் சேர்ந்து சில சீன்கள் நடிச்சோம். டி.ஆர் சாருக்கே உண்டான பாணியில் கலக்கியிருக்கார். நான் அவரோடு நடிக்கும் போது அவர்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன். நீங்க இதுவரைக்கும் நடிச்ச படங்களுக்கு எல்லாம் நீங்க தான் டைரக்டர், இப்போ தான் முதல்முறையா வேற ஒரு இயக்குநரோட டைரக்ஷன்ல நடிக்கிறீங்க, எப்படியிருக்கு சார்னு கேட்டேன். எனக்கும் முதல்ல கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. போக போக கே.வி.ஆனந்தின் டைரக்ஷன் ஸ்டைல் எனக்கு பிடிச்சிருக்கு. இனி அடிக்கடி வேற இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பேன்னு சொன்னார். அப்பறம் படத்தில் விக்ராந்த் நடிச்சிருக்கார். நான் சி.சி.எல்ல கிரிக்கெட் விளையாடும் போதே விக்ராந்த் நல்ல பழக்கம். அவர் ஹீரோவா சில படங்கள் நடிச்சிட்டு இருக்கும் போது, இந்த மாதிரி கேரக்டர் ரோல்ல நடிக்கிறது பெரிய விஷயம். இந்தப் படத்தின் மூலம் விக்ராந்த் நல்ல நடிகர்னு பெயர் எடுப்பார். அந்தளவுக்கு நல்ல கதாபாத்திரம்” என்றவர், தொடர்ந்தார்.

“நான் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு 2003ல வந்தேன். கிட்டத்தட்ட 13 வருஷங்கள் கழித்து மீண்டும் எனக்குள் முதல் படம் நடிக்கிற ஒரு உணர்வு வந்திருக்கு. நான் செட்டுக்குள் வரும் போதே ஒரு அறிமுக நடிகனை போல தான் நினைக்கிறேன். இந்தப் படம் என்னோட கேரியர்ல ரொம்ப முக்கியமான படம். என்னதான் பல படங்களில், நிறைய கேரக்டர் ரோல்ல நடிச்சிருந்தாலும் கவண் படம் என் வாழ்க்கையையே மாற்றும் என நம்பிக்கை வந்திருக்கு. இந்த நேரத்துல நான் கே.வி.ஆனந்த் சாருக்கு தான் நன்றி சொல்லணும். அவர் என்னை பார்க்கும் போதுலாம் ‘நீ ரொம்ப நல்ல நடிகர்யா, உனக்கு ஒரு ப்ரேக் கிடைச்சா நல்லாயிருக்கும்’னு சொல்லுவார். இன்னைக்கு அவர் தான் எனக்கு ஒரு ப்ரேக் கொடுத்திருக்கார். இந்தப் படத்தில் மூலம் போஸ் வெங்கட்டை எப்படிவேண்டுமாலும் காட்டலாம்னு மற்ற இயக்குநர்களுக்கு தோணும்” என்று நம்பிக்கையோடு பேசி முடித்தார் போஸ் வெங்கட்.

மா.பாண்டியராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்