2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்!

ந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ...

2006:

எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலைப் பெற்றது. புரட்சிக்கலைஞரின் தர்மபுரி, சுப்ரீம்ஸ்டாரின் தலைமகன் இரண்டுமே படு தோல்வி அடைந்தது.

2007:

முதன் முறையாக இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் படம் என அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ 'அழகிய தமிழ்மகன்' படத்துக்கு தான். ஆனால்,  ஹிட்டானது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த வேல். இதே நாளில் தான் வெற்றிமாறன் எனும் மகத்தான கலைஞனின் வருகையும் நிகழ்ந்தது. தனது பொல்லாதவன் என்ற கமர்ஷியல் மெட்டீரியல் மூலம் களம் இறங்கி கவனம் பெற்றார். படமும் நல்ல ஹிட். கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன் படங்கள் வெற்றி பெறவில்லை.

2008:

பில்லா என்ற ப்ளாக்பஸ்டருக்குப் பின் அஜித் நடிக்கும் படம், ராஜுசுந்தரம் இயக்கும் படம் என ஏக எதிர்பார்ப்புகள் பெற்றது ஏகன். ஆனால் இப்போது வரை இயக்குநருக்கு இதுவே கடைசி படமாகவும் அமைந்தது பட ரிசல்ட்டின் எதிரொலி. இந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டரான 'மெய்ன் ஹூ நா' படத்தின் ரீமேக் தான் ஏகன். சென்ற தீபாவளில் எகிறி அடித்த ஹரியும் இந்த தீபாவளியில் சேவல் மூலம் பல்ப் வாங்கினார். ஆனால் படித்தவுடன் கிழித்துவிடவும் காமெடி மட்டும் சேனல்களில் ரிப்பிட் அடித்தது வடிவேலுவின் மேஜிக்.

2009:

நடிகர் ரமேஷ் கண்ணா கதையை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். சூர்யா, நயன்தாரா, வடிவேலு, முக்கிய வேடத்தில் சரோஜா தேவி என படத்தின் ஒவ்வொரு செய்தியும் 'ஆதவன்' படத்துக்காக அடித்தளத்தை ஆடியன்ஸ் மனதில் போட்டு வைத்திருந்தனர். படத்துக்கு மிகப் பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது. சூர்யாவின் முந்தைய படமான அயன் இதற்கு ஒரு மைலேஜாக இருந்தது. வசூலில் நல்ல லாபமும் பெற்றது படம். இதேவேளையில் காடு, தீவிரவாதம், "சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சிட்டா வெறும் சுண்ணாம்பு தான் மிஞ்சும்" என பேராண்மையின் ஒவ்வொரு ஷோவிலும் ஜெயம் ரவி ரூபத்தில் லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜெனநாதன். இருந்தும் இந்த விளக்கங்கள், அவரது திரைபாணி சாமானிய ஆடியன்ஸுக்கும் பிடித்திருந்ததால் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும் நல்ல கவனம் பெற்றது.

2010:

பிரபுசாலமனை தேசத்தின் கிராமங்கள் தொடங்கி தேசிய விருது வரை அழைத்துச் சென்றது மைனா. இமானின் இன்னொரு வெர்ஷன் இசையை காட்டியதால் படம் அவருக்கும் மிக முக்கியமானது. படத்தின் சென்டிமெண்ட்கள், நெகட்டிவ் க்ளைமாக்ஸையையும் தாண்டி ரசிகனைக் கவர்ந்தது. தெலுங்கு ரெடி தமிழில் 'உத்தமபுத்திரன்'ஆக ரெடியாகி ஆவரேஜ் ஹிட்டடித்தது. வெங்கடேஷின் கமர்ஷியல் 'வல்லகோட்டை', புஷ்கர் காயத்ரியின் புதிய ட்ரீட் மெண்ட்டான 'வ' படமும் எடுபடாமல் ஒதுங்கிக் கொண்டது.

2011:

சூப்பர்ஹீரோவாக விஜய் என வேலாயுதத்துக்கும், போதிதர்மனாக சூர்யா என ஏழாம் அறிவுக்கும் பலத்த எதிர்ப்பு இருக்கவே செய்தது. இடையில் 'பாப்பா தள்ளிப்போய் விளையாடு' என ட்விட்டர் தகராறுகளும் நிகழ்ந்தது. போதிதர்மன் போர்ஷனில் இருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க மிஸ்ஸாக ஏழாம் அறிவு கொஞ்சம் தொய்வடைந்தது. ஆனால், பாட்டு, ஃபைட்டு, காமெடி என சரிவிகித காம்போவாக வந்து இறங்கிய வேலாயுதம் ஹிட்டானது. 

2012:

100 கோடி க்ளப்பிள் இணைந்த முதல் தமிழ் படம், விஜய்யின் கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட், வேற லெவல் இயக்குநரான முருகதாஸ் என 'துப்பாக்கி' காட்டி கோலிவுட்டையே கலக்கினார் முருகதாஸ். துப்பாக்கி சத்தத்துக்க்கு நடுவில் வந்த சுவடே இல்லாமல் பிறகு லேட் பிக்கப்பாகி ஆவரேஜாக ஓடியது போடா போடி.

2013:

மாஸ் படம் ஆரம்பம், காமெடி படம் அழகுராஜா என இரண்டுக்கும் டிக்கெட் புக்கிங்கில் பிஸியாக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், ஆச்சர்யப்படும்படி கவனம் கவர்ந்தது சுசீந்திரனின் வித்தியாச ட்ரீட்மெண்டில் வெளியான பாண்டியநாடு. ஸ்டைலிஷ் மேக்கிங், அஜித், மாஸ் பிஜிஎம் என பல ப்ளஸ்களால் ஆரம்பம் பாக்ஸ் ஆஃபீசில் கெத்து காட்டியது. அதே போல பாண்டியநாடும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், காமெடி எதிர்பார்த்துப் போய் கடுப்பாக்கிய அழகுராஜா தோல்வியடைந்தது.

2014:

 

விஜய் முருகதாஸ் கூட்டணி, துப்பாக்கி போலவே தீபாவளிக்கு வெளியிட தேதி குறித்தது என படு ஜோராக கத்திக்கு ரெடியானார்கள் ரசிகர்கள். ரசிகர்களுக்கான படமாக இல்லாமல் போனாலும், ஒரு அவசியமான கருத்தை வலியுறுத்தி மாஸ் ஹீரோவை வைத்து சென்சிபிளான விஷயங்களைப் பேச வைத்து எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது கத்தி. இதனுடனே வெளியான பூஜை வரவேற்பு கம்மி என்றாலும் பெரிய கலக்‌ஷன் என்று தகவல்கள் மட்டும் வந்தது.

2015:

ஸ்லீப்லெஸ் நைட்ஸ் படத்தின் அதிகாரப் பூர்வ ரீமேக் என்ற தகவலுடனே 'தூங்காவனம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டார் கமல். மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே படத்தை எடுத்தும் முடித்தார்கள். ஆனால் வீரத்திற்குப் பின் அஜித்தை வைத்து சிவா இயக்கிய 'வேதாளம்' ஆலுமா டோலுமா என பாக்ஸ் ஆஃபீசில் கெட்ட ஆட்டம் போட்டது. நல்ல மேக்கிங் என்ற பெயரை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டது தூங்காவனம்.

2016:

முதன் முறையாக இரட்டைவேடத்தில் தனுஷ் என கொடி படத்துக்கும், ப்ளாக் மேஜிக் பற்றிய கார்த்தி நடிக்கும் படம் என காஷ்மோராவுக்கும் அதிதீவிர எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப் போனால் காஷ்மோராவுக்கு கொஞ்சம் கூடுதல் எதிர்ப்பார்ப்பு உள்ளது. கூடவே மா.கா.பா.ஆனந்த் நடித்திருக்கும் 'கடலை', பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் என விளம்பரங்களில் அலறிக் கொண்டிருக்கும் 'திரைக்கு வராத கதை' படங்களும் வெளியாகிறது. இதில் எது வெல்லும்? படங்கள் தான் சொல்லும். அது வரை காத்திருப்போம்!

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!