கொடி காஷ்மோராவோடு என்ன என்ன படங்கள் வருகின்றன? #WeekendMovies

தீபாவளிக்கு திரி கிள்ளி வெடிக்கத் தயாராக இருக்கும் படங்கள் எது எது? என்னென்ன கதை.. சின்ன இன்ட்ரோ இதோ..!

தமிழ்

கொடி: 

எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களுக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் படம் 'கொடி'. முதன் முறையாக தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். த்ரிஷா, அனுபமா பரமேஷ்வரன் என இரண்டு ஹீரோயின்கள், முக்கிய வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் என பெரிய கூட்டணியுடன் உருவாகியிருக்கிறது படம். சந்தோஷ் நாரயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளது. 

காஷ்மோரா:

ப்ளாக் மேஜிக் பற்றிய படம் என செய்தி வந்ததிலிருந்து பற்றிக் கொண்டது காஷ்மோராவுக்கான எதிர்பார்ப்பு. வரலாற்றுப் படமான காஷ்மோராவில் மொட்டைத் தலையுடன் போர்வீரன் வேடத்தில் ஒருகெட்டப், ப்ளாக் மேஜிக் செய்யும் காஷ்மோரா கெட்டப் என கார்த்தியின் லுக் டிரெய்லர் மூலமாக கவனம் பெற்றிருக்கிறது. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்கள். 'ரௌத்திரம்', 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்கள் இயக்கிய கோகுல் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

கடலை:

மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீபாவளித் துப்பாக்கி' என்ற பெயரில் துவங்கிய படம் தான் 'கடலை'யாக பெயர் மாற்றம் பெற்று வெளியாகவிருக்கிறது.சி.எஸ். சாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் சகாயசுரேஷ். ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் படம் 29-ம் தேதி வெளியாகிறது.

திரைக்கு வராத கதை:

நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி ஆகியோர் லீட் ரோலில் நடித்திருக்கும் படம் தான் திரைக்கு வராத கதை. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் படம். காதல் கலந்த ஹாரர் படமாக இருக்கும் என சொல்கிறார் இயக்குநர் துளசிதாஸ். பிசாசு, பசங்க 2 படங்களுக்கு இசையமைத்த அரோல் கரோலி இந்தப் படத்துக்குப் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

பருத்திவீரன்:

ஜாஸ் சினிமாஸில் இந்த வார ப்ளே பேக் படம் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான 'பருத்தி வீரன்'. படம் நாளை (27.10.16) மட்டும் திரையாகும். 

 

இந்தி

ஏ தில் ஹை முஷ்கில்:

இது கரண் ஜோகரின் கம்பேக் படம். ஆந்தாலஜியான 'பாம்போ டாக்கீஸ்' படத்தில் 'அஜீப் தஸ்தன் ஹை யே'க்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து கரண் எழுதி இயக்கியிருக்கும் படம் இது. ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா ஷர்மா என செம ரொமாண்டிக் காம்போவுடன் படம் இயக்கி முடித்திருக்கிறார் கரண். ரிலேஷன்ஷிப்களும் ப்ரேக்கப்களும் தான் படத்தின் ஒன்லைன். அதனால் தான் படத்தின் தலைப்பே 'இந்த மனசு எவ்வளவு சிக்கலானது' (ஏ தில் ஹை முஷ்கில் அர்த்தம்). 

ஷிவாய்:

எட்டு வருடங்களுக்குப் பிறகு அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் படம் 'ஷிவாய்'. மிக அமைதியான ஷிவாய் (அஜய்) தன் குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் தான் கதை. சயிஷா சய்கல், எரிகா கார், விர் தாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு இசையமைத்திருக்கிறார் மிதுன்.

ஆங்கிலம் 

ப்ரிஜெட் ஜோன்ஸ் பேபி: 

2004ல் வெளியான ப்ரிஜெட் ஜோன்ஸ்: தி எட்ஜ் ஆஃப் ரீசன் படத்தின் சீக்குவல் தான் ப்ரிஜெட் ஜோன்ஸ் பேபி. 40 வயதாகும் ப்ரிகெட் தன் பழைய காதலரைச் சந்திக்கிறார். அதே நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை. படத்தை ஷரோன் மேக்யுரி இயக்கியிருக்கிறார்.

அவதார்:

பண்டோரா கிரகத்தை ஐமாக்ஸ் திரையில் காண விரும்புபவர்களுக்கு என ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்திருக்கிறது ஜாஸ் சினிமாஸ். . புக்கிங் எப்போது துவங்குவார்கள் என்பது மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.

 

 

 

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!