Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊர் ஊராகச் சென்று கொடி பிடிக்கும் தனுஷ்... காரணம் சிவகார்த்திகேயனா?

 

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இனி அடிக்கடி வருவேன் என சொல்லியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பூஸ்டாக அமைந்துள்ளது. அதே நேரம் தனுஷின் திடீர் பயணம் ஏன் என்கிற விவாதமும் சினிமா வட்டாரத்தில் பலமாக உள்ளது.

தனுஷ் பயணம் ஒரு ரவுண்ட் அப் 

கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்குமுன் தயாரித்த படங்களுக்கான தொகையை விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லை என விநிநோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் “கொடி”க்கு சிக்கல் உண்டாகியுள்ளது. இது இப்படி இருக்க, இதுவரை எந்தப்படத்துக்கும் ஊர் ஊராக சுற்றாத நடிகர் தனுஷ், கொடி படத்தை குடும்பத்தோடு பாருங்கள், என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களிடம் சொல்லி வருகிறார்.

கடந்த மூன்று நாட்களாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளார். குறிப்பாக சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் செம ஹேப்பியாக உள்ளாராம் தனுஷ். தமிழகம் முழுவதும் ஒரே பார்முலாவை பாலோ பண்ணும் தனுஷ், ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு ஒரு பாடலை பாடுகிறார். இந்த ஊரை என்னால மறக்கமுடியாது என கடந்த கால சில நினைவுகளை கூறும் அவர் அடுத்த சிலவார்த்தைகளுடன் கிளம்பிவிடுகிறார்.

 

"ரெமோ"  "ஷோ" வுக்கு இடையில் தனுஷ் 

சேலத்தில் கொடி படத்தில் இருந்து பாடிய தனுஷ், திருச்சியில் நேற்று காலை எல்.ஏ சினிமாஸ் திரையரங்கத்துக்கு வந்தார். தனுஷ் வருகைக்காக வேலையில்லா பட்டதாரி திரையிடுவதாக இருந்தது. ஆனால் அதெல்லாம் வேண்டாம் என நினைத்த தியேட்டர் நிர்வாகம், கடந்த சில தினங்களாக ஓடிக்கொண்டிருக்கும், ரெமோ படத்தையே ஓட்டினார்கள். தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பை ரசித்துக்கொண்டிருக்க, இயக்குனர் வேல்ராஜ், சுப்ரமணிய சிவா, நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் 'நெருப்புடா' புகழ் அருண் ராஜா சகிதமாக தனுஷ் திரையரங்கத்துக்குள் நுழைந்தபோது ரெமோ நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரசிகர்களை சந்தித்த தனுஷ், ரசிகர்கள் விருப்பத்துக்கு இணங்க, “டங்காமாரி” பாடலின் சிலவரிகளை பாடினார். அடுத்து ”திருடா திருடி நடித்தபோது, இந்த ஊரில் 35 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது ரசிகர்கள் கொடுத்த ஆதரவை நான் இப்போதும் மறக்கவில்லை” என்றார்.

இப்படி ஊர் ஊராகப் போகும் தனுஷின் வருகைக்காக ரசிகர்கள் காலையில் இருந்தே காத்துகிடக்கிறார்கள். தனுஷ் வருவதற்கு முன் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜிம்பாய்ஸ் 15க்கும் மேற்பட்டவர்கள் கூடவே வருகின்றார்கள். அவர்கள் தனுஷை நெருங்கவே விடுவதில்லை. நெருங்கும் ரசிகர்களை  ரசிகர்கள் மனம் நோகும் அளவுக்குத் திட்டி தீர்க்கிறார்கள். மின்னல் வேகத்தில் வந்து போகும் தனுஷ் வருகைக்காக அந்தந்த மாவட்டத்தில் லட்சக்கணக்காண ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புலம்பி தீர்த்தார்கள். 

திருநெல்வேலி ரசிகர்களுடன் செல்பி 

தமிழகம் முழுவதும் தனுஷை யாரும் நெருங்க முடியவில்லை ஆனால் திருநெல்வேலி தனுஷ் ரசிகர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்பி எடுத்துகொண்டார்கள். அங்கு மேடையேறிய தனுஷ், ”உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பையும், பாசத்தையும் மறக்க முடியவில்லை. அதனால்தான் உங்களை தேடி வந்துள்ளேன். 10ஆண்டுகளுக்கு முன்பு இதே தியேட்டரில் ‘புதுப்பேட்டை’ படம் திரையிட்டபோது வந்தேன். தற்போது வந்து இருக்கிறேன். இனி இந்த அளவு காலதாமதம் ஆகாது. அடிக்கடி உங்களை சந்திக்க வருவேன். கொடி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படத்தை வெற்றி பெற செய்யுங்கள்” என பேசிவிட்டு கிளம்பினார். 

இது குறித்து விசாரித்தபோது, தனுஷின் மாரி படம் கொடுத்த வசூலை அவரது அடுத்த படங்களான தங்கமகன், தொடரி உள்ளிட்டவை தரவில்லை. இந்தப் படங்கள் பின்னடைவை சந்தித்ததால், கொடி படத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தனுஷ் நினைக்கிறார். அதனால்தான் பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் கொடி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதில் ஆர்வமாக இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 450க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீலீஸ் ஆகிறது கொடி. அதிலும் சிக்கல் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார்கள். 

கைக்கொடுக்குமா கொடி

இந்தப் படத்தை இயக்கும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் இயக்கியவர். கொடி படத்தில் முதல்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பாடல்கள் நினைத்தபடி நன்றாக போயிருப்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிலவாரங்களுக்கு முன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுத விசயம் பூதாகரமாகியுள்ளது. இதற்கு காரணம் தனுஷ்தான் காரணம் எனப் பலமான பேச்சு கோடம்பாக்க வட்டாரத்தில் உள்ளது. மேலும் அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அதிகமாகியுள்ளதால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். அதற்காக இப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தனுஷ் என்கிறார்கள். 

தனுஷின் மற்ற படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

-சி.ய.ஆனந்தகுமார்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்