’பிரபு சாலமன் இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்புவாராம்.. ஏன்?’ | Even Rajini would like to act in Prabhu Solomon movie says Chinni Jayanth

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (27/10/2016)

கடைசி தொடர்பு:18:39 (13/03/2017)

’பிரபு சாலமன் இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்புவாராம்.. ஏன்?’

கயல் படத்தில் நடித்த சந்திரன் மற்றும் ஆனந்தி மறுபடியும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரூபாய். இந்த படத்தை சாட்டை படம் எடுத்த இயக்குநர் அன்பழகன் இயக்கியிருக்கிறார். படத்தை இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களும் அதன் புகைப்படங்களும் இதோ...

*நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஆடம்ஸ், இன்று நான் யாரையும் பில்டப் செய்து அழைக்க மாட்டேன். அதனால் நீங்க எல்லாரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லியதும், மேடையில் இருந்த இசையமைப்பாளர் இமானும் நடிகர் சின்னி ஜெயந்த்தும் வெடித்து சிரித்தனர்.

*விழாவில் பேசிய இசையமைப்பாளர் இமான், “முன்பெல்லாம் நான் இசையமைக்கும் படங்களிலெல்லாம் நடிகர் சூரி இருப்பார். அதே போல் சமீபத்தில் நான் இசையமைக்கும் படங்களில் நடிகர் ஹரீஷ் உத்தமனை அடிக்கடி பார்க்கிறேன். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அவர் இன்னும் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று அவர் கூறியபோது, தன்னடக்கமாக வணக்கம் வைத்தார் நடிகர் ஹரிஷ் உத்தமன்.

*சின்னி ஜெயந்த் பேசும் போது, “படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் நடிப்பில் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்பவர் இயக்குநர் பிரபு சாலமன். இப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று என் அண்ணன் ரஜினிகாந்த் ஆசைபடுவார். எந்திரன் 2.0 படம் முடிந்த பிறகு ரஜினி அண்ணனிடம், ‘பிரபு சாலமனுக்காக ஒரு படம் பண்ணுங்கண்ணே”னு நானே போய் சொல்வேன்” என்றதும் இயக்குநர் பிரபு சாலமன் வெட்கத்துடன் தலை குனிந்தார். 

*நடிகர் மாரிமுத்து பேசும் போது, “தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரை மார்க்கண்டேயன்னு அழைப்போம். அவர் முதல் மார்க்கண்டேயன் என்றால் இரண்டாம் இடத்தில் இருப்பவர் சின்னி ஜெயந்த் தான். இவரும் தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கண்டேயன் தான்” என்றதும், சின்னி ஜெயந்த் எழுந்து நின்று வணங்கி தனது நன்றியை தெரிவித்தார். 

*முதலில் யாரையும் பில்டப் வார்த்தைகளால் அழைக்கமாட்டேன் என்ற தொகுப்பாளர் ஆடம்ஸ், தான் ஏற்கெனவே எழுதி வைத்துள்ள பில்டப் அடைமொழியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று சிலருக்கு மட்டும் பில்டப் செய்தார். அந்த வரிசையில் இசையமைப்பாளர் இமானை பேச அழைக்கும் போது அவர் கொடுத்த பில்லட் தாங்காமல், ஆடம்ஸ் பேசிக் கொண்டு இருக்கும்போதே அவரின் பின்னால் வந்து நின்று கிண்டல் செய்தார் இமான்.

*விழாவின் நிறைவாக, பத்திரிகையாளர் முன்பு படத்தின் இசையை வெளியிட்டனர், ரூபாய் படக்குழுவினர்.

- மா.பாண்டியராஜன், படங்கள்:  தே.அசோக்குமார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close