'நான் இப்போது கமலுடன் இல்லை!' - கௌதமியின் கடிதம்

 

கிட்டத்தட்ட 13 வருடம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் கமலும், கௌதமியும். கமல் நடித்து சமீபத்தில் வெளிவந்த பாபநாசம் படம் உட்பட பல படங்களில் நாயகியாகவும் நடித்த கௌதமி, கமலஹாசனைப் பிரிந்துவிட்டதாக தனது வலைதளத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

”இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கிறது. ஆம்.  நானும் திரு. ஹாசனும் இப்போது ஒன்றாக இல்லை. கிட்டத்தட்ட 13 வருட இணை வாழ்விற்குப் பிறகு, என் வாழ்வில் நான் எடுத்த மிகக்கடுமையான முடிவாக இது அமைந்துவிட்டது. இப்படியான ஓர் உறுதியான உறவில், இருவரது பாதையும் வேறு வேறு திசையில் என்று உணரும்போது, கனவுகளோடு சமசரம் செய்து கொண்டு வாழ்வைத் தொடர்வதா அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு செல்வதா என்று முடிவெடுப்பது அத்தனை எளிதானதல்ல. மிக அதிக காலம் - கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் - இந்த இதயத்தை நொறுக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்குப் பிடித்தது. இறுதியில் இந்த முடிவுக்கு வந்தேன்.  

எனது நோக்கம் அனுதாபம் தேடுவதோ குற்றம் சொல்வதோ அல்ல. என் வாழ்வின் மூலம், மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதையும், இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் அந்த மாற்றம் என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததுபோல இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றின் தாக்கம் நமது பிரிவிற்கான முக்கியத்துவங்களை பாதிக்கக்கூடாது. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த மாதிரியான முடிவெடுப்பது மிக சிரமமானதாகத்தான் இருக்கும் என்றாலும் எனக்கு இந்த முடிவெடுப்பது முக்கியமானதாகவும் உள்ளது. நான் ஒரு தாய் என்பதுதான் எனக்கு முதலாவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. நான், என் மகளுக்கு சிறந்த தாயாக இருப்பது என் கடமை. அதற்காக என் மன அமைதி எனக்கு முக்கியம்.    

 சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னிருந்தே, நான் திரு. கமலஹாசனின் விசிறி என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அவரது திறமைகளையும், சாதனைகளையும் எப்போதும்போலவே வியந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அவரது உடையலங்கார நிபுணராகப் பணிபுரிந்ததன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது கனவுகளுக்கு நேர்மையாக, வடிவம் கொடுத்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமைதான். இதுவரை அவரது சாதனைகளோடு, இன்னும் பல சாதனைகளையும் அவர் தனது ரசிர்களுக்காக கொடுக்க இருக்கிறார். அவற்றைப் பார்த்துக் கைதட்டி ரசிக்கக் காத்திருக்கிறேன்.    

என் வாழ்வின் இந்த அதிமுக்கியமான நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ளக் காரணம், என் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் என்னால் முடிந்தவரை கண்ணியத்தோடு இருந்திருக்கிறேன். என் வாழ்க்கைப் பயணத்தின் ஓர் அங்கமாக நீங்களும் பலவிதங்களில் என்னோடு இருந்திருக்கிறீர்கள். கடந்த 29 வருடங்களாக எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் நீங்கள் பல வழிகளில் வழங்கியுள்ளீர்கள். வாழ்க்கையின் மிகக் கடினமான, வலி மிகுந்த காலங்களில் எல்லாம் என்னை மேலும் வழிநடத்தும் உங்கள் அன்பிற்கு என்றென்றும் நன்றி.

அன்புடன்
கௌதமிDo you like the story?

Please Appreciate the Author by clapping!