அஜித்துக்கு ராசியான ஊட்டி... ஏன் தெரியுமா?

 

 

 

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடத்துவதில் எப்போதுமே சிக்கல் தான். கூடிவிடும் கூட்டத்தில், என்னசெய்வதென்றே தெரியாமல்,  ஷுட்டிங்கிற்கு பேக்-அப் சொல்லிவிட்டு பிற மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.அஜித், விஜய் பட ஷூட்டிங்குள் பெரும்பாலும், தமிழ்நாட்டில் நடப்பதில்லை. ஆனால், அஜித்திற்கு ஊட்டி எப்போதுமே ராசியான ஒரு இடம்.அதற்கு என்ன காரணம் தெரியுமா?

 நிகழ்ச்சி - 1

            அஜித் வெள்ளித்திரையில் முதன்முதலாக   அறிமுகமான திரைப்படம் 'அமராவதி'.  'தலைவாசல்'  படத்தை இயக்கிய செல்வா  டைரக்‌ஷன் செய்ய அஜித்துக்கு ஜோடியாக நடிகை சங்கவி  நடித்த முதல்படம் .  'அமராவதி'  படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஊட்டியில் நடந்தது. அறிமுக நாயகன்  அஜித் கைவசம் கார் இல்லை.   சென்னையில் இருந்து ஊட்டி செல்வதற்கு அஜித்துக்கு ரயில் டிக்கெட் எடுத்து கொடுத்து இருந்தனர். ஊட்டிக்கு சென்று விட்டால்  அருகிலுள்ள இடங்களை பார்ப்பதற்கு வாகனம் இல்லை என்பதால்  சென்னையில் இருந்து பைக்கிலேயே  ஊட்டிக்குச் சென்றார். 'அமராவதி' படப்பிடிப்பு  பிஸியாக நடந்து கொண்டு இருந்தது.

                       அப்போது திடீரென ஆரவார சத்தம். வரிசையாக வந்துநின்ற வாகனங்களில் இருந்து குபுகுபுவென மணிரத்னம் சினிமா யூனிட்  ஆட்கள் இறங்கினர்.   பிரசாந்த், ஆனந்த் நடித்த   'திருடா திருடா' படத்துக்காக  தனது படக்குழுவினரோடு அஜித் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அருகில் லொகேஷன் பார்க்க வந்தார். அப்போது  இளசுகள் மத்தியில்  பிரசாந்த்  புகழ் கொடிகட்டி பறந்தது. தனியாக தனது சொந்த காரில் வந்து இறங்கினார் பிரசாந்த்.  பிரசாந்த்தைப் பார்க்க கும்பல் கூடிவிட்டது.  'அமராவதி' யூனிட்டில் வேலைப் பார்த்த  ஆட்கள் அத்தனைபேரும் பிரசாந்தை வேடிக்கைப் பார்க்க சென்று விட்டனர்.  அஜித் மட்டும் தனித்து நின்றபடி  பிரசாந்திடம் ஆர்வமாக ஆட்டோகிராப் கேட்கும்  கூட்டத்தை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அஜித்  அருகில் இருந்த தனது  மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் 'ஏன் சார் நீங்க பிரசாந்தை பார்க்க போகலியா...' என்று கேட்டார். 'சார்  நான் பியூச்சர் ஹீரோகூட இருக்கேன்,  சார்..' என்று  பதில் சொல்ல நெகிழ்ச்சியில் கண்கலங்கி விட்டார், அஜித்  அன்று  இறுகப்பற்றிக் கொண்ட   சுரேஷ் கையை  இன்றுவரை விடவே இல்லை, அஜித்.

நிகழ்ச்சி - 2

              அடுத்து பிரசாந்துடன் இணைந்து  இன்னொரு ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு அஜித் வளர்ந்தார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 1996-ல்  'கல்லூரி வாசல்' படத்துக்காக  அஜித்தை ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் பவித்ரன். பிரசாந்த், அஜித் மட்டுமல்ல   பூஜா பட், தேவயானி என்று ஏகப்பட  நட்சத்திரப் பட்டாளங்களை ஒப்பந்தம் செய்தார் பவித்ரன். 'கல்லூரி வாசல்' திரைப்படத்தின்  முழுப்படத்தின் படப்பிடிப்பும்   ஊட்டியில் நடந்தது .  அப்போது பிரசாந்த் புகழின் உச்சத்தில் இருந்தார் அதனால் அவருக்கென்று பெரிய ஹோட்டல் ஒன்றில் ஸ்பெஷலான சூட் ரூம் ஏற்பாடு செய்து இருந்தனர்.   பவித்ரனிடம் வேலை பார்த்துவந்த உதவி இயக்குனர்கள் தங்கும் சாதாரண அறைகளில் ஒன்றை  அஜித்துக்கு ஒதுக்கினார்கள். ' டபுள் ஹீரோவில் நானும் ஒருவன் தானே எனக்கு மட்டும்  எதுக்கு சாதாரண ரூம்' என்று கோபப்படவில்லை அஜித். தனது தனிப்பட்ட தேவைகளுக்காக தயாரிப்பு தரப்பிடம் சண்டை போடவில்லை. 'கல்லூரி வாசல்' படத்துக்காக  கால்ஷீட் கொடுத்து இருந்த தேதிகள்வரை அந்த  சாதாரண அறையிலேயே தங்கி நடித்துக் கொடுத்தார், அஜித்.      

நிகழ்ச்சி -3

              தமிழ் சினிமாவில் அஜித் தனக்கென்று தனியிடத்தை  பெற்றுவிட்டு நடித்த திரைப்படம்   'ராஜா'. விஜய் சினிமா கேரியரில் 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் வாயிலாக அவருக்கு பிரேக் கொடுத்த  இயக்குனர் எழில்தான் 'ராஜா' படத்தை இயக்கினார். அஜித்துடன் ஜோதிகா ஜோடியாக நடித்த 'ராஜா' படத்தின்  படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. 'ராஜா' படத்துக்கு பிறகு அஜித்துடன் வடிவேலு சேர்ந்து நடிக்கவே இல்லை என்பது தனிக்கதை.   அதே தேதிகளில்  பிரசாந்த் ஹீரோவாக நடித்த 'அப்பு' படத்தின் ஷூட்டிங்கும்  ஊட்டியில் நடந்தது.  வசந்த் இயக்கிய  'அப்பு'வில் பிரசாந்துடன் தேவயானி, பிரகாஷ்ராஜ் நடித்தனர்.  'ராஜா' படத்தின் ஷூட்டிங்கும் 'அப்பு' படத்தின் படப்பிடிப்பும் ஒரே ஷெட்யூலில் ஊட்டியில் நடந்தது. அன்றைய நாளில்  உலகம் அறிந்த ஸ்டார் வேல்யூ பெற்ற நடிகராக உயர்ந்து இருந்தார், அஜித்.  அப்போது பிரசாந்துக்கு 'அப்பு' படத்துக்காக சூட் ரூம் அமைத்துக் கொடுத்து இருந்தனர். 'ராஜா' படத்துக்காக  அஜித்துக்கென்று ஸ்பெஷலாக ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூம்  அமைத்துக் கொடுத்தனர். அஜித் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கித் தருவதற்கு என்று இரண்டு ஆட்களை நியமித்து இருந்தது, தயாரிப்பு தரப்பு.

அஜித்தின் சினிமா கேரியரில் அவர் படிப்படியாக உயர்ந்த இடத்தை பெற்றதற்கும் ஊட்டிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

- சத்யாபதி               

Do you like the story?

Please Appreciate the Author by clapping!