அச்சம் என்பது மடமையடாவிற்கும், அமெரிக்க அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

அச்சம் என்பது  மடமையடா

" இது ஒரு ட்ராவல் ஸ்டோரி... ஒரு அழகான காதல்... காதல்னா இது ரொம்பவே அழகா இருக்கும். அவ சிரிக்கும் போது, அவளோட அந்த கன்னங்களுக்கும், உதடுகளுக்கும் இடையே சில சுருக்கங்கள் வரும்... அதப் பார்த்துட்டே இருக்கலாம். அவ்ளோ அழகு... இப்படி அணுஅணுவா ரசிக்குற பொண்ணு கூட ஒரு பைக் ட்ராவல். புடிச்ச தண்டர்பேர்ட் பைக்ல, புடிச்ச அந்தப் பொண்ணோட... சான்ஸே இல்ல... அப்படியே போகுது... அங்க தீடீர்னு... ஒரு பிரச்சனை... பிரச்சினைன்னா ரொம்ப பெருசு... உயிர் போற அளவுக்கு, துப்பாக்கி எடுத்து சுட்டுக்குற அளவுக்கு... ரத்தம் கொட்ற அளவுக்கு... அப்புறம்... க்ளைமாக்ஸ்ல..." கெளதம் மேனன் ஸ்டைல்ல இது தான் " அச்சம்என்பது மடமையடா"  கதை. 

தமிழ் சினிமாவில் அதிகம் முயற்சிக்காத, எடுத்த முயற்சிகள் அதிகம் கைகொடுக்காத ஒரு ஜானர்  " ரோட் மூவிஸ்". அதைத் தான் கெளதம் தன் "AYM" யில் முயற்சித்திருக்காரு. கேயாஸ் தியரிபடி பார்த்தால், இப்படியான படத்தை இன்று கெளதம் இயக்குவதற்கும், 1700 களில் ஐரோப்பியர்கள், அமெரிக்காவில் கால் வைத்ததற்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.  ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...


பிழைப்புத்  தேடி அமெரிக்காவிற்கு வரும் ஐரோப்பியர்கள், வந்திறங்குவது அமெரிக்காவின்  கிழக்கு கடற்கரைப் பகுதி. ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவின் பல இடங்களைக் கண்டடைய வேண்டும் என்ற ஆசை . சுற்றிப் பார்க்கும் விருப்பம் ஒருபுறம் என்றால், ஆளற்ற நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். ஆனால்,  சாலை வசதிகள் இல்லாதது உட்பட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக அவர்களால் அதிகம் பயணிக்க முடியவில்லை. 

இதற்குத் தீர்வாக, ஆங்காங்கே " ட்ராவல் பனோராமா" ( TRAVEL PANORAMA ) குழுக்கள் தொடங்கப்படுகின்றன. இதில், அமெரிக்காவின் பிற பகுதிகளுக்குப் பயணித்தவர்கள் தங்களின் கதைகளை ஒரு நாடகம் போலாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ மக்களுக்கு சொல்லுவார்கள். இதன் மூலம் , பயண அனுபவத்தை அவர்கள் பெற்றனர். உலகளவில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட " ரோட் மூவிஸ்" ஜானரின் தொடக்கப் புள்ளி இது தான். 

சினிமாவைப் பொறுத்தவரை, ஆட்டோமொபைல் கண்டுபிடிப்புகள் மக்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியதும் "ரோட் மூவிஸ்" படங்களும் வரத் தொடங்கின. ஆரம்பக் காலகட்டத்தில் வந்த பெரும்பாலான " ரோட் மூவிஸ் " இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளையே பின்புலமாகக் கொண்டிருந்தது. 

சாப்ளினின் " கோல்ட் ரஷ்" ( GOLD RUSH)  :

சார்லி சாப்ளினின் " கோல்ட் ரஷ்" ஒரு முழுமையான ரோட் மூவியாக இல்லாவிட்டாலும் கூட, ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டதால், ரோட் மூவியின் ஆதியாக இதை சொல்லலாம். மண் வெட்டிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், பிழைக்க வழியில்லாமல் எங்கோ தொலைவில் இருக்கும் தங்கத்தைத் தேடி பயணிக்கும் சிலரின் கதை. " என்னை மறந்தாலும், என்னுடைய இந்தப் படத்தை மறந்துவிடாதீர்கள்" என்று சார்லி சாப்ளினே சொன்ன ஓர் திரைப்படம். 

ஈஸி ரைடர் ( EASY RIDER ) :

அமெரிக்காவை  பைக்கில் சுற்றிவரும் இருவரின் பயணக் கதை. 1960 களில் அமெரிக்காவில் அதிகம் ஊடுருவிய போதை வஸ்துக்கள், ஹிப்பி வாழ்க்கை கலாச்சாரம் என பல விஷயங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1969யில் வெளியான இப்படம் அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. 
அமெரிக்கத் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஜெர்மானிய, ப்ரெஞ்ச், ஆஸ்திரேலிய, ஸ்பானிஷ் என பலநாட்டிலும் " ரோட் மூவிஸ்" படங்கள் உருவாகத் தொடங்கின. சேகுவாரின் பயணக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்பானிஷில் எடுக்கப்பட்ட " மோட்டார் சைக்கிள் டைரிஸ்" படத்தைப் பார்த்து பயணம் கிளம்பியவர்கள் ஏராளம். 

இப்படி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெறும்  " ரோட் மூவிஸ் " இந்தியாவில் குறைந்த அளவே வந்திருக்கின்றன. ராம் கோபால் வர்மாவின் " ரோட்", இம்தியாஸ் அலியின் " ஹைவே" , ரன்பீர் கபூரின் " ஏ ஜவானி ஹாய் தீவானி" போன்ற படங்கள் பயணம் சார்ந்து வந்திருந்தாலும், அவை பயண உணர்வைத் தாண்டி காதல், த்ரில்லர் போன்ற உணர்வுகளையே அதிகம் பிரதிபலித்தன. 

இந்திய - ஆங்கில திரைப்படமாக உருவான "மிஸ்டர் & மிஸஸ். ஐயர்" படத்தை ஒரு  " ரோட் மூவியாக" கருத முடியும். இந்து, முஸ்லிம் கலவரத்தை ஒரு பயணத்தின் பின்னணியில் சொல்லியிருப்பார்கள். 

தென்னிந்தியாவில் வெற்றிகரமான "ரோட் மூவிஸ்" என்று சொன்னால் துல்கர் சல்மான் தான் நினைவுக்கு வருகிறார்.  பயணங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அவரின் " நீலாகாஷம், பச்சைக் கடல், சுவன்ன பூமி" , " சார்லி" மற்றும் "களி" திரைப்படங்கள் கேரளத்தில் தாறுமாறான வெற்றியை ஈட்டியன. அதே போன்று, ஃபஹத் பாசிலின் " நார்த் 24 காதம்" திரைப்படமும் மிகச் சரியான ஓர் " ரோட் மூவி". பொதுவாகவே, கேரள இளைஞர்கள் புல்லட், ஜீப் போன்ற வாகனங்கள் மீது காட்டும் ஆர்வமும், பயணங்கள் மீதான ஆசையும் இது போன்ற படங்களை அங்கு வெற்றி பெற வைக்கின்றன. 

Dulquer

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ... 1966யில் வெளியான " மத்ராஸ் டூ பாண்டிச்சேரி" திரைப்படம் ஒரு பேருந்து பயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் " ரோடு மூவி". ரஜினிகாந்தின் "கழுகு" திரைப்படம்... ஒரு பயணம், அதில் எதிர்கொள்ளும் பிரச்சினை என  உருவாகியிருக்கும். 

மெல்லிய உணர்வுகளை, இறை நம்பிக்கை மீதான யதார்த்த தத்துவங்களை பயணத்தின் வழி கடத்திய " அன்பே சிவம்" படமும் கூட ஒரு வகையில் " ரோடு மூவி" தான். சமீபத்தில் வெளியான விக்ரமின் " பத்து எண்றதுக்குள்ள" ஒரு பக்காவான " ரோட் மூவி". ஆனால், அதிலிருந்த சில கோளாறுகளால், ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போனது. 

அதுமட்டுமில்லாமல், மிஸ்கினின் "நந்தலாலா", ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த " காதல்னா சும்மா இல்ல", கார்த்தியின் "பையா", சித்தார்த்தின்  " உதயம் NH 4 " உட்பட சில " ரோட் மூவி" ஜானர் திரைப்படங்களை சொல்லலாம். ஆனால், இவையும் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான பயண உணர்வை கொடுத்தனவா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

இன்று காலம் மாறியிருக்கிறது. ரசனை மாறியிருக்கிறது. பொழுது போக்கிற்கு பார்க், பீச், சினிமா என மட்டுமே இருந்த தமிழ் இளைஞர்கள் இன்று பலரும் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். பயணம் மீதான ஆர்வம் அதிகப்பட்டிருக்கிறது.  ஒரு நல்ல " ரோடு மூவியை" ஆதரிக்கக் காத்திருக்கிறார்கள். 

சிம்புவின் தண்டர்பேர்ட்  சீறுமா??? அல்லது பஞ்சர் ஆகி படுக்குமா??? என்பது மிக விரைவிலேயே தெரிந்துவிடும். 

                                                                                                                            - இரா. கலைச் செல்வன்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!