Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொல்லித் தீராத சுவாரஸ்யங்கள்! கமல் ஸ்பெஷல் #HBDKamal

கமல்

கமல்ஹாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது.

* கமலுக்கு சினிமா சென்டிமென்டுகளில் எப்போதுமே நம்பிக்கை கிடையாது. ‘ஹே ராம்’ படத்தின் தொடக்கக் காட்சியில், முதல் வசனமே இப்படித்தான் இருக்கும்... ‘சாகேத்ராம், திஸ் ஈஸ் பேக்-அப் டைம்’.

* நடிகர்கள் பெண் வேடமிட்டு திரையில் தோன்றுவது அவ்வப்போது நிகழக்கூடியதுதான். அவையெல்லாம் ஒரு சில காட்சிகள்தான் இருக்கும். ஆனால், கமல்ஹாசன்தான், படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில், தான் குருகுலவாசம் செய்த அவ்வை டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவின் மேல் கொண்ட பற்றினாலும், குருவின் மேல் கொண்ட பக்தியினாலும், தனது படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்றே பெயர் வைத்தார்.

* காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். உடற்பயிற்சி செய்வதற்கு எப்போதும் தவறுவதே இல்லை. காலை உணவு இட்லி, தோசை சாப்பிடுவார். பிரட் டோஸ்ட், ஆஃபாயில், முட்டை, காபி, டீ, சாப்பிடுவதில்லை.

* கேரளாவின் சிவப்பு அரிசி சாதத்தை விரும்பி சாப்பிடுவார். நான்-வெஜ்ஜில் கமலுக்கு மிகவும் பிடித்தது மீன். அதுவும் கேரளாவில் கிடைக்கும் மீன் என்றால், ரொம்பவே இஷ்டம்.

* எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைத்து இருக்கிறார் ‘குறும்புக்காரா...’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்துக் கொண்டாராம்.

* கமலுக்கு திரைப்படங்களைப் பார்ப்பதை விட அதீத ஆர்வம் புத்தகங்களை வாசிப்பதில் உண்டு. இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு வருவார். அதேபோல் திரைப்படத்துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

* ‘ரஜினியும் நானும் கிளாஸ்மெட் மாதிரி. இன்னும் சொல்லப் போனால், ஒரே பெஞ்ச்மெட் கே.பாலசந்தர் என்கிற பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற பாசம் எங்களிடையே உண்டு. எனினும், கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி ஆரோக்கியமான போட்டியும் உண்டு’ என்று கூறுவர்.

* பேசும் சினிமா வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார். அந்தப் படம், ‘பேசும்படம்’. படம் பேசியது.

* சினிமாவில் பல நல்ல திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்த பெருமை அவருக்குண்டு. சுரேஷ்கிருஷ்ணாவை ‘சத்யா’ படத்தின் மூலம் இயக்குநராக்கினார். சத்யராஜ், நாசர், சந்தானபாரதி, கரண், டெல்லிகணேஷ் போன்றவர்களெல்லாம், கமலின் படங்களில் நடிப்பதையே பெருமையாகக் கொண்டவர்கள்.

* கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும், ஆக மூன்று பேருமே தேசிய விருது பெற்றவர்கள்.

* ‘அந்த நாள்’ (வீணை பாலசந்தர்) படத்துக்குப் பிறகு பாடல்களே இல்லாத படம், ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. சத்யராஜ் நடித்த இந்தப் படம் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் கமல்.

* கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்கள் ‘சட்டம் என் கையில்’, ‘அபூர்வ சகோதர்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட். மெட்ராஸ் பாஷையை பேசும் விதத்தை நடிகர்  லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்துகொண்டாராம். மெட்ராஸ் பாஷையைப் பேசி நடிப்பதென்றால், இருவருமே திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல் நடிப்பார்கள்.

* கமலின் தந்தைக்கும் கமலுக்கும் உள்ள உறவு, தேர்ந்த இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பைப் போன்றதாகவே இருந்தது. இருவரும் பரஸ்பரம் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும், கமலின் உள்ளுணர்களை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு பேசுவார்.
* கமல்ஹாசன் திருவல்லிக்கேணி இந்து ஹை-ஸ்கூலில் படித்தவர்.

* களத்தூர் கண்ணம்மா, ஆனந்த ஜோதி, பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, வானம்பாடி ஆகிய 5 படங்களில் நடித்திருந்த நிலையில், கமலின் அப்பா சீனிவாசன், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களைப் பார்க்க வந்தார். ‘சாருஹாசன், சந்திரஹாசன் இரண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க. இவனைத்தான், என்ன பண்றதுன்னு தெரியலை. படிப்பை விட கலைத் துறையில ஆர்வமா இருக்கான். அதனால உங்கக்கிட்டே கொண்டு வந்துட்டேன்’ என்று கூறி விட்டுச் சென்றார்.

* டி.கே.எஸ். நாடகக் குழுவில் கிடைத்த பயிற்சியால்தான், கமல் உச்சஸ்தாயில் பாட வேண்டிய பாடல்களைக் கூட சர்வ அலட்சியமாக பாட அவரால் முடிந்தது.

* கமலுக்கு, தான் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்க வில்லையே என்ற ஏக்கம் உண்டு. அந்த ஏக்கமே அவரை சினிமாவின் அத்தனை தொழில் நுட்பங்களிலும் கைதேர்ந்தவராக உருவாக்கியது.

* நடிகனாக வேண்டும் என்ற ஆவலில் சினிமாத்துறைக்கு கமல் வரவில்லை, இயக்குநராக வேண்டும் என்ற ஆவலுடன் தான் திரைப்படத்துறைக்கு வந்தார். ஆனால், அவர் இயக்குநாரகி இருந்தால், நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால், சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே கிடைக்காமல் போயிருக்கும். இவரைப் போலவே காமிரா உமனாக வந்த சுஹாசினி நடிகையாகி சிறந்த நடிகை விருதையும் பெற்றார்.

* பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று தமிழ்ச் சினிமாவின் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய கமல், என்ன காரணத்தினாலோ, மகேந்திரனின் இயக்கத்தில் நடிக்கவில்லை.

* தமிழ் சினிமாவில் முதன்முதலில் முத்தக் காட்சியில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. படம்: சட்டம் என் கையில்.

* கமலின் தந்தையின் உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கமலும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்கின்றன. சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் ஆகிய மூவரும் சிதையின் அருகில் நிற்கிறார்கள். திரும்பிப் பார்த்த கமல், ‘அண்ணா நீங்களும் வாங்க’ என்று இருவரையும் அழைக்கிறார். அவர்கள், ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா. அவர்களையும் கொள்ளி வைக்கச் சொல்கிறார் கமல். கதறி துடித்தபடியே அவர்களும் கொள்ளி வைக்கிறார்கள். என் தந்தையை நேசித்த நீங்கள் என்றும் என் சகோதரர்களே’ என்று மவுனமாக கூறினார் கமல்.

* நாகேஷ், மனோரமா, வி.கே.ஆர். ஆகிய மூவரிடமும் மாறாத பாசம் கொண்டவர் கமல். தன்னுடைய தயாரிப்புகளில், தான் நடிக்கும் படங்களில் இவர்கள் இருப்பதை பெரிதும் விரும்புவார்.

* கே.பாலசந்தரின் படங்களில் ஏராளமாக கமல் நடித்தார். அவரது பட்டறையில் அவர் நடித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான பரிமாணங்களை கொண்டவை. ‘மை டியர் ராஸ்கல்’ என்று விளித்துத்தான் கே.பி. அவர்கள் அவருக்கு கடிதம் எழுதுவார்.

* கமல், டான்ஸ் மாஸ்டராக, பாடகராக, கதாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகனாக, வில்லனாக என்று பல அவதாரங்களை திரைப்படத்துறையில் எடுத்தவர். பிலிம்ஃபேர் விருதை 17 முறை வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்.

* எண்பதுகளின் மத்தியில் ‘மய்யம்’ என்ற பத்திரிகையும், இவரது நற்பணி இயக்கத்தினரால் தொடங்கி நடத்தப்பட்டது.

* எழுத்தாளர் சுஜாதா, சந்தானபாரதி, அனந்து, ஆர்.சி.சக்தி, ஆகியோர் கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். இவர்களிடம் கதை குறித்த விவாதங்கள், நவீன சினிமாவைப் பற்றிய விமர்சனங்களை காரசாரமாக எடுத்து வைப்பார்.

அனைத்தையும் அட்வான்ஸாக செய்யும் கமலுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்

இந்திய சினிமாவின் முக்கிய கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

-எஸ்.கதிரேசன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory