Published:Updated:

”இது இன்னொரு சுப்ரமணியபுரம்” - ‘எங்கிட்ட மோதாதே’ இசை வெளியீட்டு விழா!

Vikatan
”இது இன்னொரு சுப்ரமணியபுரம்” -  ‘எங்கிட்ட மோதாதே’ இசை வெளியீட்டு விழா!
”இது இன்னொரு சுப்ரமணியபுரம்” - ‘எங்கிட்ட மோதாதே’ இசை வெளியீட்டு விழா!

சினிமா போஸ்டர்களின் பின்புலத்திலிருக்கும் அரசியலை மையமாகக் கொண்டு, கூடவே ரஜினி-கமல் ரசிகர்கள் காம்பினேஷனில் 80களில் நடைபெறும் கதையாக உருவாகியிருக்கும் திரைப்படம் ’எங்கிட்ட மோதாதே’. எரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் கலர்லேப்பில் இன்று நடைபெற்றது. 

இவ்விழாவில் படத்தின் கதாநாயகர்கள் நட்ராஜ், ராஜாஜி, கதாநாயகிகள் சஞ்சிதா ஷெட்டி, பார்வதி மேனன், இயக்குனர் ராமு செல்லப்பா, யுகபாரதி, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோருடன் திரையுலகப் பிரபலங்களும் இடம்பெற்றிருந்தனர்.  

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, ‘ஒளிப்பதிவாளராக நட்ராஜை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். இந்தப் படத்தில் ரஜினி ரசிகராக, ஹீரோவாக அருமையாக நடித்திருக்கிறார். இருந்தாலும் அவங்கவங்க வேலையைப் பார்க்காதவங்களை எனக்குப் பிடிக்காது. ஆனா, சதுரங்க வேட்டை பார்த்துட்டு நட்ராஜ் நடிப்பை பார்த்து நான் வியந்துருக்கேன். நிறைய கஷ்டப்பட்டு மேல வந்துருக்கார். அதே போல ராம் என்னுடைய வெர்ஷன். வேலை செய்யத் தயங்காதவர். இந்தப் படம் அவருடைய பெயர் சொல்லும் படமாக அமையும்’ என்று அரங்கத்தைக் கலகலக்க வைத்தார். 

படத்தின் இயக்குனர் ராமு செல்லப்பா பேசும்போது, ‘இது என்னுடைய முதல் படம். நான் பாண்டிராஜ் சாரோட அசிஸ்டண்ட். எனக்கு மனகஷ்டம்னாலும், பணக்கஷ்டம்னாலும் அவர்கிட்டதான் போய் நிப்பேன். அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். தனியா படம் பண்ண ஆரம்பிச்சப்போ, ஊர்ப்பக்கம் சினிமாவுக்கு கட் அவுட் பேனர் வரைய ஆர்ட்டிஸ்களோட வாழ்க்கையை 80களில் நடக்கற கதையா, படமா எடுக்கணும்னு தோணுச்சு. 1987ல் நடக்கற கதைங்கறதால  எந்த இடத்திலும் லாஜிக் மிஸ் ஆய்டக்கூடாதுனு ரொம்பவே மெனக்கெட்டு ஷூட் பண்ணியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் கண்டிப்பா வெற்றியடையும்’ என்று நன்றியைப் பகிர்ந்து கொண்டார். 

ஹீரோ நட்ராஜ், ‘ராமு என்கிட்ட வந்து ஸ்க்ரிப்ட் சொன்னப்போ ‘என்னப்பா படிச்சுட்டு இருக்கீங்களா?’னு கேட்டேன். அவ்ளோ சின்னப்பையனா இருந்தார். ஆனால், அவர் கதை சொல்லச் சொல்ல ரொம்ப புடிச்சு போச்சு. ஒரு கட்-அவுட்க்கு பின்னாடி எவ்ளோ அரசியல் இருக்குனு ராமு செல்லப்பா மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன். யுகபாரதி பாடல்வரிகளில், நானும் இந்தப் படத்தில் ஒரு பாட்டு பாடியிருக்கேன். அதை அழகான பாடலாக உருவாக்கிக் கொடுத்த இசையமைப்பாளர் நடராஜன் சங்கரனுக்கு நன்றி. இந்தப் படம் நிச்சயமா ஒரு அருமையான கதைக்களம் கொண்டதா உங்களை மகிழ்விக்கும்’ என்று பேசியதுடன், அவர் பாடிய பாடலையும் இரண்டு வரிகள் பாடிக் காட்டினார். 

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி, ‘எல்லாரும் என்னை ஜீன்ஸ், டிஷர்ட்லதான் இதுவரை பார்த்துருக்காங்க. ஆனால், இந்தப் படத்தில் என்னை அப்படியே மாத்தி தாவணி,பாவடையில் வித்தியாசமான லுக்கில் காமிச்சதுக்காகவே இயக்குனர் ராமு செல்லப்பாவிற்கு நன்றி’ என்று தெரிவித்தார்.  மற்றொரு ஹீரோயின் பார்வதி மேனன், ‘படத்தில் வேலை பார்த்த எல்லோருமே கிட்டதட்ட ஒரு குடும்பம் மாதிரி மாறிட்டோம். அந்தளவிற்கு ஈடுபாட்டோட வேலை செய்திருக்கோம். அந்த உழைப்புதான் படம் ரொம்ப நல்லா வந்துருக்க காரணம். ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன்’ என்று நெகிழ்ந்தார். 

’இது இன்னொரு சுப்ரமணியபுரம்’ என்று கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன் விழா மேடையில் தெரிவித்தது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிறடித்துள்ளது. டிசம்பர் முதல்வாரத்தில் ‘எங்கிட்ட மோதாதே’ வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

-பா.விஜயலட்சுமி

Vikatan