‘எங்கே இருந்துய்யா இப்படி டைட்டில் பிடிக்கிறீங்க!’ - ரஜினி ரசித்த டைட்டில்

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளரான அமுதேஷ்வர்  இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. இந்த படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். நடிகை ஆஷ்னா ஜவேரி ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபு, ஊர்வசி, பூஜா குமார், சந்தானபாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், கமல்ஹாசன் கௌரவ வேடத்திலும் நடிக்கிறார்கள். இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
 
அதில் பேசிய இயக்குநர் அமுதேஷ்வர், “இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு குடியேறியவர்கள் தான் படத்தின் கதாநாயகனும், நாயகியும். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறவர்கள். இவர்களுக்குள் நட்பு, காதல், சண்டை எல்லாமும் நடக்கும். இந்த படத்தில் பிரபு ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார். அதை மையப்படுத்தி தான் படத்திற்கு மீன் குழம்பும் மண் பானையும்னு டைட்டில் வெச்சேன். முதலில் நான் இந்த கதையை வேறு சில நடிகர்களுக்கு சொல்லியிருந்தேன். பிறகு ஒரு நாள் நடிகர் ஜெயராமின் பையனிடம் இந்த கதையை சொல்ல போனேன். என் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக செய்யப்பட்டது போல் இருந்தார். ஒரு இளம் பையனுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்குற அழகான விஷயங்களையும் இந்த படத்தில் நான் வைத்திருந்ததால் இவர் தான் என் படத்திற்கு சரியான ஆள்னு முடிவு பண்ணுனேன். இந்த படத்திற்கு முன்பே காளிதாஸ் ஒரு சாக்லேட் விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த ஒரு விளம்பரத்திலேயே இவருக்கு பல ரசிகைகள் உருவாகிட்டாங்க. அதை நாங்க சில கல்லூரிகளில் ஷூட்டிங் எடுக்கும் போது பார்த்தோம். 

விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜாகுமார் இந்த படத்தில் டான் ரோல் பண்றாங்க. படத்தில் அவங்க பெயர் மாலாக்கா. ஜெயராம் மாதிரி காளிதாஸும் நல்லா மிமிக்ரி பண்ணுவார். அதனால அதையும் படத்தில் அங்கஅங்க சேர்த்திருக்கோம். இந்த படம் மூலமா நாங்க சொல்ல போறது என்னான்னா, எந்த சண்டை வந்தாலும் ஈகோ பார்க்காமா சாரி சொல்லிடுங்க, சந்தோஷமா இருங்க. இதை தான் நாங்க படத்தில் சொல்லியிருக்கோம்.

படம் முழுக்க மலேசியாவில் தான் நடக்கும். நாங்க மலேசியாவில் ஷூட்டிங் எடுக்கும் போது தான் ரஜினி சாரும் கபாலி படத்தோட ஷூட்டிங்கிற்காக மலேசியா வந்திருந்தார். நாங்க எல்லாரும் போய் அவரை பார்க்கும் போது படத்தோட பெயர் என்னனு கேட்டார். நாங்க சொன்னதும், ‘எங்கய்யா இருந்து இந்த மாதிரி டைட்டில்லாம் பிடிக்கிறீங்க. ரொம்ப வித்தியாசமா, சூப்பரா இருக்கு’னு ரொம்ப ரசிச்சு சொன்னார்.” என்று பூரிக்கிறார் அமுதேஷ்வர்.

மா.பாண்டியராஜன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!