Published:Updated:

அஞ்ஞாடி, உய்யலாலோ இதெல்லாம் கண்ணுல காட்டவே இல்லையே! #NevermissHitssongs

Vikatan
அஞ்ஞாடி, உய்யலாலோ இதெல்லாம் கண்ணுல காட்டவே இல்லையே! #NevermissHitssongs
அஞ்ஞாடி, உய்யலாலோ இதெல்லாம் கண்ணுல காட்டவே இல்லையே! #NevermissHitssongs

சில பாட்டுகள் பட ரிலீஸுக்கு முன்பே நம்மைப் போட்டுத் தாக்கும். 'என்னா வாய்ஸ்ய்யா?', 'அந்த ரெண்டாவது நிமிஷத்துல வர்ற பியானோ இசை செம்ம' என சிலாகித்துக் கொண்டாடுவோம். 'இவ்ளோ ரசிச்ச பாட்டு படத்துல எப்படி இருக்குமோ?' என ஆர்வத்தோடு போய் உட்கார்ந்தால்... ப்ச்! டைட்டில்கார்டு முதல் எண்ட்கார்டு வரை அந்தப் பாட்டு வரவே வராது. அப்படி ஆல்பத்தில் நம் மனம் கவர்ந்து, படத்தில் இடம்பெறாமல் போன சில பாடல்களின் கலெக்‌ஷன் இது.

மாலைநேரம் - ஆயிரத்தில் ஒருவன் :

நீண்ட நாட்கள் கழித்து தமிழில் வெளிவந்த ஃபேன்டஸி படமான செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் இடம்பெற்ற பாடல் இது. ஆண்ட்ரியாவின் ஹஸ்கி வாய்ஸில் 'இது சோகம். ஆனால் ஒரு சுகம், நெஞ்சின் உள்ளே பரவிடும்... நாம் பழகிய காலம் பரவசம் அன்பே' என வைரமுத்துவின் காதல் ஜூஸ் வழியும் வரிகளில் கேட்பவர்களை மெஸ்மரைஸ் செய்த பாடல். ஆனால் படத்தில் ஏனோ இடம்பெறவில்லை. ஜி.வி-யின் மிஸ் பண்ணக் கூடாத அந்த மேஜிக் கீழே:

ஒரு மலையோரம் - அவன் இவன் :

பச்சைப் பசேல் மலை, அதற்குக் கீழ் ஒரு ஓலைக்குடிசை. பிடித்தவருடன் ஜம்மென அங்கே ஒரு வாழ்க்கை. பெரும்பான்மையானவர்களின் கனவு இது. அதை அப்படியே பேனா வழி வார்த்திருந்தார் நா.முத்துக்குமார். விஜய் யேசுதாஸின் மேன்லி குரலும், சூப்பர் சிங்கர் சுட்டிகளின் குரலும் யுவன் இசையும் பாட்டை திவ்ய லெவலுக்கு எடுத்துச் சென்றன. அந்த ஜிலீர் பாட்டை கேட்க க்ளிக் பண்ணி காதைக் கொடுங்க!

புத்தம் புது பூ பூத்ததோ - தளபதி :

சந்தேகமே இல்லை. 'தளபதி' இளையராஜாவின் பெஸ்ட் ஆல்பங்களுள் ஒன்று. 'சுந்தரி கண்ணால், 'காட்டுக்குயிலு', 'ராக்கம்மா', 'சின்னத்தாயவள்' என ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகம். பலரின் கவனத்திற்கும் வராத ஒரு சூப்பர் பாட்டும் உண்டு. 'புத்தம் புது பூ பூத்ததோ' எனத் தொடங்கும் அந்தப் பாடலை பாடியது யேசுதாஸும் ஜானகியும். கேளுங்க. கண்டிப்பா பிடிக்கும்.

என்னன்ன செய்தோம் இங்கு - மயக்கம் என்ன :

செல்வராகவன் படத்தில் ஒரு பக்திப்பாடல். அதைவிட பெரிய சர்ப்ரைஸ் இதை எழுதியதும் செல்வாதான். ஒவ்வொரு வரியிலும் நம்பிக்கை துளிர்க்கும் இந்தப் பாடலை தன் குரலால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார் ஹரீஷ் ராகவேந்திரா. மனசு சரியில்லாதப்போ இந்தப் பாட்டை கேட்டுப் பாருங்க ஜி!

வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி - கற்றது தமிழ் :

யுவனும் ராமும் இணைந்தால் அங்கே மேஜிகல் ஆல்பம் நிச்சயம். இந்தக் கூட்டணியின் முதல் மேஜிக்கான கற்றது தமிழில் மற்ற பாடல்களுக்குக் கொஞ்சமும் சளைக்காதது 'வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி' பாடல். வெறுப்பு, சலிப்பு என ஆத்திரமாய் திரியும் ஒருவனின் 'படபட' குரல் இது. சங்கர் மகாதேவனின் துடிப்பான குரலில் எகிறும் இந்தப் பாட்டு ஏனோ படத்தில் இடம்பெறவில்லை. 

மாலை பொன்மாலை - உதயம்

'யாரோ இவன்' மெலடிக்கு எந்த விதத்திலும் குறையாத மெலடி இது. ஒரு சின்ன கேப்பிற்கு பின் என்ட்ரியான எஸ்.பி.பி சரண் வித்தையை மொத்தமாக இறக்கிய பாடல். 'உள்நாக்கின் தேன் துளி', 'வெட்டவெளி ஒற்றைப் பூ' என உவமைகள் விளையாடிய பாட்டு. படத்தில் இருந்திருந்தால் ரசனையான காட்சிகளுக்கு கியாரன்டியாய் இருந்திருக்கும்.

அஞ்ஞாடி - ராஜா ராணி

ரிலீஸாவதற்கு முன்பே எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். அதற்கு 'அஞ்ஞாடி' பாடலும் ஒரு காரணம். சக்திஶ்ரீ கோபாலனின் வாஞ்சைக் குரலில் அமைந்த பெப்பியான பாடல். 'எத்தனை நாளைக்குத்தான் பசங்களே வர்ணிச்சு பாடுறது' என பா.விஜய் நினைத்தார் போல. அதை லபக்கென பிடித்து துள்ளல் இசையில் பாட்டாக்கிவிட்டார் ஜி.வி. கேட்டுப் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும்.

உய்யலாலோ - தாம்தூம் :

மெலடிதான் ஹாரிஸின் கோட்டை. கோட்டைச் சுவரை அவர் அடிக்கடி தாண்டுவதில்லை. அப்படித் தாண்டினால் அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட். தாம்தூமில் வெஸ்டர்ன், மெலடி எனக் கலந்துகட்டி அடித்தவர் 'உய்யலாலோ' பாட்டில் தகிட தகிட என அதிரவிட்டார். கைலாஷ் கேர், சுஜாதா குரலில் குதூகலமான துள்ளல் இசையில் உருவான பாட்டு அது. கேட்டுத்தான் பாருங்களேன்!

ஒரு மாலை நேரம் - நான் மகான் அல்ல :

யுவனின் மற்றுமொரு அழகான மேஜிக். ஜாவேத் அலி, தான்வி ஷா குரலில் நா.முத்துக்குமார் பேனாவில் உருவான மெல்லிய டூயட். அதிலும் நடுநடுவே வரும் ஜாவேத்தின் ஹம்மிங் ஒன்ஸ்மோர் ரகம். மற்ற பாடல்களைப் போலவே இதுவும் ஹிட்டடித்தாலும் படத்தில் ஏனோ இடம்பெறவில்லை.

சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை :

படத்தைப் பற்றி எழுத பக்கம் பக்கமாக சரக்கு இருக்கிறது. பாடல்கள் பற்றி? இருக்கு சாரே! சத்யராஜுக்கு இளையராஜா கொடுத்த பெஸ்ட் மெலடிகளில் ஒன்று இது. மனோ - ஸ்வர்ணலதா காம்பினேஷனே போதுமே பாட்டு எப்படி எனச் சொல்ல. கேளுங்கள். கண்டிப்பாய் ஸ்வர்ணலதாவை மிஸ் செய்வீர்கள்.

பனிக்காற்றே - ரன் :

'கில்லி'க்கு முன்னால் வரை 'ரன்' தான் வித்யாசாகரின் பெஸ்ட் ஆல்பம். படத்தின் பின்னணி இசையில் அடிக்கடி ஒரு ஹம்மிங் வருமே. அது 'பனிக்காற்றே' பாடல்தான். ஹம்மிங்கே அசத்தினால் பாட்டு மட்டும் சுமாராகவா இருக்கும்? சூப்பர் மெலடி. தாமரையின் வரிகளில் காதல் சிக்ஸர். ஆனால் பின்னணி இசையைச் சேர்த்தவர்கள் பாட்டை மட்டும் விட்டுவிட்டார்கள்.

ஒரு நாளில் - புதுப்பேட்டை :

யுவன், தனுஷ், செல்வராகவன் ஆகியோரையும் தாண்டி ஒரு சூப்பர்ஸ்டார் இருக்கிறார் 'புதுப்பேட்டை'யில். நா.முத்துக்குமார். 'எங்க ஏரியா', 'வர்றீயா' என வரிகளில் விருந்து வைத்தவர் 'ஒரு நாளில்' பாட்டில் ஊட்டியது ஆயிரம் டம்ளர் சத்து டானிக். 'எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்? அத்தனைக் கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்' - இது ஒரு பருக்கை உதாரணம். மிஸ் யூ சார்!

-நித்திஷ்

Vikatan