Published:Updated:

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அதிரடி நீக்கம்! அப்படி என்ன சொல்லியிருந்தார் விஷால்?

Vikatan
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அதிரடி நீக்கம்! அப்படி என்ன சொல்லியிருந்தார் விஷால்?
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அதிரடி நீக்கம்! அப்படி என்ன சொல்லியிருந்தார் விஷால்?

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் நடிகரும், தென்னிந்திய நடிகர்சங்க பொதுச்செயலாளர் விஷால்.  அதற்கான அறிக்கையை தயாரிப்பளர் சங்கம் வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், “தயாரிப்பாளர் விஷால், கடந்த ஆனந்த விகடன் வார இதழில் அளித்த பேட்டி, சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது. மேலும் இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்துகொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 2.09.2016-அன்று தயாரிப்பாளர் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. 

அதற்கு அவர் அளித்த பதில், 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில், திருப்தியாக அமையாத பட்சத்தில், செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி, சங்கவிதி எண் 14-D யில் உள்ளபடி,  விஷால் பிலிம் பேக்டரி நிறுவன உரிமையாளர் விஷால், சங்க அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து இன்று (14-11-2016) முதல் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

விஷால் தரப்பில், இந்த நீக்கம் குறித்து தொடர்பு கொண்டோம். நீக்கம் குறித்தான  அதிகாரப்பூர்வமான அறிவிப்போ, கடிதமோ தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்கள். 

17.08.2016 அன்று வெளியான ஆனந்த விகடன் இதழில், விஷால்  அளித்துள்ள பேட்டியில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி கூறியுள்ளதாவது ;. 

‘‘நிறைய சினிமாக்கள்... அதில் பலரும் லாபம் அடைஞ்சாலும் தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடைகிறார். அதுக்கு என்ன காரணம்?’’

‘‘அதுக்கு தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்கமும்தான் காரணம். ஓர் இழப்பு எப்படி வருது, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம், அவசியம் இல்லாத செலவுகளை எப்படித் தவிர்க்கலாம், திருட்டு விசிடி-யினால் எவ்வளவு இழப்பு, திருட்டு விசிடி விக்கிறவங்களை என்ன பண்ணலாம், வருமானம் வரக்கூடிய இடங்கள் எவை, மும்பையில் ரிலீஸான 15-வது நாளே ஒரு படத்தின் டிவிடி-யை அதிகாரபூர்வமா ரிலீஸ் பண்ணுவதுபோல நாம பண்ணலாமா, ரிலீஸ் ஆன ஒரே மாசத்துல சிங்கிள் சாட்டிலைட் டெலிகாஸ்ட் ரைட்ஸ் கொடுப்பதுபோல நாம பண்ணலாமா, கமல் சார் சொன்ன மாதிரி முதல் நாளோ, 10-வது நாளோ, படத்தை டி.டி.ஹெச்-க்குக் கொடுத்து வருமானம் பண்ணலாமா, நெட் ஃபிளிக்ஸ், ஹீரோ டாக்கீஸ் போன்ற ஆன்லைன்கள்ல நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணலாமா...

இப்படி எந்த நல்ல விஷயம் பேசி முடிவுபண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி. தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்.’’

‘‘அப்ப நடிகர் சங்கம் மாதிரி வரும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிடுவீங்களா?’’

‘‘தற்போதைய நிர்வாகத்தை நாங்க 100 சதவிகிதம் மதிக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவுமே நடக்கலை. எப்படி நடிகர் சங்கத்தைக் கையில எடுத்துக்கவேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிடுற சூழல் இப்ப வந்திருக்கு. இது பதவிக்காக அல்ல. மறுபடியும் இளைஞர்கள் திரளணும்கிற அவசியமும் இல்லை. ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் மனசுக்குள்ளயும் இந்த எதிர்ப்பு உணர்வு இருக்கு. அது ஜனவரி மாசம் நிச்சயமா வெடிக்கும். அது 100 சதவிகிதம் உறுதி. ஏன்னா, தமிழ் சினிமா எங்க தாய்; சோறு போடுற தெய்வம். அதைக் காப்பாத்தணும்னா, எங்களுக்கு வேறு வழி இல்லை.’’

-பி.எஸ்- 

Vikatan