சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை - என்னம்மா இப்படிப் பின்றீங்களேம்மா! #ladygetup

சிவாஜி முதல் சிவகார்த்திகேயன் வரை பெண் வேடத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கியவர்களின்  ஜிஃப் லிஸ்ட் இதோ!

குங்குமம் :

நடிகர் சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் போலீஸை சந்திப்பது போன்று ஒரு காட்சி இடம் பெறும். அச்சு அசல் பெண் போலவே இவரது தோற்றம் இருக்கும். புடவை அணிந்து போலீஸிடம் நகைச்சுவையாகப் பேசும் காட்சி.

காதல் வாகனம் :

எம்.ஜி.ஆர் 'என்ன மேன்' என்ற பாடலுக்கு இந்தப் படத்தில் மாடர்ன் உடை அணிந்து அசத்தலான நடனம் ஆடுவார். குட்டைப் பாவாடை அணிந்து இவர் அடிக்கும் லூட்டி, பார்ப்பவர்களைச் சந்தேகத்தில் ஆழ்த்தும். ஏனென்றால் இவர் கெட் அப் அப்படி!

அவ்வை சண்முகி :

உலக நாயகன் கமல்ஹாசன் மாமி வேடத்தில் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகள்தான் படத்தின் பலம். திரையில் சண்முகமாகவும் சண்முகியாகவும் அசத்தும் ரோல்.

பணக்காரன் :

ரஜினிகாந்த் இந்தப் படத்தில் 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' என்ற பாடலில் சிவப்பு நிறப் புடவை அணிந்து வருவார். வந்தது மட்டுமின்றி பாடலுக்கு நடனமும் ஆடுவார்.

மாமன் மகள் :

இத்திரைப்படத்தில் கதாநாயகன் சத்யராஜ், மீனாவைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதற்காகப் பெண் வேடம் அணியும் கட்டாயம் ஏற்படும். அதற்காக சத்யராஜ் கறுப்புப் புடவை அணிந்து மீனா முன் வந்து நிற்க மீனாவே ஆச்சரியத்துடன் பார்க்க, கவுண்டமணியுடன் கலந்துகட்டி நடக்கும் அலப்பறைதான் இந்தக் கலகல காட்சி.

ப்ரியமானவளே :

இந்தப் படத்தில் விஜய் ''ஜூன் ஜூலை மாதத்தில்'' என்னும் பாடலில் பெண் வேடம் அணிந்து சிம்ரனிடம் ''ஹாய்'' என்று கூறி அவரோடு ரொமான்டிக் ஸ்டெப் ஒன்று போட்டு ரசிகர்ளைப் பார்த்து அழகாகக் கண் அடிப்பார்.

கந்தசாமி :

இப்படத்தின் ஹீரோ விக்ரம். மயில் சாமி, சார்லி ஆகியோருக்குப் பாடம் கற்பிக்க பெண் வேடம் அணிந்து வருவார். பார்ப்பதற்கு அப்படியே இந்தி நடிகை போலவே இருப்பார். ஆனால் ரொமான்ட்டிக்காக வந்து சண்டையில் வெளுத்துக் கட்டுவார். 

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் :

தனுஷ் ஹீரோயினை பாதுகாப்பாக கூட்டிச்சென்று அவரின் வீட்டில் விடுவதுதான் கதை. இதில் ஒரு காட்சியில் போலீஸிடமிருந்து தப்பி செல்வதற்காக ஸ்கூல் படிக்கும் மாணவிகளுடன் இவரும் பெண் போல கெட் அப் மாற்றி அவர்களோடு சேர்ந்து போய் விடுவார்.

அவன் இவன் :

விஷாலும் ஆர்யாவும் இத்திரைப்படத்தின் ஹீரோக்கள். இதில் விஷாலின் அறிமுகக் காட்சியான 'டியா டியா டோலு' என்னும் பாடலில் பெண் வேடம் அணிந்து செம ஆட்டம் போடுவார்.

ஆணழகன் : 

இப்படத்தில் ப்ரசாந்த் லேடி கெட் அப்பில் வருவார். அப்போது வந்த திரைப்படங்களில் அப்படி ஒரு மேக் அப்பை யாரும் கண்டதில்லை. அழகானப் பெண் தோற்றத்தில் பார்ப்பவர்களை மயக்கும் வண்ணம் படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார். அருமையான பரதமும் உண்டு.

ரெமோ :

 

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் லேடி கெட்டப் இவருடையதுதான். மீசை பியூட்டி மொழு மொழு பேபியாக வந்தபோது ஆச்சரியப்பட்டுத்தான் போனார்கள் ரசிகர்கள்.

- தார்மிக் லீ  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!